?நேர்த்திக்கடன் ஒருவருக்குப் பதிலாக மற்றவர் செய்யலாமா? சில நேரங்களில் நேர்த்திக்கடன் செய்ய வேண்டிக் கொண்டவர்கள் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்?
– எ.மூர்த்தி, சென்னை.
நேர்த்திக்கடன் அவரவர்கள் தான் செய்ய வேண்டும். ஆனால், விதிவிலக்குகள் உண்டு. ஒரு உதாரணம் சொல்கின்றேன். ஆண்டாள் அழகருக்கு ஆயிரம் அண்டா அக்கார அடிசில், ஆயிரம் அண்டா வெண்ணையும் சமர்ப்பிப்பதாக மானசீகமாக வேண்டிக் கொண்டாள். ஆனால் பிற்காலத்தில் வந்த ராமானுஜர் ஆண்டாள் வேண்டிக் கொண்டதை அழகருக்கு நிறைவேற்றிக் கொடுத்தார். எனவே, ஒருவர் நேர்த்திக்கடனை மற்றவர் செய்வதில் ஒரு தவறும் இல்லை. ஒருவர் வாங்கிய கடனை அடுத்தவர் கொடுத்தால் கடன் கொடுத்தவர் வேண்டாமென்றா சொல்வார்? நான் யாருக்குக் கடன் கொடுத்தேனே அவரே நேரில் கொடுத்தால் தான் வாங்கிக் கொள்வேன் என்றா சொல்வார்.
எனவே ஒருவருக்குப் பதிலாக மற்றவர்கள் செய்யலாம் தவறில்லை. அதே நேரம் இன்னொரு விஷயமும் சொல்லி விடுகின்றேன். நீங்கள் யாருக்காவது நேர்த்திக் கடன் செய்ய வேண்டிக் கொண்டால். வேண்டிக் கொண்டவருக்கு இடைஞ்சல் தருவது போல வேண்டிக் கொள்ளக் கூடாது. அதைப் போலவே சக்திக்கு மீறிய விஷயங்களை வேண்டிக் கொண்டு சங்கடப் படக் கூடாது.
அது செய்யவும் முடியாது மனதிலும் உறுத்திக்கொண்டே இருக்கும். உனக்கு வேலை கிடைத்தால் நான் கோயிலுக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்கிறேன் என்று வேண்டிக் கொள்ளலாம். உனக்கு வேலை கிடைத்தால் என் குடும்பத்தோடு உன்னையும் அழைத்துக்கொண்டு உன் செலவில் கோயிலுக்கு வந்து உனக்கு மொட்டை போடுகிறேன் என்று வேண்டிக்
கொண்டால் அது சங்கடத்தைத் தரும்.
?ஆரோக்கியமாக இருக்க என்ன வழி?
– ருக்மணி, கரூர்.
மகிழ்ச்சி தான்வழி. ஆனந்தம் தான் வழி. ஆன்மிகத்தின் பயன்கூட பேரானந்தம் பெறுவது தானே. எப்பொழுதும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பதற்றப்படாமல் கடமையைச் செய்து வந்தால், அதுவும் ரசனையோடு செய்து வந்தால் மகிழ்ச்சி இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். சமீபத்தில் ஒரு இதய நோய் மருத்துவர் ஒரு குறிப்பு கொடுத்தார். மூன்று விஷயங்கள் விட்டுவிட்டால் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் இருப்பீர்கள் என்றார். அவர் ஆங்கிலத்தில் சொன்ன மூன்று விஷயங்கள் இதுதான். பதற்றப்படாதீர்கள்.(Hurry) கவலைப்படாதீர்கள்.(worry) எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.(curry).
?மனிதனின் முரண்பாடாக எதைச் சொல்லலாம்?
– மகாலட்சுமி, சென்னை.
மனிதன் சிலரை நேசிக்கவும் செய்கின்றான். சிலரை வெறுக்கவும் செய்கின்றான். நேசிப்பவர்கள் செய்யும் குறைகள் கண்ணில் படுவதில்லை. வெறுப்பவர்களின் நிறைகள் கண்ணில் படுவதில்லை. சுயநலமிக்க மனிதர்களின் முரண்பாடு இது. இதை நீக்கிக் கொண்டால் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடையலாம்.
?பிரச்னைகள் வராமல் இருக்க என்ன வழி?
– க.முத்துபாண்டி, முசிறி.
சிலரிடம் கேட்காதீர்கள். சிலரிடம் சொல்லாதீர்கள். சிலரிடம் பேசாதீர்கள். நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். வாயைக் கட்டுப்படுத்திக் கொண்டால் பல பிரச்னைகளை நாம் தீர்க்க வேண்டியதில்லை. தானே தீர்ந்து விடும்.
?உயர்ந்த மனிதனுக்கு என்ன வேண்டும் அறிவா? ஆற்றலா?
– வரதராஜன், சின்னதிருப்பதி.
