திருச்சி: சட்டமன்ற தேர்தலில் திராவிட மாடல் அரசு மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர துணை நிற்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று திருச்சியில் ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர்கள் ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு கஜேந்திரன், சீனிவாசன், ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது: திமுகவின் இதயம் என்றால் அது இளைஞரணி தான். இளைஞரணியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் இன்று பல்வேறு பொறுப்புகளில் இருக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளில் வெற்றிபெற முக்கிய காரணம் இளைஞரணியின் பங்களிப்பு தான். நம்முடைய பணி 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி இருக்க வேண்டும். நமக்கு இருக்கும் நேரம் மிக மிக குறைவு. மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு தேவையான பணிகள் செய்துதர வேண்டும். நம் முதலமைச்சர் கடும் நிதி நெருக்கடியில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நம் முதலமைச்சர் மாநிலத்திற்கு தேவையான நிதியை பெற டெல்லி சென்று வந்துள்ளார். எதற்கும் பயப்படுபவர்கள் நாம் கிடையாது. தவறு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும்.
தலைவர் மீதோ என் மீதோ யாரும் எந்த தவறும் கூற முடியாது, யாராலும் நம்மை மிரட்ட முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் நாம் வெற்றிபெற பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தை முடித்து கொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருச்சியிலிருந்து காரில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சென்றார். அங்கு தொமுச மாவட்ட தலைவர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்திவிட்டு, மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். திருச்சியிலிருந்து விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு சென்னை புறப்பட்டு சென்றார்.