சென்னை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு லைசென்ஸ் கட்டாயம் வாங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த லியுங் காய் பூக் மெடிக்கல் கம்பெனி கோடாலி தைலத்தை தயாரித்து வருகிறது. இந்த தைலத்தை சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆக்சென் மார்க்கெட்டிங் இண்டியா நிறுவனம் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இதற்கு லைசென்ஸ் பெற வேண்டும் என்று ஆக்சென் நிறுவனத்திற்கு அரும்பாக்கத்தில் உள்ள மாநில லைசென்ஸ் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தைலத்தையும் சுங்க அதிகாரிகள் முடக்கி வைத்தனர். இதையடுத்து, ஆக்சென் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் கோடாலி தைலம் இறக்குமதி செய்வதற்கு லைசென்ஸ் தேவையில்லை என்று வாதிடப்பட்டது.
ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஒன்றிய அரசு வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் ஆகியோர் மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம் பிரிவு 3(பி)ன்படி ஆயுர்வேத மருந்து பொருட்களும் இந்த சட்டத்தின்கீழ் வரும். இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்து பொருட்களுக்கு லைசென்ஸ் வேண்டும் என்பது குறித்து தனியாக எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. ஆனால், வெளிநாடுகளில் இருந்து லைசென்ஸ் இல்லாமல் ஆயுர்வேத மருந்துபொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உச்ச நீதிமன்ற எஸ்எம்ஏ டிரேடிங் நிறுவன வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கோடாலி தைலம் சுங்க கட்டண வரம்புக்குள் வருகிறது. எனவே, இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள் சோதனைக்கு உட்பட்டதுதான். மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம் ஆயுர்வேத பொருட்களுக்கும் பொருந்தும். இந்த சட்டத்தின்கீழ் ஆயுர்வேத மருந்து பொருட்களையும் ஒழுங்குபடுத்த முடியும்.
அனைத்து மருந்து பொருட்களுக்கும் இறக்குமதி லைசென்ஸ் பெற வேண்டும் என்பதுதான் நாடாளுமன்றத்தின் நோக்கம். இந்த வழக்கிலும் அதற்கான முகாந்திரம் உள்ளது. மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டத்தின் விதிகளின்கீழ் விண்ணப்பித்தால் லைசென்ஸ் வழங்கப்பட வேண்டும். மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பின் வழிகாட்டு விதிகளின்படி தடையில்லா சான்று வழங்குவதற்கு முன்பு அந்த மருந்து பொருள் சோதிக்கப்பட வேண்டும்.
மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதில் பொதுநலன், பொது சுகாதாரம் முக்கியமானது. ஆங்கில மருந்தில்லாத மருந்துகளும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். எனவே, விதிகளை வகுக்கும் அதிகாரிகள் ஆயுர்வேத மருந்துகளுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பம் தொடர்பாக பழைய விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மனுதாரரின் சரக்கை பொறுத்தவரை மாநில ைலசென்ஸ் அதிகாரியின் மேற்பார்வையில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கோடாலி தைலத்தின் மாதிரி ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆய்வில் திருப்தியிருந்தால் சான்றளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் சரக்கை விடுவிக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.