அனைத்து உயிரினங்களின் உயிர்வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான சூழல் என்பது மிகவும் அவசியம். காடுகள் நாட்டிற்கு சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் நீர் பாதுகாப்பை வழங்குவதோடு, மக்களின் வாழ்வாதார மற்றும் சுகாதார பாதுகாப்பையும் வழங்குகின்றன. குறிப்பாக, கார்பன் சுழற்சி மற்றும் நீர்நிலை சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலநிலையை தணிப்பதற்கு காடுகளின் கார்பன் பிரித்தெடுத்தல் திறன் மிகவும் முக்கியமானது. எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மனிதகுலத்தின் உயிர்வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதே வேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இன்றைக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. தமிழகத்தில் சுற்றுப்புற சூழலை காத்திடவும், மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலம் முழுவதும் காடுகளின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்திட வேண்டி, மரக்கன்றுகள் நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலமாக, 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஈரநில இயக்கம் தொடங்கப்பட்டு இந்தியாவிலேயே அதிகபட்ச ராம்சார் அங்கீகாரம் பெற்ற 21 ஈர நிலங்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று சாதனை படைத்திருக்கிறது. ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற திட்டம்’ மூலமாக கார்பனை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு நெய்தல் மீட்சி திட்டம் மூலமாக, உலக வங்கியுடன் இணைந்து ரூ.1,675 கோடி மதிப்பீட்டில், முக்கிய கடலோரப் பகுதிகளின் தாங்குதிறனை வலுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், 7,000 ஹெக்டேருக்கும் அதிகமான 65 புதிய வன காப்பகங்களுக்கு அறிவிக்கை செய்து, சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வேறு எந்த மாநிலத்திலும் “இத்தனை இயக்கங்கள், திட்டங்கள் இல்லை என்ற அளவில் தமிழ்நாடு அரசு சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு சுற்றுச்சூழலுக்கும் உடல் நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நெகிழியை ஒழிக்க “மீண்டும் மஞ்சப்பை” எனும் இயக்கத்தை தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக முன்னெடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. நெகிழி ஒழிப்பு நிச்சயம் எளிமையானதல்ல. அதே நேரத்தில் பூஜ்ய நிலை எனப்படும் கழிவில்லா நிலை மேலாண்மை, சாத்தியப்படுத்துவது அவசியமாகும். உலக அளவில் பல நகரங்களும் கழிவில்லா நிலை நோக்கித் திட்டமிட்டு பயணத்தைத் தொடங்கி உள்ளன. இந்தக் கழிவில்லா நிலையை அடைவதற்கு மஞ்சள் பை இயக்கம் முழு வெற்றி பெற வேண்டும்.
இன்று நம் மண்ணை காக்கவில்லை எனில், நாளை செடி, கொடிகளை வளரவிடாமல் நெகிழிப்பைகள் பசுஞ்சோலைகளை அழித்து பாலைவனத்தை எதிர்கால சந்ததிக்கு பரிசளிக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திட வேண்டும். அரசு செயல்படுத்துகின்ற திட்டங்களால் மட்டும் இந்த நெருக்கடியை தீர்த்துவிட முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். அரசின் திட்டமாக இருந்தால் மட்டும் போதாது. இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்படுவதன் மூலம், மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்க முடியும்.