Saturday, July 19, 2025
Home மருத்துவம்ஆலோசனை ஆர்த்ரைட்டிஸ் அறிவோம்!

ஆர்த்ரைட்டிஸ் அறிவோம்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

வலியை வெல்வோம்

இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி

முட்டி வலி, மூட்டு வலி என்பதில் இருந்து ஒருபடி மேலே சென்று தற்போது அனைவருமே மருத்துவச் சொற்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். நோயர்களிடம் முட்டி வலியாம்மா எத்தனை நாட்களாக உள்ளது?! என்றால் இல்லை எனக்கு ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் என்று மருத்துவர் கூறி உள்ளார். அதற்கு பிசியோதெரபி 7 நாட்களுக்கு எழுதி கொடுத்துள்ளார் பாருங்கள் என்றே பதில் வரும். சரி, இந்த இதழில் இந்த ஆர்த்ரைடிஸ் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.

ஆர்த்ரைட்டிஸ் (Arthritis) என்பது மூட்டுகளைப் பாதிக்கும் நோயைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும். Arthro என்றால் மூட்டு (joint), itis என்றால் வீக்கம் (inflammation) அதாவது மூட்டுகளில் வலி, வீக்கம், விறைப்பு மற்றும் இயக்கக் குறைபாட்டை ஏற்படுத்தும் ஒரு நிலையைத்தான் ‘ஆர்த்ரைடிஸ் ‘என்கிறோம்.ஆர்த்ரைட்டிஸ் பல வகைகளைக் கொண்டது. மேலும் இது எல்லா வயதினரையும் பாதிக்கலாம். குறிப்பாக வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது.

பொதுவான வகைகள்

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (Osteoarthritis)

இது மிகவும் பொதுவான வகை மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு (cartilage) தேய்மானம் அடைவதால் ஏற்படுகிறது. பெரும்பாலும் முழங்கால், இடுப்பு
மற்றும் கைகளில் ஏற்படுகிறது.

ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் (Rheumatoid Arthritis)

இது ஒரு நோய் எதிர்ப்பு எதிர்நிலை நோய் (autoimmune disease). இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மூட்டுகளைத் தாக்குகிறது. இதனால் வீக்கம் மற்றும் மூட்டு சேதம் ஏற்படுகிறது.

கவுட் (Gout)

யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சேர்வதால் மூட்டுகளில் படிகங்கள் உருவாகி, திடீர் மற்றும் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் பெருவிரலில் ஏற்படுகிறது.

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (OA)

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் என்பது மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு (cartilage) தேய்மானம் அடைவதால் ஏற்படும் ஒரு degenerative நோயாகும். பெரும்பாலும் வயதானவர்களுக்கு தான் இது ஏற்படும். ஆனால், சில நேரங்களில் நேரடியாக அதிகமாக மூட்டுக்களில் தாக்கத்தை உண்டாக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள், அதிக உடல் பருமன் ( >BMI 30), அதிகசுமை தூக்குபவர்கள், அதிகமாக படிக்கட்டை உபயோகிக்கும் வேலை செய்பவர்கள், தொடை தசைகள் வலுவில்லாமல் இருந்தால் என அனைவருக்கும் ஆர்த்ரைடிஸ் உண்டாகும்.

இதன் முக்கிய அறிகுறிகள்

*மூட்டு வலி, குறிப்பாக உடல் செயல்பாட்டின் போதோ அல்லது அதற்கு பின்போ அதாவது அதிகமாக படிக்கட்டு ஏறும் போது அல்லது அதிக தூரம் நடக்கும்போது அல்லது இச்செயல்பாடுகளுக்கு பின் வலி ஏற்படும்.

*மூட்டுகளில் விறைப்பு, குறிப்பாக காலையில் எழுந்தவுடன் அல்லது நீண்ட நேர ஓய்வுக்குப் பின் அதாவது உடலை ஒரே நிலையில் நீண்ட நேரம் வைத்திருப்பதால் விறைப்பு ஏற்படும்.

*மூட்டுகளின் இயக்க வரம்பு குறைதல்.

*மூட்டுகளில் வீக்கம் அல்லது கட்டிகள் (bone spurs) உருவாகுதல்.

*பாதிக்கப்பட்ட மூட்டுகளில், குறிப்பாக முழங்கால், இடுப்பு, கை மற்றும் முதுகெலும்பு ஒலி (creaking sound) எழுதல். (எ.கா: சிலருக்கு நடக்கும்போது முட்டியில் க்ராக் போன்ற ஒரு ஒலி உண்டாகும் எனக் கூறுவர்)

பரிசோதனை

பெரும்பாலும் X-ray மூலம் குருத்தெலும்பு இழப்பு, எலும்பு முள் (bone spurs), மூட்டு எலும்புகளுக்கிடையே இடைவெளி குறைவு போன்றவை கண்டறியப்படுகின்றன.

