ரிஷிகேஷ்: ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றிய இளம்பெண் கொலை வழக்கில் பாஜக மாஜி அமைச்சரின் மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரகாண்ட் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை உலுக்கிய அங்கிதா பண்டாரி கொலை வழக்கில், முன்னாள் பாஜக அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா உட்பட மூவர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள வனந்தரா ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா என்ற இளம்பெண்ணை, கடந்த 2022 செப்டம்பர் 18 அன்று, முன்னாள் பாஜக அமைச்சரின் மகனான புல்கித் ஆர்யா, அவரது மேலாளர் சவுரப் பாஸ்கர் மற்றும் உதவியாளர் அங்கித் குப்தா ஆகியோர் சேர்ந்து கொன்றனர்.
அதாவது ஓட்டலில் பணியாற்றிய அங்கிதாவை, விருந்தினர்கள் சிலருக்கு ‘சிறப்பு சேவை’ செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் அவரை சில்லா கால்வாயில் தள்ளி கொலை செய்ததாகவும் காவல்துறை தெரிவித்தது. தொடர்ந்து செப்டம்பர் 24 அன்று அங்கிதாவின் உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கில், முன்னாள் பாஜக அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு தொடர்பு இருந்ததால் ெபரும் பரபரப்பாக பேசப்பட்டது. கொலை செய்யப்பட்ட அங்கிதாவின் பெற்றோர் மற்றும் மக்கள், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கோரி போராட்டம் நடத்தினர்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 500 பக்க குற்றப்பத்திரிகையில் 47 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். கொலையாளிகள் மீது ஆதாரங்களை அழித்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் மனித கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று பேருக்கும் தற்போது நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கு பெண்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் செல்வாக்கு குறித்த விவாதங்களை உருவாக்கிய நிலையில், புல்கித்தின் தந்தை மற்றும் சகோதரர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.