*கணவருக்கு 3 ஆண்டு சிறை
குளச்சல் : கடியபட்டணத்தில் நகைக்காக சிறுவனை அடித்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜாண் ரிச்சர்டு. இவர் சவுதி அரேபியாவில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா(28). இத்தம்பதியின் மகன் ஜோகன் ரிஷி(4). கடந்த 2023 ஜனவரி 21 ம் தேதி வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தான்.
தாய் சகாய ரிஷி ஜோகன் ரிஷியை சாப்பிடுவதற்காக அழைக்க சென்றார். அப்போது சிறுவனை காணவில்லை. இதனால் பீதியடைந்த சகாய சில்ஜா அருகில் உறவினர் வீடுகள் உள்பட அப்பகுதி முழுவதும் தேடினார். தகவலறிந்த உறவினர்களும் ஊர் முழுவதும் தேடினர். ஆனால் சிறுவன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாயமான சிறுவன் 1 பவுன் தங்க சங்கிலி, அரை பவுன் கை காப்பு மற்றும் வெள்ளியில் அரைஞான் கயிறு அணிந்திருந்தான். நகைக்காக மர்ம நபர்கள் யாராவது கடத்தி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் போலீசாருக்கும், ஊர் மக்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா (35)என்ற பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
கணவர் சரோபினையும் (37) போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது பாத்திமா முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் சிறுவன் அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு சிறுவனை கொன்று அவரது பீரோவில் மறைத்து வைத்தது தெரிய வந்தது. உடனே போலீசார் பீரோவை திறந்து சிறுவனின் உடலை மீட்டனர். கழுத்தில் காயம் இருந்தது.
இந்த வழக்கில் பாத்திமா மற்றும் அவரது கணவர் சகாய சரோபின் கைது செய்யப்பட்டனர். தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட பாத்திமா பின்னர் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை கடந்த இரண்டரை ஆண்டுகளாக பத்மநாபபுரம் கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ராமச்சந்திரன் பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அவரது கணவர் சகாய சரோபினுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்,ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு வக்கீல் ஜெகதேவ் ஆஜராகி வாதாடினார்.