நன்றி குங்குமம் டாக்டர்
நோய் நாடி நோய் முதல் நாடி
பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு
எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் அதிகமாக டிராவல் செய்யக்கூடியவர். அவரது கண் அடிக்கடி உறுத்திக்கொண்டே இருப்பதால், கண் டாக்டரை பார்த்திருக்கிறார். அந்த மருத்துவர் உங்களுக்கு கண்ணில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்று கூறி, அதற்கான டிராப்ஸ் கொடுத்து, டிராவல் செய்யும் போது, கூலர் அல்லது கண்கள் மூடிய படி இருக்கக்கூடிய Eye Mask உபயோகப்படுத்த கூறியிருக்கிறார். ஒரு நாள் என்னைப் பார்க்கும் போது, என்னிடம் கேட்டார், எப்படி டாக்டர் கண்ணில் அலர்ஜி வரும், இதெல்லாம் எனக்குப் புதிதாக இருக்கிறது என்றார். டிராவல் செய்யும் போதெல்லாம் கண்ணிலிருந்து நீர் வந்துகொண்டே இருப்பதால், தன்னால் தாங்க முடியவில்லை என்றார்.
கண்ணில் அலர்ஜி ஏற்படுமா என்ற அவரது சந்தேகத்தை வைத்து இன்றைக்கு நமது உடலில் ஏற்படும் அலர்ஜியைப் பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொள்வோம். இன்றைய உலக மக்கள் தொகையில் இருபது சதவீத மக்கள் அலர்ஜியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. இருபது சதவீதம் என்பது அதிகமான எண்ணிக்கையாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டு, அலர்ஜியின் பாதிப்பைப் பற்றியும் அதற்கான சிகிச்சைகள் பற்றியும் நாம் இன்னும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால், உடலில் அலர்ஜி ஏற்படும் போது, மக்கள் அலர்ஜி தானே, கண்டுக்காமல் இருந்தால், அதுவே இரண்டு நாளில் சரியாகி விடும் என்பார்கள். உண்மையில் அலர்ஜியை அப்படி கண்டுகொள்ளாமல் இருப்பது சரியா? தவறா? என்றால் முற்றிலும் தவறு.அலர்ஜி எந்த வகையிலெல்லாம் மனிதர்களைத் தொந்தரவு செய்யும் என்றால், பல விதங்களில் நமது உடலில் அலர்ஜி நமக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒரு சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படும் அல்லது தடிப்பு தடிப்பாக மாறும் அல்லது ஒரு சிலருக்கு முகம் அல்லது கை, கால் வீக்கமாக இருக்கும் அல்லது ஒரு சிலருக்கு கண் சிவந்து காணப்படும் அல்லது கண்ணிலிருந்து நீர் வரும் அல்லது ஒரு சிலருக்கு மூக்கிலிருந்து தண்ணீராக வருவது அல்லது தொடர்ச்சியான தும்மல் ஏற்படுவது அல்லது மூச்சு திணறல் ஏற்படும் அல்லது ஒரு சிலருக்கு பிபி மிகவும் குறைந்து இறக்கும் நிலை கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் தான், அலர்ஜியை மிகவும் சாதாரணமாகவும் கையாளக்கூடாது அல்லது ரொம்ப பயந்து பதற்றப்படவும் கூடாது என்பதே முதல் விழிப்புணர்வாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த அலர்ஜி எப்படி ஏற்படுகிறது என்றால், அதாவது ஹீரோ என்றைக்கும் வில்லனை கொலை செய்வது தான் நியாயமாக இருக்கும். ஆனால், ஏதோவொரு நெருக்கடியான சூழலில், ஹீரோ திடீரென்று நல்லது செய்து கொண்டிருக்கும் ஒருவரை கொன்று விடுகிறார். அப்போது என்ன நடக்கும், ஹீரோ கதறி அழுவார் அல்லவா. அது போல் தான் நமது உடலும் ஹீரோவாக தான் செயல்படும். நமது உடலுக்குள் தீங்கு விளைவிக்கும் கிருமி உள்ளே வந்து விட்டால், உடலில் இருக்கும் அனைத்துப் பாகங்களும் அந்த கிருமியை அடிச்சு துரத்தி வெளியேற்றி விடும்.
