நன்றி குங்குமம் தோழி
உலக வங்கியியலில் அந்நியச் செலாவணி வணிகம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இந்திய வங்கிகளில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த கருவூலச் செயல்பாடுகள் மூலம் இந்திய வாடிக்கையாளர்கள், பெருநிறுவனங்கள், அயலகக் குடியிருப்பாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள். தனிநபர்கள் ஆகியோருக்குப் பயனளிக்கும் வகையில் இந்திய வங்கிகளின் சர்வதேச வங்கிச் சேவைகள் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி நடைபெறுகின்றன. இந்தியாவில் அந்நிய செலாவணி வணிகத்தை வங்கிகளும், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் நடத்துவதற்கான விதிகளை உருவாக்குதல், பட்டியலிடுதல், வணிக நேர நிர்ணயம், பரிவர்த்தனைக் கட்டணங்கள், மேலும் தொடர்புடைய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டவரைவுகள் ஆகியவற்றை அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்துகின்றது. இத்தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தின் (www.org.in) மூலம் அறியலாம்.
வெளிநாட்டு நாணயக் கடன்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான வசதிகள், வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் மற்றும் வெளிநாட்டிற்குப் பணம் செலுத்துதல், முன்னரே விற்பனை அல்லது கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுவதற்கான உத்தரவாதங்கள் ஆகியவை வங்கிகளின் மூலம் நடத்தப்படுகின்றன. இதற்கான தொழில்நுட்ப வசதிகளை வங்கிகள் பெற்றுள்ளன.
இந்திய ரூபாயை பெற்றுக்கொண்டு வெளிநாட்டு நாணயம் வழங்குவதும், வெளிநாட்டு நாணயத்தை ஒப்படைத்தவுடன் அதற்கு ஈடாக உள்நாட்டு நாணயத்தை உரியவருக்கு வழங்குவதும் வங்கிகளின் தினசரிப் பணிகளாகும். அந்நியச் செலாவணி சந்தை என்பது ஒரு நாட்டின் நாணயம் மற்றொரு நாட்டிற்கு மாற்றப்பட்டு, மாற்று விகிதம் தீர்மானிக்கப்படும் சந்தை. பணத்தாள்களாக மாற்றும் / புழங்கும்முறை வெகுவாக குறைக்கப்பட்டு, காசோலைகள், வங்கிக்கடன் மற்றும் கணக்கிருப்பு அட்டைகள், இணையவழி பரிவர்த்தனைகள் மூலம் பெருவாரியான சர்வதேச வங்கிச் சேவைகள் நடைபெறுகின்றன.
சர்வதேச வங்கிச் சேவைகளில் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடியது உலகெங்கிலும் உள்ள நாணயங்கள் மற்றும் நிதி மையங்களின் வர்த்தகத்திற்கான ஓவர்-தி-கவுண்டர் (OTC) நிதிச்சந்தை. இது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே பரிவர்த்தனைகளின் நங்கூரமாகச் செயல்படுகிறது. நாணய மதிப்பை வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் நிர்ணயிக்கும் அளவீடுகளில் இந்தச் சந்தைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நாணயத்தின் மதிப்பு உயரும் என்று சந்தை கணிக்கும்போது, அது உடனடியாக வாங்குதலைத் தூண்டி, நாணயத்தின் மதிப்பை உயர்த்தி கணிப்புகளை நிறைவேற்றும். மாறாக, ஒரு குறிப்பிட்ட நாணயத்தின் மதிப்பில் வீழ்ச்சியை சந்தை எதிர்பார்த்தால், கையிருப்பில் வைத்துள்ளவர்கள் அதை விற்கத் தொடங்குவார்கள். இதனால் நாணயத்தின் மதிப்பு குறையும்.
நாணய மதிப்பும் நாட்டின் பணவீக்க விகிதமும் ஒரு நாட்டின் பணவீக்க விகிதம் மற்றும் வட்டி விகித வேறுபாடுகள் காரணமாக அந்நியச் செலாவணியில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். வங்கிகளில் நாம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளின் நாணய மதிப்பு இதனையொட்டியும் தினமும் மாறுபடுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகளில் மாற்றம், அரசாங்கத்தின் பணவியல் மற்றும் நிதிக் கொள்கையில் மாற்றம் உள்ளிட்ட பல காரணிகள் நமது அந்நியச் செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதிக பணவீக்கம் நாணயத்தில் தேய்மானத்தை அதிகரிக்கின்றது. இந்த நிலை நீடித்தால் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கியால் அதிகரிக்கப்படும்.
