சென்னை: முன்விரோதம் காரணமாக கல்லால் அடித்து தொழிலாளியை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது. வியாசர்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி கலைவாணன். இவரை, பி.வி.காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் முன்விரோதம் காரணமாக, தனது நண்பர் ராஜ் என்பவருடன் சேர்ந்து 2017ம் ஆண்டு செப்டம்பரில் கல் மற்றும் மூங்கில் கட்டையால் கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைவாணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக, அவரது சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில் எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணமூர்த்தி, ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கு.புவனேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மற்றொரு சம்பவம்: வேளச்சேரி, சசிநகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்த பரசுராமன் (48), கடந்த 2018ம் ஆண்டு மேற்கு மாம்பலம், மாணிக்கம் தெரு பகுதியில் நின்றுகொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த கண்ணகிநகர் பகுதியை சேர்ந்த ஜெமினி (எ) முகமது அசிம் (26), மது அருந்த பரசுராமனிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த முகமது அசிம், மறைத்து வைத்திருந்த கத்தியால் பரசுராமனை குத்தி கொலை செய்தார்.
இதையடுத்து, அசோக் நகர் போலீசார் முகமது அசிமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிங்கார வேலன் மாளிகையில் உள்ள சிறப்பு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வழக்கின் விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜெமினி (எ) முகமது அசிமிற்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பாக புலானாய்வு மேற்கொண்ட காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.