சென்னை: தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி (எ) அரை சட்டை பாலாஜி (24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் மனைவி விக்டோரியாவுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (25) என்பவர், விக்டோரியாவை காதலித்துள்ளார்.
இதுபற்றி அறிந்த பாலாஜி, தங்கராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 2021 ஜூலை 10ம் தேதி பாலாஜி தனது கூட்டாளிகள் சங்கர் (26), பிரேம்குமார் (20), சியாம்பிரகாஷ் (23), சங்கரின் மனைவி முனிஷா (23) ஆகியோருடன் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த தங்கராஜை அருகில் இருந்த குடியிருப்பு மக்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி பாலாஜி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
காவல்துறை தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எ.கோவிந்தராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், நேரடி சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் பாலாஜி, சங்கர், பிரேம்குமார், சியாம்பிரகாஷ் மற்றும் குற்ற செயலுக்கு தூண்டுதலாக இருந்த முனிஷா ஆகியோருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், கூட்டு சதிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.