வட்டி விகிதங்கள், பணவீக்கம் மற்றும் நாணய மாற்று விகிதங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையவை. வட்டி விகிதங்களைக் கையாளுவதன் மூலம், மத்திய வங்கிகள் பணவீக்கம் மற்றும் நாணய மாற்று விகிதங்கள் இரண்டையும் சரியான நிலையில் பராமரிக்க முடியும். அதிக வட்டி விகிதங்கள் பொருளாதாரத்தில் கடன் வழங்குபவர்களுக்கு மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக வருமானத்தை வழங்குகின்றன.
எனவே, அதிக வட்டி விகிதங்கள் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கின்றன. அதனால் நாணய மாற்று விகிதம் உயரும். வட்டி விகிதங்களைக் குறைக்கும்போது எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன. அதாவது, குறைந்த வட்டி விகிதங்கள் நாணய மாற்று விகிதங்களைக் குறைக்கின்றன. பணவீக்கம் அதிகரித்தால் வட்டி விகிதம் அதிகரிக்கும். உள்நாட்டு நாணய மதிப்பு குறையும். பணவீக்கம் குறைந்தால் வட்டி விகிதம் குறையும் உள்நாட்டு நாணய மதிப்பு உயர வழி ஏற்படும். தினச்சந்தையில் இவற்றை நாம் தெரிந்து கொண்டால் சர்வதேச வர்த்தகத்தில் வங்கிகளின் இயக்கத்தை புரிந்துகொள்ள முடியும்.
ஏற்றுமதியும் இறக்குமதியும் ஏற்றுமதி வணிகம் என்பது ஒரு நாட்டைச் சேர்ந்த நிறுவனம் அதன் பொருட்களையும் சேவைகளையும் மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதாகும். இறக்குமதி என்பது வேறு நாட்டிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகள் உள்நாட்டிற்கு ஏற்றுவரும் வணிகமாகும். ஏற்றுமதியாளர்களுக்கான வங்கி வசதிகள் ஒரு நாட்டின் பொருளாதாரம் சீராக அமையவும் உயரவும் அங்கிருந்து ஏற்றுமதியாகும் அனைத்தின் ஒட்டுமொத்த அளவும், விகிதமும், அதன் மூலம் ஈட்டும் வருவாயும் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
ஏற்றுமதிக்கு பொருட்களை தயார் செய்வதற்கும், மூலப்பொருட்களை வாங்குவதற்கும், பொருள் உற்பத்திக்கும் ஏற்றுமதியாளருக்கு ஏற்றுமதிக்கு முன் அல்லது பின் வங்கியிலிருந்து கடன் பெறும் வசதி உள்ளது. ரூபாய் ஏற்றுமதி கடன் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் ஏற்றுமதிக்கு முந்தைய கடன் (PCFC) ஆகியவை பொதுவாக வங்கிகளால் வழங்கப்படுகின்றன. ஏற்றுமதியாளருக்கு ஏற்றுமதி உறுதிக்கடிதம், ஏற்றுமதி வங்கி உத்தரவாதம் ஆகியவற்றை வங்கிகள் வழங்குகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட வணிகராக அரசுத்துறைகளின் அனுமதி, நிரந்தர வருமான வரி, சுங்கவரி மற்றும் இறக்குமதியாளர்-ஏற்றுமதியாளர் குறியீடு எண் (IEC), பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் (RCMC), ஏற்றுமதி / இறக்குமதி உறுதிப்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகியவற்றோடு வங்கிக் கிளையை அணுகினால் அதற்குரிய விண்ணப்பத்தைப் பெற்று உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதிக்கான வங்கிக்கடன் பெறமுடியும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலிருந்து இயங்கும் ஏற்றுமதியாளர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை மற்றும் குறைந்த வட்டியில் வங்கிக்கடன் கிடைக்கும். மேலும் அந்நியச் செலாவணி விகித மாற்று இழப்பைக் குறைப்பதற்கும் கடன்பெறும் செலவுகளைக் குறைப்பதற்கும் வெளிநாட்டு நாணயத்தில் ஏற்றுமதிக்கு முந்தைய வங்கிக்கடன் பெறலாம். இக்கடன் ஒருவருட காலத்திற்கு நிர்ணயிக்கப்படுகிறது.
பொருட்களை ஏற்றுமதி செய்த பிறகு அவற்றின் விலைப்பட்டியலை உரிய ஏற்றுமதிச் சான்றுகளுடன் வங்கியில் வழங்கி முன்பணம் கடனாகப் பெறலாம். ஏற்றுமதியாளரின் உற்பத்திப் பொருள், நிதிநிலை, சந்தையில் உள்ள கடன் மதிப்பீடு ஆகியவற்றையொட்டி கடன் விளிம்பு தீர்மானிக்கப்படுகிறது. கடன் விளிம்பு என்பது விண்ணப்பதாரர் ஏற்றுமதிக்குத் தேவைப்படும் தொகையில் அவர் கட்டவேண்டிய தொகையாகும். வங்கி வழங்கும் விற்பனைப்பொதி கட்டும் கடனை உற்பத்தி / வணிகச்சுழற்சி அல்லது தனிப்பட்ட ஏற்றுமதியின் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில், 180 நாட்களுக்குள் வங்கியில் திருப்பச் செலுத்த வேண்டும். ஏற்றுமதிக் கடன்களுக்கு செயலாக்கக் கட்டணம் உண்டு. கடனுக்கான பிணையம் என்னவென்பதை அந்தந்த வங்கிகள் நிர்ணயித்து அறிவிக்கின்றன.
