Wednesday, April 17, 2024
Home » பொய்களை மட்டுமே பரிசாக தரும் பிரதமர் மோடிக்கு ஏமாற்றத்தை பரிசாக தர நாடு தயாராகி விட்டது: எட்டயபுரம் பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

பொய்களை மட்டுமே பரிசாக தரும் பிரதமர் மோடிக்கு ஏமாற்றத்தை பரிசாக தர நாடு தயாராகி விட்டது: எட்டயபுரம் பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

by Mahaprabhu

சென்னை: மக்களால் முதலமைச்சரான என்னிடமே பொய் சொன்னவர்தான் பிரதமர் மோடி. பொய்களை மட்டுமே பரிசாகத் தரும் பிரதமருக்கு, ஏமாற்றத்தைப் பரிசாக தர ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகிவிட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில், தூத்துக்குடி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது எது? துப்பாக்கிச் சூடு. 13 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா? அப்படியொரு மனிதநேயமற்ற கொடூரமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்தான் பழனிசாமி. தமிழ்நாட்டு வரலாற்றில் அதிமுக ஆட்சியால் வைக்கப்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளி. துயரமும் – கொடூரமுமான அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. ‘பச்சைப்பொய் பழனிசாமி’ என்று மக்கள் சும்மாவா சொன்னார்கள்.

பழனிசாமிக்குத் தெரிந்துதான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று ஆணையம் ஆதாரப்பூர்வமாக கூறியிருக்கிறது. ஊடகங்கள் மூலமாகத்தான் துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாகப் பழனிசாமி கூறியது தவறானது என்று ஆணையத்தின் அறிக்கையில் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.ஒரு ஆட்சி நிர்வாகம் ஈவு இரக்கமில்லாமல் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு கடந்த அதிமுக ஆட்சி. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்களின் வாழ்க்கையில், ஒளி வீசும் உதயசூரியனாக இருக்கிறதுதான் நம்முடைய திமுக ஆட்சி. திமுகவுக்கும் – அதிமுகவுக்கும்தான் போட்டி என்று கூறியிருக்கிறார். அந்தளவிற்காவது பழனிசாமிக்குப் புரிதல் இருக்கே என்று, எனக்கு மகிழ்ச்சி. நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். மோடியைப் பற்றி பாசாங்கிற்காககூட பத்து சொற்களை பேசாத பாதம்தாங்கி பழனிசாமிதான், தமிழ்நாட்டைக் காப்பாற்ற போகிறாராம்; உரிமைகளை மீட்கப் போகிறாராம். பாதம்தாங்கி பழனிசாமி ஒரு பக்கம் என்றால்… அவரின் ‘ஓனர்’ மோடி மற்றொரு பக்கம் வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தட்டிக் கேட்க நீங்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதாலா? தமிழ்நாட்டிற்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், அவர் கொண்டுவரும் திட்டங்களுக்கு நான் தடையாக இருந்தேன் என்று கூறுகிறார். மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் – சாதனைகளையும் ஒவ்வொரு நாளும் செய்த அந்த துணிச்சலுடன்தான் இந்த ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்‘ உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். சும்மா அல்ல, தெம்போடு, துணிச்சலோடு நிற்கிறேன். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நிற்கிறேன். நம்முடைய இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறோம். இரண்டு மாபெரும் இயற்கைப் பேரிடரை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தோம்.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கோரினோம். ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை. ஆனால், அதை ஒரு காரணமாக நாங்கள் மக்களிடம் கூறவில்லை. மோடி தரவில்லை என்றால் என்ன? உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தருவேன் என்ற உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றினேன். வெள்ளம் பாதித்தபோது, டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. தொலைபேசியில் என்னிடம் பேசிய பிரதமர் மோடி என்ன கூறினார் தெரியுமா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி இருக்கிறேன், அவர் பார்வையிட்ட பிறகு, நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார். ஆனால், நிர்மலா சீதாராமன் வந்துவிட்டு சென்றார். கொடுத்தாரா? கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.

அங்குச் சென்று என்ன சொன்னார்? மக்களுக்கான உதவிகளைப் பிச்சை என்று மனசாட்சியே இல்லாமல் ஆணவத்துடன் கொச்சைப்படுத்தினார். பிரதமர் பதவியில் இருப்பவர் கூறினாரே என்று நம்பினேன். வழக்கமாக, மக்களுக்குக் கூறும் பொய்யைத்தான் எனக்கும் பரிசாகக் கொடுத்தார். மக்களால் முதலமைச்சரான என்னிடமே பொய் சொன்னவர்தான் பிரதமர் மோடி. பொய்களை மட்டுமே பரிசாகத் தரும் பிரதமருக்கு, ஏமாற்றத்தைப் பரிசாக தர தயாராகிவிட்டீர்களா? தமிழ்நாட்டு வழியில் ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகிவிட்டது. மோடிக்கான தோல்விப் பரிசு தூத்துக்குடியிலும், ராமநாதபுரத்திலும் தயாராகிவிட்டது தானே? அதற்கு, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர். ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஏணி சின்னத்தில் வாக்களிப்பீர். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

You may also like

Leave a Comment

13 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi