Tuesday, June 24, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு சார்கோபீனியா அறிவோம்!

சார்கோபீனியா அறிவோம்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

வலியை வெல்வோம்

கிருஷ்ணவேணி இயன்முறை மருத்துவர்

சமீபகாலங்களில் வயது முதிர்ந்தவர்கள் உள்ள வீட்டில் சார்கோபீனியா என்ற ஒரு மருத்துவ பதத்தை பயன்படுத்துவதை கேட்டிருப்போம், மேலும் நாற்பது வயதிற்கும் மேல் ஏன் உடல் நலம் பேண வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரை காணொலிகளில் சார்கோபீனியாவைப் பற்றிக் கூறியிருப்பர்.

‘சார்கோபீனியா’, என்பது வயது முதிர்வின் காரணமாக தசைநிறை (low muscle mass), மற்றும் தசைவலிமை (low muscle strength) மற்றும் தசைகளின் செயல்பாடு (low physical performance) படிப்படியாகக் குறையும் ஒரு மருத்துவ நிலையாகும். இது முதியவர்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.

தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சார்கோபீனியாவின் தாக்கம் மற்றும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.1989ம் வருடம் இர்வின் ரோசன்பெர்க் என்பவர்தான் சார்கோபீனியா (Sarcopenia) என்ற வார்த்தையை முதலில் முன்மொழிந்தார். இரு கிரேக்க சொற்களிருந்து உருவானது தான் Sarcopenia என்ற வார்த்தை “sarx” – தசை,“penia” -குறைபாடு அல்லது இழப்பு என்ற பொருள்படும்.

இது முதுமையில் ஏற்படும் தசைநிறை இழப்பை முதன்மையாகக் குறிக்கிறது. இருப்பினும், இந்த நிலை முதுமை மட்டுமல்லாமல், சரியான ஊட்டச்சத்து இல்லாமை, உடல் செயல்பாடின்மை அல்லது நாள்பட்ட நோய்கள் காரணமாகவும் ஏற்படலாம். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், முதியவர்களிடையே இதன் பரவல் 10-40% வரை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வேலூர், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் ஆய்வின்படி, தமிழ்நாட்டில் முதியவர்களில் 39.2% பேர் சார்கோபீனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் இதன் பரவல் அதிகமாக உள்ளது அதாவது 14.8% சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 6.8% சதவீதமாகவும் உள்ளது.

இது வயது முதிர்ந்தவர்களின் அனுதின அன்றாட வாழ்க்கை முறையில் தனித்து இயங்குவதைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சுகாதார செலவுகளையும் அதிகரிக்கிறது. தசை இழப்பு ஏற்படுவதால் அப்படி என்ன பெரிய பாதிப்புகள் வந்துவிடலாம் என நினைக்கலாம். இந்தத் தொடரின் ஆரம்ப கால கட்டுரைகளில் தசை, தசை நார்கள் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றி ஓரளவு எழுதியுள்ளேன் அவற்றை மீண்டும் நினைவு கூருங்கள்.

உடலின் மொத்த எடையில் ஒரு 10% தசை இழப்பால் உடலின் எதிர்ப்பு சத்து குறைவதோடு, நோய்‌தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 20% -40 % தசை இழப்பால் காயங்கள் குணமாவது தாமதப்படுத்தப்படும், சாதாரணமாக நாற்காலியில் உட்காருவதில் கூட சிரமம் ஏற்படும், நுரையீரல் தொற்று ஏற்படும் இதனால் உயிரிழப்பு கூட உண்டாகலாம் அதற்கு சில நீண்ட காலமாகும்.

காரணங்கள்

வயது முதிர்வு :60 வயதுக்கு மேல் தசைநிறை ஆண்டுக்கு 1-2% குறைகிறது. இது ஆண்களை விட பெண்களுக்கு சற்று குறைவாக இருக்கலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு: புரதம் மற்றும் வைட்டமின் D குறைவாக உட்கொள்வது தசை இழப்பை துரிதப்படுத்துகிறது.

உடல் செயல்பாடின்மை: உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை( Sedentary lifestyle) தசைநிறையைக் குறைக்கிறது.

நாள்பட்ட நோய்கள்

நீரிழிவு, புற்றுநோய், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் இதய நோய்கள் தசை இழப்பை ஊக்குவிக்கின்றன.

ஹார்மோன் மாற்றங்கள்

டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களின் குறைவு தசை பராமரிப்பை பாதிக்கிறது.