ஏற்றுமதியாளர் அந்நியச் செலாவணி கணக்கு ஏற்றுமதி வருமானம் ஈட்டுபவர்களுக்கு பயன்பாடு மிக்க அந்நியச் செலாவணி கணக்கைத் துவக்கி நடத்த சர்வதேச சந்தையின் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அனுமதி வழங்குகின்றன. அங்கீகரிக்கப்பட்ட முகவர் அல்லது வங்கியில் வெளிநாட்டு நாணயத்தில் பராமரிக்கப்படும் இந்தக் கணக்கில் ஏற்றுமதியாளர்கள் அந்நியச் செலாவணி வருவாயில் 100% வரவு வைக்கும் வசதியைப் பெறுகின்றனர்.
அந்நியச் செலாவணியை ரூபாயாக மாற்ற வேண்டியதில்லை. அதன் மூலம் பரிவர்த்தனைச் செலவு மற்றும் நாணய மாற்று விகித இழப்பு குறைகிறது. இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள், நிறுவனங்கள் போன்ற அனைத்து வகையான அந்நியச் செலாவணியாளர்களும் EEFC கணக்குகளைத் துவக்கி நடத்தலாம். EEFC கணக்கை நடப்புக் கணக்கின் வடிவத்தில் மட்டுமே வங்கியில் துவக்கிப் பரிவர்த்தனை செய்யமுடியும். காசோலை வசதி உள்ள இந்தக் கணக்கிற்கு வங்கி வட்டி வழங்காது. மேலும் ஒரு காலண்டர் மாதத்தில் கணக்கில் உள்ள மொத்தத் தொகையானது, பயன்பாட்டிற்குச் சரிசெய்த பிறகு, அடுத்த காலண்டர் மாதத்தின் கடைசி நாளிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ ரூபாயாக மாற்றப்பட வேண்டும்.
ஏற்றுமதியாளர் அந்நியச் செலாவணி கணக்கில் (EEFC) அனுமதிக்கப்பட்ட வரவுகள்
*(1) வெளிநாட்டு நாணயக் கடன் அல்லது வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட முதலீடு, அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதி மூலம் வங்கியின் வழியாக உள்நோக்கி பெறப்பட்ட பணம்.
*(2) 100% ஏற்றுமதி சார்ந்த அலகு அல்லது (a) ஏற்றுமதி செயலாக்க மண்டலம் அல்லது (b) மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா அல்லது (c) மின்னணு வன்பொருள் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள ஒரு யூனிட் மூலம் அந்நியச் செலாவணியில் பெறப்பட்ட பணம்.
*(3) சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள ஒரு அலகுக்கு பொருட்களை வழங்குவதற்காக உள்நாட்டு கட்டணப் பகுதியில் உள்ள ஒரு யூனிட் மூலம் அந்நியச் செலாவணியில் பெறப்பட்ட பணம்.
*(4) எதிர் வர்த்தகத்தின் நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் பராமரிக்கப்படும் கணக்கிலிருந்து ஏற்றுமதியாளரால் பெறப்பட்ட பணம். (எதிர் வர்த்தகம் என்பது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்புக்கு எதிராக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை சரி செய்வதை உள்ளடக்கிய ஒரு ஏற்பாடு)
*(5) பொருட்கள் அல்லது சேவைகளின் ஏற்றுமதிக்காக ஏற்றுமதியாளரால் பெறப்பட்ட முன்பணம்.
*(6) ஆலோசனை / விரிவுரைக் கட்டணம் மற்றும் ஒரு நிபுணரின் தனிப்பட்ட திறன் சேவைகளை வழங்குவதன் மூலம் அவர் பெற்ற பிற வருவாய்கள் உட்பட தொழில்முறை வருமானம்.
*(7) கணக்கிலிருந்து முன்பு திரும்பப் பெறப்பட்ட பயன்படுத்தப்படாத வெளிநாட்டு நாணயத்தின் மறு வரவு மற்றும் ஏற்றுமதியாளர் அந்நியச் செலாவணி கணக்கில் (EEFC) அனுமதிக்கப்பட்ட பற்றுகள்.