சிகிச்சை

மருத்துவர்களால் வலி நிவாரணிகள் ஊசி மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

அறுவை சிகிச்சை

மூட்டுகள் மிகவும் சேதமடைந்திருந்தால் எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்களால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை (joint replacement) பரிந்துரைக்கப்படும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

உடல் எடையைக் குறைப்பது, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு மூலம் மூட்டு அழுத்தத்தைக் குறைக்கலாம்.

பிசியோதெரபி

பிசியோதெரபி ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

1. வலுவூட்டல் பயிற்சிகள்: மூட்டைச் சுற்றியுள்ள தசைகளை வலுவாக்குவதன் மூலம் மூட்டு மீதான அழுத்தம் குறைகிறது.

2. இயக்க வரம்பு பயிற்சிகள்: மூட்டு விறைப்பைக் குறைத்து இயக்கத்தை மேம்படுத்துகிறது.

3. நீர் சிகிச்சை (Hydrotherapy): நீரில் செய்யப்படும் பயிற்சிகள் மூட்டு மீதான அழுத்தத்தைக் குறைத்து வலியை நிர்வகிக்க உதவுகிறது.

4.மூட்டு இயக்கத்தை மேம்படுத்த மசாஜ் மற்றும் மூட்டு mobilization உதவுகிறது.

5. மேலும் நோயாளிகளுக்கு முறையான உடல் இயக்கங்கள் மற்றும் மூட்டு பாதுகாப்பு நுட்பங்களை கற்பிக்கப்படும்.( எ.கா: படிக்கட்டு ஏறும்போது முட்டியில் உண்டாகும் வலியைத் தடுக்க எப்படி ஏறி இறங்க வேண்டும் என்பது கற்பிக்கப்படும்)

ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் (RA)

ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்பது ஒரு autoimmune disease, இதில் நோயெதிர்ப்பு அமைப்பு மூட்டுகளின் உள்ள synovium மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது.தமிழில் ‘முடக்குவாதம்’ என்பர்.மக்கட்தொகையில் 0.5-1% பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.ஆண்களை விட மூன்று மடங்கு பெண்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். 30-60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு தான் பெரும்பாலும் இந்த நோய் ஏற்படுகிறது.இதில் நான்கு நிலைகள் உள்ளன.

முதல் நிலை

இது ஆரம்பநிலை மூட்டுகளைச் சுற்றி உள்ள திசுக்களில் வீக்கத்தை உண்டாக்கும். மேலும் மூட்டு வலி, விறைப்புத்தன்மையை உண்டாக்கும். ஆனால் எக்ஸ்ரேவில் எலும்புகளில் எந்தவொரு மாறுதலையும் காண முடியாது.

இரண்டாம் நிலை

இந்த நிலையில் குருத்தெலும்புகளில் பாதிப்பை ஏற்படுத்த துவங்கும். மூட்டுகளின் இயக்கவரம்பு குறைந்து, மூட்டு இறுக்கத்தோடு வீக்கத்தை அதிகப்படுத்தி இருக்கும்.

மூன்றாம் நிலை

இரண்டாம் நிலையை விட அதிக வீக்கம் உண்டாகும். இதனால் எலும்புகளில் சேதங்கள் உண்டாவதோடு மட்டுமல்லாமல் மேலும் மூட்டு இயக்கத்தை பாதிக்கும். வலியும் அதிகரிக்கும்.

நான்காம் நிலை

மூன்று நிலைகளை விட வலி அதிகரித்து இருக்கும். வீக்கம் அடைவது குறைந்து மூட்டுகளில் சேதம் அதிகரித்து மூட்டு இறுக்கம் அடைந்து முற்றிலும் மூட்டுக்களை இயக்க முடியாத நிலையை அடைந்திருக்கும்.இந்த நோய் மூட்டுக்களை மட்டுமல்லாமல் கண், தோல், வாய், நுரையீரல், இதயம் ஆகியவற்றையும் பாதிக்கும்.

முக்கிய அறிகுறிகள்

*இரு பக்க மூட்டுகளிலும் (symmetrical) வலி மற்றும் வீக்கம், குறிப்பாக சிறு மூட்டுகளான கைகள், மணிக்கட்டு மற்றும் முழங்கால்களில் வலியை ஏற்படுத்தும்.

*காலை விறைப்பு (morning stiffness) ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தல்.