இரண்டும்தான். ஆனால், அதைவிட முக்கியம் மூன்று முத்தான குணங்கள் ஒன்று அன்பு மயமான மனம் இரண்டு துன்பப் படுபவர்கள் சொல்லும் விஷயங்களைப் பொறுமையோடு கேட்கும் காது. மூன்று பிறருக்கு உதவும் கைகள்.
?முறையாக கோபூஜை செய்ய இயலவில்லை என்றால் என்ன செய்யலாம்?
– பானுமதி, கோவை.
முறையாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். இருந்தாலும் பல காரணங்களினால் செய்ய முடியவில்லை என்றால் பசுவுக்கு கீரையோ பழமோ கொடுத்து வணங்குங்கள். அதுவும் கோபூஜைக்கு சமானமான பலனைத் தரும்.
?தெய்வ நம்பிக்கை அவசியமா?
– சி.எஸ்.மதிமாறன், ஈரோடு.
நம்பிக்கை என்பதால் அவசியம்தான் தெய்வம்தான் துணை. இந்தக் காரியத்தை நிறைவேற்றித் தருவார் என்று நம்பு கிறோம். அது நடக்கிறது இது ஒரு உளவியல் உண்மையும் கூட. உதாரணமாக மனிதனுக்கு இல்லாத நோயை இருப்பதாக நம்ப வைத்து விட்டால் அவனுடைய உடலே அந்த நோயை உருவாக்கி விடும் என்று அறிவியலாளர்கள் சொல்லுகின்றார்கள்.இதை மனதிற் குப் பொருத்திப் பாருங்கள்.
மனது தெய்வம் என்பதை நம்புகிறது. நம் கஷ்டத்தை அவர் தீர்ப்பார் என்று அவரிடம் பிரார்த்தனை செய்கிறது. அந்தப் பிரார்த்தனை பலிக்கும் என்று மனது உறுதியாக நம்புகிறது. அது நடக்கிறது. பிரார்த்தனைக்கு பலனும் கிடைக்கிறது. பெரியவர்கள் மனம் நிறையச் சொல்லும் வாழ்த்துக்கும் இதே பலன் தான் கிடைக்கிறது. காரணம் அவர்கள் நம்பிச் சொல்லுகின்றார்கள். நாமும் நம்பி ஏற்றுக் கொள்கின்றோம். இந்த விஷயங்களை புரிந்து கொண்டால்தான் தெய்வ நம்பிக்கை அவசியம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
?இன்னின்ன வரிசைப்படித்தான் ஆலயத்தில் வணங்க வேண்டும் என்ற முறை இருக்கிறதா?
– சுகுமாறன், சென்னை.
முறை இருக்கிறது. ஆனால், எல்லா நேரத்திலும் எல்லா ஆலயங்களிலும் இதைப் பின்பற்ற முடிவதில்லை. உதாரணமாக வைணவத்தில் தாயாரைச் சேவித்து விட்டுத்தான் பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்பார்கள். ஆனால் பல நேரங்களில் தாயார் சந்நதி போகும் வழி அடைபட்டிருக்கும். அல்லது வேறு ஏதோ விசேஷம் நடந்து கொண்டிருக்கும். எனவே இந்த விஷயங்களைக் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம். பெருமாள் சந்நதியில் உள்ள துவார பாலகர்களிடம் மனதால் அனுமதி பெற்று உள்ளே செல்லுங்கள். அங்கே பெருமாளுடைய திருவடி திருமார்பு பாருங்கள். அந்த திருமார்பில் தாயார் காட்சி தருவார். அந்தத் தாயாரை வணங்கி விட்டு பெருமாளை வணங்கினால் முறையாக வணங்கியதாக ஆகிவிடும்.
?பக்குவம் அடைதல் என்பது எதைக் குறிக்கும்?
– சுகந்தி ஸ்ரீநிவாசன், மதுரை.
எந்தச் சூழ்நிலைகளையும் மிகச் சரியாக யாருக்கும் பாதிப்பில்லாமல் கையாளத் தெரிந்தால் பக்குவம் அடைந்து விட்டீர்கள் என்று பொருள். ஏதோ காரணத்தினால் ஒருவர் நம்மை புண்படுத்துகின்றார். உடனே, அவரைத் திரும்ப பதிலுக்குப் பதில் வார்த் தையால் புண்படுத்தக்கூடாது. “என்ன காரணமோ தெரியவில்லை நன்றாகப் பேசுபவர்… இன்று ஏன் இப்படிப் பேசுகிறார்’’ என்று தெரியவில்லை” என்று பொறுமையோடு அணுகினால் நாம் குண முதிர்ச்சி அடைந்து விட்டோம் என்று பொருள். இதை ஆன்மிகம் மட்டும்தான் தரும். இதற்கு ஒரு அருமையான நிகழ்ச்சி.
வைணவ ஆச்சாரியார் நம்பிள்ளை மிகப் பிரபலமாக இருந்த காலம். அவருடைய வாக்கு அமிர்தமாக இருக்கும். நம்பெருமாள் சந்நதியை சேவித்து விட்டு நம்பிள்ளையின் காலட்சேபம் கேட்காமல் யாரும் வீட்டுக்குப் போக மாட்டார்கள். இதைப் பார்த்து பெருமாளுக்குக் கைங்கரியம் செய்யக்கூடிய ஒரு வருக்கு (கந்தாடை தோழப்பர்- முதலியாண்டான் வம்சம்) பொறாமை வந்தது. அவர் ஒருமுறை சந்நதி என்றும் பார்க்காமல் பல சீடர்கள் முன்னிலையில் நம்பிள்ளையை வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டார். நம்பிள்ளை உடனே அவரோடு சண்டைக்குப் போகாமல் அவருடைய வீட்டுக்குச்சென்றார்.
திட்டிய அந்த வைணவர் தாம் காலையில் கடுமையாகப் பேசியதற்கு பழி தீர்ப்பதற்காக வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டார். அப்பொழுது நம்பிள்ளை சொன்னார். பெருமாளின் அருகில் பரம சாதுவாக கைங்கரியம் செய்யக்கூடிய நீங்கள் என்னைத் தகாத வார்த்தைகளால் சொல்லும் படியாக ஆகிவிட்டது என்று சொன்னால், அதற்குக் காரணமாக நான் இருந்து விட்டேனே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. அதனால் உங்களிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று வந்தேன்.
இதைச் சொன்னவுடன் திட்டியவர் நெகிழ்ந்து விட்டார்.‘‘நான் அல்லவா மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட நீர் அல்லவா நம்மைத் தேடிவந்து மன்னிப்பு கேட்கிறீர். நீர் தான் ஆச்சாரியர். இந்த உலகுக்கே குரு என்று பாராட்டி, தம்மை மன்னிக்கும் படி வேண்டிக் கொண்டார். இந்த மனப்பான்மைக்குத்தான் பக்குவம் என்று பெயர்.
?மனம், மூளை இரண்டும் ஒன்றா?
– துரையப்பன், மானாமதுரை.
மூளையின் சூட்சுமம் தான் மனம் ஒன்றை நினைக்கிறோம் என்றால் மூளைதான் நினைக்கிறது. ஆனால், மூளை நினைப்பதாக நாம் சொல்வதில்லை “உன்னை நினைத்தேன்” என்று நெஞ்சைத்தான் காட்டுவோம். எனவே, இந்த விஷயத்தை அதிகம் குழப்பிக் கொள்ள வேண்டாம் பொதுவாக மூளை அறிவுக்கும் மனது உணர்ச்சிக்கும் அடையாளப்
படுத்தப்படுகிறது.
?பழமொழி என்று சொல்கிறார்களே, பழமொழி என்றால் என்ன?
– தீபிகா, அம்பத்தூர், சென்னை.
பழம்போல் இனிமையான மொழி என்று எடுத்துக் கொள்ளலாம். பல காலமாக வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வருகின்ற சொல் அதாவது பழைய மொழி என்ற எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் பதிவு செய்யப்படாத வாய்மொழி வழக்காகவும், நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. தமிழ் இலக்கிய வரலாற்றில் பழமொழிக்கு என்றே ஒரு தனி நூலாக பழமொழி நானூறு உள்ளது. சில பழமொழிகளை கவனித்துப் பாருங்கள். அப்படியே வாழ்வியலை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.
1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
4.செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
5. கரந்தப் பால் காம்பில் ஏறாது.
6. கரும்பு கசப்பது வாய்க் குற்றம்.
7. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
8. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
9. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
ஒவ்வொரு வரிக்கும் ஒரு கட்டுரை எழுதலாம். ஒவ்வொரு பழமொழியையும் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தால் அதுவே பல சம்பவங்களைச் சொல்லும். சில பிரச்னைகளுக்கு தீர்வையும் சொல்லும்.
?தர்ப்பணம் எப்போதெல்லாம் செய்ய வேண்டும்?
– சிவா, தேனி.
அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண காலம் முதலிய நாட்களில் அவசியம் செய்ய வேண்டும். முறையாக செய்ய வேண்டு மானால் வருடத்திற்கு 94 நாட்கள் செய்ய வேண்டும். ஷண்ணவதி என்று சொல்வார்கள். இப்பொழுது இத்தனை நாட்களிலும் செய்பவர்கள் குறைவு. எனவே குறைந்த பட்சம் மேலே சொன்ன நாட்களிலாவது தர்ப்பணம் செய்ய வேண்டும். அதைப்போல முன்னோர்களின் ஆண்டு நினைவு நாளை (சிராத்தம்) அவசியம் கடைப்பிடித்து வழிபாடு செய்ய வேண்டும்.
தேஜஸ்வி