*(அ ) அனுமதிக்கப்பட்ட நடப்புக் கணக்குப் பரிவர்த்தனைக்கு இந்தியாவிற்கு வெளியே பணம் செலுத்துதல் (அந்நியச் செலாவணி மேலாண்மை நடப்புக் கணக்கு மற்றும் மூலதனக் கணக்குப்பரிவர்த்தனை விதிமுறைகளின்படி.)
*(ஆ) 100% ஏற்றுமதி சார்ந்த அலகு அல்லது (a) ஏற்றுமதி செயலாக்க மண்டலம் அல்லது (b) மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா அல்லது (c) மின்னணு வன்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள ஒரு யூனிட்டில் இருந்து வாங்கப்பட்ட பொருட்களின் விலைக்கு அந்நியச் செலாவணியில் செலுத்துதல்.
*(இ)அமலில் உள்ள மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் விதிகளின்படி சுங்க வரி செலுத்துதல். (ஈ) இந்தியாவிற்கு வெளியே இயங்கும் இறக்குமதியாளர் வாடிக்கையாளருக்கு ஏற்றுமதியாளரால் வழங்கப்படும் வணிகம் தொடர்பான கடன்கள் / முன்பணங்கள். (உ) விமான கட்டணம் மற்றும் தங்கும் விடுதி செலவுகள் உட்பட பொருட்கள் / சேவைகள் வழங்குவதற்காக இந்தியாவில் வசிக்கும் ஒருவருக்கு அந்நியச் செலாவணியில் செலுத்துதல்.
இந்தக் கணக்கை இந்தியாவில் வசிக்கும் உறவினருடன் கூட்டாக வைத்திருக்க (நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 2(77ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி) அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் குடியுரிமை பெற்ற உறவினரை இரண்டாம் நபராக கூட்டுக் கணக்கில் சேர்த்தாலும் முதலாமவர் உயிருடன் இருக்கும்வரை அவரே கணக்கில் பரிவர்த்தனைகள் செய்யமுடியும்.
இறக்குமதியாளர்களுக்கான வங்கி வசதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. குறிப்பாக மூலப்பொருட்களை வெளிநாட்டிலிருந்து வாங்கி உள்நாட்டில் இறுதிப் பொருளாக உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமைக் கடன்கள் கிடைக்கின்றன. பொருட்களை இறக்குமதி செய்து உள்நாட்டில் விற்பதற்குமுன் தேவைப்படும் பணச் சுழற்சிக்கு இறக்குமதிக்கடன் உதவி செய்கிறது.
அயலகத்திலிருந்து வரும் ஏற்றுமதி உறுதிக்கடிதம், ஏற்றுமதி வங்கி உத்தரவாதம், அங்கீகரிக்கப்பட்ட வணிகராக அரசுத்துறைகளின் அனுமதி, நிரந்தர வருமான வரி, சுங்கவரி மற்றும் இறக்குமதியாளர்-ஏற்றுமதியாளர் குறியீடு எண் (IEC), பதிவு எண்கள் மற்றும் உறுப்பினர் சான்றிதழ் (RCMC), ஏற்றுமதி / இறக்குமதி உறுதிப்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகியவற்றோடு இறக்குமதியாளர் வங்கிக்கிளையை அணுகினால் அதற்குரிய விண்ணப்பத்தைப் பெற்று உரிய ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய வங்கிக்கடன் பெறமுடியும்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலிருந்து இயங்கும் உற்பத்தியாளர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை மற்றும் குறைந்த வட்டியில் வங்கிக்கடன் கிடைக்கும். இறக்குமதிக் கடன்களுக்கு செயலாக்கக் கட்டணம் உண்டு. கடனுக்கான பிணையம் என்னவென்பதை அந்தந்த வங்கிகள் நிர்ணயித்து அறிவிக்கின்றன.
வெளிநாட்டு நாணய பயணிகள்
அட்டைகள், அந்நியச் செலாவணி வரைவோலைகள், ஏற்றுமதி சேகரிப்புகள், இறக்குமதி சேகரிப்புகள், பணம் அனுப்புதல் ஆகிய வங்கிச் சேவைகள் வாடிக்கையாளர்களுக்குப் பெருமளவு உதவுகின்றன. அந்நியச் செலாவணி வணிகம் கடலளவு விரிவானதாகும். அரசு மற்றும் மத்திய வங்கியின் சட்டம் மற்றும் திட்ட வரைவுகளுக்கு ஏற்ப செயலாக்க விதிமுறைகள் அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டவையாகும். தொடர்ந்து இத்துறையில் கவனம் செலுத்தினால் வங்கியின் சிறந்த வாடிக்கையாளராக உயரலாம்.