அறிகுறிகள்: சார்கோபீனியாவின் முக்கிய அறிகுறிகள்:

*தசை பலவீனம் (தசைவலு குறைவு)

*நடப்பதில் அல்லது படிக்கட்டுகளில் ஏறுவதில் சிரமம்

*அடிக்கடி விழுதல் மற்றும் எலும்பு முறிவு ஆபத்து

*தினசரி செயல்பாடுகளைச் செய்ய இயலாமை (எ.கா. பைகளை தூக்குதல்)

*உடல் எடை குறைவு அல்லது உடல் ஆற்றல் குறைவு

இந்த அறிகுறிகள் பெரும்பாலும் முதுமையின் இயல்பான ஒன்றாக கருதப்படுவதால் மருத்துவ கவனிப்பு தாமதமாகிறது.

நோய் கண்டறிதல்:சார்கோபீனியாவை அடையாளம் காண பல முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

முக்கிய நோயறிதல் முறைகள்: தசைநிறை அளவீடு: DEXA (Dual-Energy X-ray Absorptiometry) அல்லது Bioelectrical Impedance Analysis (BIA) மூலம் தசைநிறை அளவிடப்படுகிறது.

தசைவலு மதிப்பீடு: கைப்பிடி வலிமை (Handgrip Strength) சோதனை மூலம் தசைவலு அளவிடப்படுகிறது.

உடல் செயல்பாடு: நடை வேகம் (Gait Speed) அல்லது Short Physical Performance Battery (SPPB) மூலம் செயல்பாடு மதிப்பிடப்படுகிறது.இந்தியாவில், நோயறிதல் கருவிகளின் பயன்பாடு நகரங்களில் மட்டுமே உள்ளது, இது கிராமப்புற மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

சிகிச்சை மற்றும் மேலாண்மை:சார்கோபீனியாவுக்கு முழுமையான சிகிச்சை இல்லை என்றாலும், சில வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் வரும் முன் காக்கவும் நோயின் தீவிரத்தை குறைக்கவும் இயலும்.

ஊட்டச்சத்து:

புரத உணவுகள்:

*ஒரு கிலோ உடல் எடைக்கு 1.0-1.2 கிராம் புரதம் தினமும் தேவை.

*வைட்டமின் D மற்றும் ஒமேகா-3 தசை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தகுந்த ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின் பேரில் அவரவர் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து வழிமுறைகளை கேட்டறிந்து செயல்படுவது சிறந்தது.
வாழ்க்கை முறை மாற்றங்கள்:

உடலுழைப்பு குறைந்த வாழ்க்கை முறையைத் தவிர்ப்பது, தூக்கத்தை மேம்படுத்துவது மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பது முக்கியம்.

தடுப்பு முறைகள்:

40 வயதுக்கு மேல் உடற்பயிற்சி மற்றும் புரத உணவு முறையைத் தொடங்குவது சார்கோபீனியாவை தாமதப்படுத்தும்.

பிசியோதெரபி:

உடற்பயிற்சி:

1.உடலின் சகிப்புத்தன்மையை மேம்படுத்துதல் (Endurance)

2.வலுவாக்குதல் பயிற்சிகள் (Strength training)

3.வளைவுத்தன்மை மற்றும் இயக்கத்தை மேம்படுத்துதல் (Flexibility and mobility)

4.சமநிலை மற்றும் ஒருங்கிணைவு (Balance and Coordination) என்ற அடிப்படையில் உடற்பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது.

தினமும் 30-45 நிமிடங்கள் நடைபயிற்சி போன்ற கார்டியோ உடற்பயிற்சிகள் செய்வதோடு மட்டுமல்லாமல் வாரத்திற்கு இருமுறையாவதும் Strength traning எனப்படும் தசையை வலுப்
படுத்தும் பயிற்சிகள் மிகவும் அவசியம்.சிறந்த உடற்பயிற்சி நிபுணர் அல்லது நோயாளிகள் எனில் பிசியோதெரபிஸ்டுகளின் உதவியோடு இப்பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது.
ஏனெனில் சார்கோபீனியா தசை மேலாண்மை சிகிச்சையில் பிசியோதெரபியின் பங்கு அதிகம்.

*நியூரோ மஸ்குலர் ஸ்டிமுலேசன் சிகிச்சை மூலம் தசை செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

*தீவிர நுரையீரல் நோயினால் சார்கோபீனியா ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதால் பிசியோதெரபியின் கார்டியோ ரெஸ்பிரேட்டரி துறையின் மறுவாழ்வு சிகிச்சை முக்கியத்துவம் வாய்ந்தது.

சார்கோபீனியா என்பது முதுமையில் ஏற்படும் தவிர்க்க முடியாத நிலையல்ல, முறையான உடற்பயிற்சி, ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதைத் தடுக்கவோ அல்லது மேம்படுத்தவோ முடியும். இந்த நிலை குறித்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவ ஆதரவை மேம்படுத்துவது அவசியம். பல்வேறு மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், ஆக்யூபேசனல் தெரபிஸ்ட் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம், முதியவர்கள் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழமுடியும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi