சென்னை: வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு தெற்கு ஒடிசா மற்றும் வட தெலங்கான பகுதியில் கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் நீடித்து இருந்த வறண்ட வானிலை குறையத் தொங்கியுள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வட தமிழகத்தில் செங்கல்பட்டு, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மற்றும் கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.
இந்நிலையில், இன்று முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று முதல் 6ம் தேதி வரை மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.