நான் வழக்கம் போல் வகுப்பறைக்குச் சென்றதும் பள்ளி மாணவர்களிடம் ‘திருவிழா’என்றதும் உங்கள் நினைவுக்கு வருவதைக் கூறுங்கள் என்றேன். மகிழ்ச்சி. உற்சாகம், உறவினர் வருகை, இனிப்பு, புத்தாடை எனப் பல பதில்கள் வந்தன. ஆனால், ஒரு மாணவி ’கொலை’என்றாள். குழந்தைகளின் உரையாடல்கள் சமூகத்தின் எதார்த்தத்தைப் பிரதிபலித்துவிடுகின்றன. கன்னத்தில் அறைகின்றன. மற்றொரு குழந்தை ‘சண்டை’என்றது. வேறொரு குழந்தை ‘அப்பா குடிச்சிட்டு, அம்மாவை அடிக்கும்’என்றது. இந்த பதில்கள் குடும்பச் சூழலை பிரதிபலித்தன. ஒரு சமயம் புதிதாகச் சேர்ந்த மாணவரின் சாதி குறித்து பொறுப்பு ஆசிரியர் பேப்பரில் தகவல் கேட்டு அனுப்பியபோது சாதின்னா என்ன என கேட்டது ஒரு குழந்தை. ‘ஏ! நாங்க _____ஆளுங்க. நீங்க என்ன ஆளுங்க? அதைத்தான் சாதின்னு சொல்றாங்க.’ என விடையளித்தார். ஆசிரியர்கள், பெற்றோர்களின் இதுபோன்ற உரையாடல்களும் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.குடும்பம், சமூகம் சார்ந்த தாக்கங்களால் குழந்தைகள் வளர்த்தெடுக்கப் படுகின்றனர். வெள்ளைதாள் போன்ற மனம் கொண்ட குழந்தைகள் எளிதில் எதிர்மறை விஷயங்களில் சிக்கிக்கொள்கின்றனர். அதை அவர்களால் கடக்க இயலவில்லை.
அதற்கு இடமளிக்கும் தளமாக பல சமயங்களில் பள்ளிக்கூடங்கள் திகழ்கின்றன. இந்த மனநிலையுடன் வருகைதரும் குழந்தைகளுக்குக் கூடுதல் அழுத்தம் தரும் இடமாகக் கல்விக்கூடங்கள் உள்ளன. தேர்வு, மதிப்பெண் எனும் அழுத்தங்கள் குழந்தைகளை மேலும் கவலைக்குள்ளாக்குகின்றன. வகுப்பறைகளில் குழந்தைகளுடன் ஆசிரியர்களின் உரையாடல் அவசியம். அவை வகுப்பறையின் சூழ்நிலை, தேவை குறித்து ஆசிரியரைச் சிந்திக்க வைக்கும்.குடும்பம், சமூகம், கல்வி சார்ந்த அழுத்தங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. குடும்பம் சார்ந்த பிரச்னையில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு மதிப்பெண் தரும் அழுத்தம் மேலும் கவலை அளிக்கிறது. அது நாளடைவில் மனஅழுத்தமாக மாறவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் இன்று செல்போன் பயன்படுத்தாத குழந்தையே இல்லை. சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களின் பரவலான பயன்பாட்டால் குழந்தைகள் மனதளவில் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
அதேபோல் வளரிளம் பருவக் குழந்தைகளை அச்சுறுத்தும் விஷயமாக போதைப்பொருட்கள் உள்ளன. இதனால், உடல்நலக்கோளாறு மற்றும் மனநலப் பிரச்னைக்கு உள்ளாகின்றனர். அவர்கள் பலவீனமான மனநிலை உடையவர்களாகத் திகழ்கின்றனர். சிலர், சக மாணவர்களின் கேலி,கிண்டல், சீண்டலுக்கு உள்ளாகி சுயமரியாதையை இழக்கின்றனர். இதனால், நாளடைவில் பெரும் மன அழுத்தம் பெறுகின்றனர். உடல் நலக்கோளாறு , நாள்பட்ட நோய், போதிய ஊட்டச்சத்து இன்மை போன்றவை சக மாணவர்களிடம் குறைந்த சுயமரியாதையை பெற்றுத் தருகின்றன. இப்படி வளரிளம் பருவ மாணவர்கள் பல சவால்களை எதிர்நோக்கி இருந்தாலும், அதற்குத் தீர்வு கொடுப்பவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். கல்விக்கூடங்கள் திகழ்கின்றன. மனஅழுத்தங்களைத் தீர்க்க மனநல விழிப்புணர்வை ஊக்குவிப்பது, மனநல ஆலோசகர் துணையுடன் ஆலோசனைகளை வழங்குவது மற்றும் உள்ளடக்கிய பள்ளிக்கல்வி கலாசாரத்தை மேற்கொண்டு மாணவர்களின் மனநலப் பிரச்னைகளுக்கு த்தீர்வு வழங்கிவருகின்றனர். ஆன்லைன் பாதுகாப்பு, பொறுப்பான இணைய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். வகுப்பறைகளில் ஆசிரியராலும், காவல்துறையினராலும் போதைப்பொருள் பயன்பாட்டின் அபாயங்கள் மற்றும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.
இவ்வளவு விஷயங்கள் ஆசிரியர்கள், பெற்றோர், சமூக நலன் விரும்பிகளோடு அரசும் சேர்ந்து செயல்படும்போதும் ஒரு சில சகிக்க முடியாத சம்பவங்கள் அரங்கேறி மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலையை உண்டாக்குகின்றன.சில வருடங்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவர்களில் சிலர் புலியா சிங்கமா என்று பேசிவருவதைக் கண்டேன். ஏதோ படம் குறித்து பேசுகின்றனர் என கவனிக்காமல் விட்டுவிட்டேன். நீ சிங்கம் தானே? அவன் புலி. அவனோட சேராதே… என்ற சொல்லாடல்கள் காதில் விழும்போது கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் இவை சாதிய அடையாளங்கள் என்பது புரிந்தது. குழந்தைகளை அமரச்செய்து சமத்துவம் சார்ந்த கதைகள் கூற ஆரம்பித்தேன். முற்போக்குச் சிந்தனைகளை வளர்க்கத் தொடங்கினேன். புலியும், சிங்கமும் நாளடைவில் மறைந்துபோயின. நாம் ஒருசில விஷயங்களைக் கடந்துசெல்லவும், மறக்கடிக்கச் செய்யவும் முயற்சிகள் மேற்கொண்டாலும், சில நேரங்களில் சமூகச்சூழலும், தவறான வழிகாட்டும் நபர்களாலும் ஒருசில வகுப்பறைகளில் சமூக சமத்துவமின்மையும், பாகுபாடும் பெரும் சவாலாகத் திகழ்கின்றன. சமூக ஏற்றத்தாழ்வுகளை அழித்தொழிக்க கல்விநிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் சமத்துவத்தை வளர்த்தெடுப்பதில் ஈடுபாடு கொண்டவர்களும் பன்முகத்தன்மையோடு மேலும் பல முயற்சிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். பெற்றோர்களுடன் ஆசிரியர்கள் சமூகமும் இணைந்து முயற்சிகள் எடுக்க வேண்டும். அதற்குரிய திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தவும் வேண்டும்.