*மிக அதிக களைப்பு, காய்ச்சல் மற்றும் பொதுவான உடல்நலக் குறைவு.

*Deformities மற்றும் Rheumatoid nodules உருவாகுதல்.

பரிசோதனைகள்

*ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸை கண்டறியும் ரத்தப் பரிசோதனைகள் (Rheumatoid Factor, Anti-CCP antibodies),

*X-ray, MRI மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன.

*ESR மற்றும் CRP பரிசோதனைகள் உடலில் உள்ள வீக்கத்தின்( inflammation) அளவைக் காட்டுகின்றன.

சிகிச்சை:

ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால் நோயின் தீவிரத்தையும், அதன் பாதிப்புகளையும் தள்ளிப் போடலாம். ரூமட்டாலஜிஸ்ட் அல்லது எலும்பு மூட்டு மருத்துவர்களால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த, வலி மற்றும் வீக்கத்தை குறைக்கவும் தொடர் மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை

மூட்டு சேதமடைந்தால் synovectomy அல்லது மூட்டு மாற்று அறுவைசிகிச்சை தகுந்த நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்:

மன அழுத்த மேலாண்மை, ஊட்டச்சத்து உணவு மற்றும் ஓய்வு முக்கியம்.

பிசியோதெரபி:

1. ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸில் பிசியோதெரபியானது மூட்டு இயக்கத்தை பராமரிக்கவும், வலியைக் குறைக்கவும் உதவுகிறது.
2. வலுவூட்டல் மற்றும் நீட்சி பயிற்சிகள்: மூட்டு விறைப்பைக் குறைத்து, தசைகளை வலுவாக்குகிறது.
3. வெப்ப/குளிர் சிகிச்சை: வெப்ப சிகிச்சை மூட்டு விறைப்பைக் குறைக்கவும், குளிர் சிகிச்சை வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
4. ஆக்ஸிஜனேற்ற பயிற்சிகள் (aerobic exercises): உடல் தகுதியை மேம்படுத்தி, களைப்பைக் குறைக்கிறது.
5. Splints அல்லது braces மூலம் மூட்டு நிலைத்தன்மையை மேம்படுத்தலாம்.

தொடர் மருந்து மாத்திரைகள் மற்றும் ஆக்குபேசனல் தெரபி, பிசியோதெரபி உடற்பயிற்சி மூலமாக மட்டுமே இந்த நோயின் தீவிரத்தை குறைக்க இயலும்.

கவுட் (Gout) :
கவுட் (Gout) என்பது ஒரு வகை ஆர்த்ரைடிஸ் (arthritis) ஆகும், இது உடலில் யூரிக் அமிலம் (uric acid) அதிகமாக சேர்வதால் ஏற்படுகிறது. இதை தமிழில் பொதுவாக “கீல்வாதம்” அல்லது ‘புரை நோய்’ என்று அழைக்கின்றனர். யூரிக் அமிலம் மூட்டுகளில் படிகங்களாக (crystals) உருவாகி, கடுமையான வலி, வீக்கம் மற்றும் சிவப்பு நிறத்தை ஏற்படுத்தும். யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் (purines) என்ற பொருள் உடலில் சிதைவடையும்போது உருவாகும் ஒரு கழிவுப்பொருள் ஆகும்.

பொதுவாக, இது சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால், யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகும்போது அல்லது சிறுநீரகங்கள் அதை வெளியேற்ற முடியாதபோது, அது ரத்தத்தில் சேர்ந்து மூட்டுகளில் படிகங்களாக உருவாகிறது. இந்த படிகங்கள் மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன, இதனால் திடீர் மற்றும் கடுமையான வலி ஏற்படும். இது பெரும்பாலும் ஆண்களைப் பாதிக்கிறது, ஆனால் பெண்களுக்கும், குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு, ஏற்படலாம்.

அறிகுறிகள்:

கவுட் பொதுவாக, திடீரென தாக்குதலாக (acute attack) ஏற்படுகிறது.

முக்கிய அறிகுறிகள்:

*கடுமையான மூட்டு வலி: பெரும்பாலும் பாதத்தின் பெருவிரலில் (big toe) தொடங்குகிறது. முழங்கால், கணுக்கால், கை மற்றும் மணிக்கட்டு மூட்டுகளும் பாதிக்கப்படலாம்.
*வீக்கம் மற்றும் சிவப்பு நிறம்: பாதிக்கப்பட்ட மூட்டு வீங்கி, சிவப்பாகவும், சூடாகவும் மாறுகிறது.
*தொட முடியாத அளவு உணர்திறன்: மூட்டைத் தொடுவது கூட கடுமையான வலியை ஏற்படுத்தும்.
*காய்ச்சல் மற்றும் பலவீனம்: சிலருக்கு கவுட் தாக்குதலின்போது காய்ச்சல் மற்றும் பொதுவான பலவீனம் ஏற்படலாம்.

