நன்றி குங்குமம் தோழி
ஓரிரு மாதங்களில் காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை துவங்கிடும். இந்த விடுமுறையை எங்கு கழிக்கலாம் என்று திட்டமிடுபவர்கள் கோவா பிளான் செய்யலாம். கோவா ஆண்களுக்கு மட்டும் குறிப்பாக பேச்சிலர்கள் செல்லக்கூடிய இடம் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் இங்கு குடும்பத்துடன் கண்டுகழிக்க பல கலாச்சாரம் நிறைந்த இடங்கள், கடற்கரைகள், தேவாலயங்கள் உள்ளன. அதே சமயம் இங்கு தங்குவதற்கும் நம்முடைய பட்ஜெட்டிற்கு ஏற்ப ஓட்டல்களும் உள்ளன.
கோவா என்றாலே கேளிக்கை நகரம் என்று கூறுவதற்கு முக்கிய காரணம் அதன் இரவு வாழ்க்கை. இங்கு கடற்கரைகள், தேவாலயங்கள் எப்படி பிரபலமோ அதே போல் அங்கு நடுக்கடலில் 24 மணி நேரமும் நடைபெறும் கேசினோ போன்ற கேளிக்கை இடங்களும் பிரபலம். இது தவறான விளையாட்டு என்றாலும், அந்த வாழ்க்கை என்ன என்று தெரிந்து கொள்ளலாமே தவிர அதையே நம்முடைய அன்றாட வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளக்கூடாது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இந்த கேளிக்கை நகரத்தில் குடும்பத்துடன் கழிக்க பல கலைநயமிக்க பாரம்பரிய சுற்றுலாத் தளங்கள் என்ன என்று ஒரு சின்ன கண்ணோட்டம்.
கோவா வடக்கு, தெற்கு, பழைய கோவா என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வட கோவாவில் பெரும்பாலான கடற்கரைகள் அமைந்துள்ளன. தெற்கு கோவாவிலும் சில கடற்கரைகள் இருந்தாலும் இங்கும் பழைய கோவாவிலும் கோட்டைகள், தேவாலயங்கள் பிரபலம். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்குள்ள கடற்கரைகளை அதிகம் விரும்புகிறார்கள். காரணம், வட கோவாவில் உள்ள கடற்கரைகளில் அதன் அழகினை கண்டுகளிப்பது மட்டுமில்லாமல் பாராசெய்லிங், ஜெட் ஸ்கீயிங் போன்ற தண்ணீர் விளையாட்டுகளும் உள்ளன. வடகோவாவில் கலங்குட், கண்டோலிம், பாகா, பணாஜி போன்ற கடற்கரைகள் மிகவும் பிரபலம்.
தெற்கு கோவாவில் கோல்வா, பாலோலம் அகோண்டா, கோலா கடற்கரைகள் உள்ளன. கோலா கடற்கரையில் கயாக்கிங் செய்யலாம். அகோண்டா மற்றும் பாலோலம் கடற்கரைக்கு இடையே உள்ளது பட்டர்ஃபிளை கடற்கரை. இங்கு படகு மூலமாகத்தான் செல்ல வேண்டும். பாலோலம் கடற்கரையில் உள்ள படகு சவாரி மூலம் பட்டர்ஃபிளை, ஹனிமூன் கடற்கரைகள், டர்டில் பாறை மற்றும் டால்பின் கடலில் குதித்து செல்லும் அழகினை ரசிக்கலாம்.
உலகப்புகழ் வாய்ந்த தேவாலயங்களில் ஒன்று பாசலிக்கா பாம் ஜீசஸ். இங்கு கோவாவின் புனித ரட்சகர் என்று கத்தோலிக்கர்களால் மதிக்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவரின் உடல் மக்களின் வழிபாட்டிற்கும் பார்வைக்காகவும் வைக்கப்படுகிறது. பஞ்சிம் தேவாலயம், ஃபசாட் ஆஃப் ஓல்ட் சான்கோல் தேவாலயம் மிகவும் பழமையான புகழ்பெற்ற தேவாலயங்கள். பஞ்சிம் அருகே மாண்டோவி ஆற்றில் உள்ளது தீவார் தீவு. அங்கு படகு மூலம்தான் செல்ல முடியும்.
ரெயிஸ் மாகோஸ் கோட்டை, 1551ம் ஆண்டு போர்ச்சுகரால் கட்டப்பட்ட பழமையான கோட்டை. சுதந்திரத்திற்குப் பிறகு ஜெயிலாக பயன்படுத்தப்பட்டு தற்போது சுற்றுலாத்தளமாக மாற்றப்பட்டுள்ளது. அகுடா கோட்டையில் உள்ள பழமையான லைட் ஹவுஸ், 1976ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. தற்போது அதன் அருகே புது லைட் ஹவுசினை அமைத்துள்ளனர். கோவாவில் இரண்டு முக்கியமான அருங்காட்சியகம் உள்ளன. அதில் மிகவும் முக்கியமானது கடற்படைத்தள அருங்காட்சியகம். பஞ்சிம், ஃபன்டெயினாஸ், போர்ச்சுகர்கள் வாழ்ந்த இடம். இங்குள்ள வீடுகள் அனைத்தும் கண்களை கவரும் வண்ணங்களில் இருக்கும். இங்கு பாரம்பரிய ேகாவன் மற்றும் பேக்கரி உணவுகள் கிடைக்கும். மேலும் மிகவும் பழமையான ஜோசப் பார் இங்குதான் உள்ளது.
கோவாவை சுற்றிப்பார்க்க பலவிதமான டிரான்ஸ்போர்ட் வசதிகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கோவாவின் அனைத்து முக்கிய இடங்களுக்கும் செல்ல வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் கார்களை புக் செய்தும் பயணிக்கலாம். கார் பட்ஜெட்டில் செட்டாகாது என்று நினைப்பவர்களுக்காகவே ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகன வசதியுண்டு. ஆட்டோவிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு குறிப்பிட்ட கட்டணம். இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஒரு நாள் கட்டணம்.
கோவாவின் மற்றொரு வாழ்க்கை கேசினோ. இரவில் துவங்கி விடியவிடிய நடைபெறும் இந்த கேளிக்கையினை பலர் நடத்தி வருகிறார்கள். அதில் மிகவும் புகழ்பெற்ற டெல்டின் கேசினோ, பெரிய கப்பலில் அமைக்கப்பட்டுள்ளது. கேசினோ மட்டுமில்லாமல் டெல்டின் சூட் என்ற தங்கும் விடுதியும் உள்ளது. இங்கு கோவாவின் சிறந்த கடல் உணவுகளான கோவன் ஃபிஷ் கரி, கோல்டன் ஃப்ரை பிரான், கிங்பிஷ் ஃப்ரை போன்ற உணவுகள் பிரபலம். முழுக்க முழுக்க தேங்காய்ப்பால் கொண்டுதான் இவர்களின் பெரும்பாலான உணவுகள் சமைக்கப்படுகிறது. நம்மூரில் லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாக் போல் இங்கு தோதோல், பெபின்கா. தேங்காய்ப்பால், வெல்லம், அரிசி மாவு, நெய் கொண்டுதான் இவர்களின் இனிப்பு வகை உணவுகள் சமைக்கப்படுகிறது.ஒரு முறையாவது கடற்கரை நகரின் அழகை குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்.
தொகுப்பு: நிஷா