ஆனால், சில நேரம் நன்மை செய்யக்கூடிய கிருமி உடலுக்குள் வரும் போது, அதையும் வில்லன் என்று நினைத்துக் கொண்டு நல்ல கிருமியின் மீது உடல் தாக்குதலை நடத்தும் போது தான், நமக்கு வெளியே அலர்ஜி ஏற்படுகிறது. சில நேரங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய கிருமியை ஓவராக அடித்து துவைக்கும் போதும், அதாவது அளவுக்கு அதிகமான ரியாக்சன் உடல் கொடுக்கும் போதும் அலர்ஜி ஏற்படும்.
பொதுவாகவே, மக்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக தும்மல் வந்துகொண்டே இருக்கிறது என்றும், திடீரென்று சில உணவுகள் சாப்பிடும் போது உடலில் அரிப்பு ஏற்படுகிறது என்றும், மூச்சுத் திணறல் அடிக்கடி ஏற்படுகிறது என்றும் கூறுவதை தற்போது அதிகமாகப் பார்க்கிறோம். அதற்கு நம்முடைய சுற்றுச்சூழல் மாசுபாடு, மரபணு ரீதியான காரணங்கள் போன்றவற்றால் அலர்ஜியின் பாதிப்பு அதிகமாவதற்கான பலவிதமான காரணங்களைக் குறிப்பிட முடிகிறது. இந்த காரணங்கள் அனைத்துமே உலக மக்கள் தொகையில் பலரும் அனுபவித்துக் கொண்டிருக்கும் காரணங்களாக தான் இருக்கின்றது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கடமையும் இருக்கிறது. அதனால் தான் மக்கள் அலர்ஜியை ரொம்ப சாதாரணமானதாகவும், சில நேரங்களில் அலர்ஜியின் தீவிரம் அதிகமாகும் போது பயப்படவும் செய்கிறார்கள்.
அந்த காலங்களை ஒப்பிடுவதை விட, இந்த காலத்தில் அலர்ஜி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு காரணத்தை மருத்துவத்துறை கூறுகிறது. அதாவது, ஹைஜீன் ஹைப்போதீசிஸ் என்கிறார்கள். தற்போது, அனைவருமே சுத்தம் சுத்தமென்று அதிகமாக பேசுகிறோம் அல்லது அதிக சுத்தமான இடத்தில் மட்டுமே வசிக்க ஆசைப்படுகிறோம்.
ஹைஜீன் ஹைப்போதீசிஸ் என்பது என்னவென்றால், குழந்தைகளாக இருக்கும் போதே, அவர்களின் உடலை Immune System Matured ஆகும் அளவிற்கு அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். அதாவது, குழந்தைப் பருவத்திலிருந்தே சமூகத்தில் பலருடன் பழகும்போது, யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை வளரும் போதே கற்றுக் கொள்வார்கள். இதுவே, குழந்தையை வெளியே விடாமல், யாரிடமும் பழக விடாமல் இருக்கும் போது, எந்தவொரு நபரைப் பார்த்தாலும் பயந்து ஒதுங்கி நிற்கும் அல்லவா.
அது போல் தான், இன்றைக்கு, சில பெற்றோர்கள் சுத்தம் சுத்தம் என்று, குழந்தைகளை தரையில் கூட தவழ விட மாட்டார்கள். மேலும் சிலர் தங்களுடைய குழந்தையை வேறு யாரும் தொட விடாமல் பார்த்துக் கொள்வார்கள். அதனால் அவர்களின் உடலுக்கு நல்ல கிருமி எது, தீங்கு விளைவிக்கும் கிருமி எதுவென்று தெரியாமல் இருக்கும். அதனால் எளிதாக அலர்ஜியால் பாதிக்கப்படுவார்கள். அதனால் தான், குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களின் உடலுக்கு நல்ல கிருமி, கெட்ட கிருமி இரண்டையும் ஓரளவு பழக்கப்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். என்றைக்குமே சுத்தமாக இருப்பது ஆரோக்கியமானது தான், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதீத சுத்தம் மட்டுமே இங்கு கேள்விக்குரியது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் சிலருக்கு மரபணு ரீதியாகவே அலர்ஜி ஏற்படும். அதாவது ஒரு சிலர் எங்க தாத்தாவுக்கு இந்த வகையான பயிறு சாப்பிட்டால் தடிப்பு வரும், எங்க பாட்டிக்கு விறகு அடுப்பில் நின்று கொண்டிருந்தாலே மூச்சுத் திணறல் ஏற்படும் என்பார்கள். அதனாலும் சிலருக்கு பரம்பரை ரீதியாகவே சில விஷயங்கள் உடலுக்கு செட் ஆகாமல், தற்போதைய பருவ மாற்றங்களை தாக்குப் பிடிக்க முடியாமல் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. மேலும் சிலருக்கு, வைரஸ் பாதிப்பினாலும், சிகரெட் புகையினாலும், புகை அதிகமிருக்கும் இடத்தில் இருப்பதாலும் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பும் அதிகமிருக்கிறது.
இம்மாதிரியான சூழலில் வசிப்பதாலோ அல்லது மரபணு ரீதியாக பாதிக்கப்படும் போதோ, தங்களுக்கு அலர்ஜி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.அதாவது அலர்ஜியால் பாதிக்கப்படும் போது, மருத்துவரின் ஆலோசனையோடு சில பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. அதாவது, ஒரு சில பிளட் டெஸ்ட் மற்றும் ஸ்கின் டெஸ்ட் மூலம் பரிசோதனை செய்து, அதன்மூலம் அலர்ஜியின் பாதிப்பின் காரணத்தை நம்மால் தெளிவாகக் கண்டறிய முடியும்.
இம்மாதிரியான பருவகால மாற்றங்களில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்தவொரு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் எளிதில் கண்டுபிடித்து சரி செய்யக்கூடிய காலகட்டத்தில் நாம் இருப்பது நமக்கு ஒரு வரப்பிரசாதம். அதனால், அலர்ஜி நமக்கு இருக்கிறது என்பதையும் எளிதாக கண்டுபிடிக்கலாம், மேலும் அதை சரி செய்வதற்கான சில முறைகளையும் நாம் பின்பற்றலாம்.
உதாரணத்திற்கு, சிலருக்கு டிராவல் செய்து கொண்டிருக்கும் போதே கண்ணிலிருந்து நீர் வெளியே வந்த படியே இருக்கலாம் அல்லது சிலருக்கு வீடு சுத்தம் செய்யும் போது தும்மல் வரலாம். இந்த இரண்டு உதாரணங்களுமே செய்து முடித்த ஒரு மணி நேரத்திற்குள் தும்மலோ, கண்ணில் நீர் வருவதோ தொடர்ச்சியாக இருந்தால், அலர்ஜி இருக்கிறது என்பதை நம்மால் கண்டறிய முடியும். இந்த சூழலில் நமக்கு தும்மலும், கண்ணீரும் வருகிறது என்ற புரிதல் இருந்தாலே போதுமானது.
அப்படி தெரிந்த பின்னாடி, டிராவல் செய்யும் போது கண் கண்ணாடி அணிவதும், வீட்டை சுத்தம் செய்யும் போது மாஸ்க் அணிந்து கொண்டு சுத்தம் செய்யும் போது, அலர்ஜி வருவதைத் தடுக்க முடியும். இனி வரும் காலங்களில் அலர்ஜி ஏற்படுகிறது என்றால், அதற்கான சிறந்த சிகிச்சைமுறை எதுவென்றால், அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்ற சரியான காரணத்தைக் கண்டறிந்து, அதை தவிர்த்து விட்டோமென்றாலே போதுமானது என்பது தான் சிறந்த விழிப்புணர்வாகும்.