நீண்டகால அறிகுறிகள்:

*கவுட் சிகிச்சையின்றி நீடித்தால், மூட்டுகளில் படிகங்கள் சேர்ந்து ‘டோஃபி’ (tophi) எனப்படும் கட்டிகள் உருவாகலாம், இது மூட்டு சேதத்தை ஏற்படுத்தும்.
*உணவு முறை: சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் (நெத்திலி, மத்தி மீன்), மது (குறிப்பாக பீர்), சர்க்கரை பானங்கள் போன்றவை பியூரின்களை அதிகரிக்கின்றன.
*கவுட் பரம்பரையாகவும் ஏற்படலாம்.
*உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக நோய்கள் போன்ற மெட்டபாலிக் சிண்ட்ரோம்கள் கவுட் ஆபத்தை அதிகரிக்கின்றன.
*சில மருந்துகள் (எ.கா., டையூரிடிக்ஸ்) யூரிக் அமில அளவை உயர்த்தலாம்.
*ஆண்களுக்கு 30-50 வயதிலும், பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும் இது அதிகம் ஏற்படுகிறது.

மருத்துவ பரிசோதனை:

1. நோயாளியின் அறிகுறிகள் மற்றும் மருத்துவ வரலாற்றை கண்டறிதல் அவசியம்.

2. ரத்த பரிசோதனை: ரத்தத்தில் யூரிக் அமில அளவை அளவிடுதல். ஆனால், யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் சிலருக்கு கவுட் இருக்காது, மற்றும் சிலருக்கு யூரிக் அமிலம் சாதாரணமாக இருந்தாலும் கவுட் இருக்கலாம்.

3. மூட்டு திரவ பரிசோதனை: பாதிக்கப்பட்ட மூட்டில் இருந்து திரவம் எடுக்கப்பட்டு, யூரேட் படிகங்கள் (urate crystals) இருக்கிறதா என
பரிசோதிக்கப்படுகிறது.

4. இமேஜிங் சோதனைகள்: X-ray, அல்ட்ராசவுண்ட் அல்லது CT ஸ்கேன் மூலம் மூட்டு சேதம் மற்றும் டோஃபி இருப்பை உறுதி செய்யப்படுகிறது.

சிகிச்சை:

வீக்கம்‌ மற்றும் வலியைக், யூரிக் அமில அளவை மற்றும் யூரிக் அமில உற்பத்தியை குறைக்க மருத்துவர்களால் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்:

*உணவு , ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரையின்படி பியூரின் அதிகம் உள்ள உணவுகளை கண்டறிந்து அவற்றை தவிர்க்கவும்.

*தண்ணீர் அதிகம் பருகுவதன் மூலம் யூரிக் அமிலத்தை வெளியேற்றலாம்.

*உடல் எடையைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுதல்.

*மற்ற மருத்துவ நிலைகளை (உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு) கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

பிசியோதெரபி :

*நீண்டகால பாதிப்புகளில், பிசியோதெரபி மூலம் மூட்டு இயக்கத்தை பராமரிக்கலாம். மூட்டு சேதமடைந்தால், அறுவைசிகிச்சை செய்தாலும் அதற்கு பின்பான பிசியோதெரபி மறுவாழ்வு சிகிச்சை மிகவும் அவசியம்.

*உடல் எடை மேலாண்மை, உடல் பருமன் கவுட் ஆபத்தை அதிகரிக்கிறது. அவற்றை கட்டுப்படுத்த தொடர் உடற்பயிற்சிகள் அவசியம்.

*வலி மேலாண்மை சிகிச்சை ‌மூலம்‌ வலியை கட்டுப்படுத்துதல்.

*ஓய்வு மற்றும் குளிர் சிகிச்சை: பாதிக்கப்பட்ட மூட்டை உயர்த்தி வைத்து, குளிர் ஒத்தடம் கொடுக்கலாம்.

இக்கட்டுரையின் மூலம் ஓரளவிற்கு ஆர்த்ரைடிஸ் மற்றும் அவற்றின் வகைகள், அதன் அறிகுறிகள், அவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசங்கள், ஒற்றுமைகள் பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். இருப்பினும் இதில் உள்ள அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவரை அணுகி அம்மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், சுய சிகிச்சையை தவிர்க்கவும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi