?சமயத்தில் சிலர் செய்யும் உதவி நமக்குப் பெருத்த ஆறுதலை அளிக்கிறது. அப்போது அவரைப் பார்த்து ‘சரியான நேரத்தில் கடவுள் போல வந்து காப்பாற்றினாய்’ என்று சொல்கிறோம். அப்படியானால் ஆபத்து நேரத்தில் கடவுள் வந்து காப்பாற்றுவாரா?
– ஆர். நாகராஜன், பாண்டிச்சேரி.
ஆபத்து சமயத்தில்தான் என்றில்லை, எப்போதுமே கடவுள் நம்முடன் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறார். நல்லது, கெட்டதை நம் மனசாட்சி பீடத்தில் அமர்ந்துகொண்டு நமக்கு அறிவுறுத்துகிறார். அதைப் புரிந்து கொள்வதும், புரிந்துகொள்ளாததும் அவரவர் பக்குவத்தைப் பொறுத்தது. நேரடி தரிசனமாக கடவுள் வந்து நம்மைக் காப்பதில்லையே தவிர, மனிதாபிமானம் மிக்க சிலரை உரிய நேரத்தில் அனுப்பி வைத்து, சில பிரச்னைகளைத் தீர்க்கத்தான் செய்கிறார். அப்போதுதான் நாம் உள்ளம் நெகிழ்ந்து அப்படிச் சொல்கிறோம். கடவுள் நமது சோதனை காலம் என்றில்லை, எப்போதுமே நம்முடன்தான் இருக்கிறார்.
?எங்கள் வீட்டுப் பூஜையறையில் சிவலிங்கம் வைத்து பூஜித்து வருகிறோம். ஆராதனை, அபிஷேகம் எல்லாம் வீட்டுப் பெரியவர்கள் செய்து வருகிறார்கள். ஆனால், கன்னிப்பெண்கள் சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யக்கூடாது என்கிறார்களே?
– சிவசுந்தரி பட்டாபிராமன், குரோம்பேட்டை.
செய்யலாம். தவறே இல்லை. நாம் சுத்தமாக இருந்துகொண்டு செய்யும் பட்சத்தில் அவ்வாறு செய்யப்படும் அபிஷேகத்தை இறைவன் முழுமனதோடு ஏற்கிறான். தனக்கு அபிஷேகம் செய்பவர் யார் என அவன் பார்ப்பதில்லை. செய்பவரின் மனதையே பார்க்கிறான். எனவே நல்ல நோக்கத்தோடும், தூய மனதோடும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். அர்த்தநாரீஸ்வரனான ஈஸ்வரன், அதனால் மனம் மகிழவே செய்வான். சிவன் அபிஷேகப் பிரியர். ஆகவே அவருக்குத் தாராளமாக எல்லோரும் அபிஷேகம் செய்யலாம்.
?அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?
– வே. பாலகிருஷ்ணன், விருத்தாசலம்.
உடலின் எட்டு அங்கங்களும் தரையில் படும்படி விழுந்து வணங்குவது அஷ்டாங்க நமஸ்காரம். அதாவது, முன்தலை, முகவாய், இரு கைகள், புஜங்கள் இரண்டு ஆகியவை பூமியில் படும்படியாகத் தரையில் படுத்து, கழுத்தைத் திருப்பித் திருப்பி வலது, இடது காதுகளும் தரையில் படும்படியாக வணங்கும் முறை. ஆண்கள் நமஸ்கரிக்கும் முறை இது. பஞ்சாங்க நமஸ்காரம் என்பது பெண்கள் நமஸ்கரிக்கும் முறை & நெற்றி உச்சி, இரண்டு கை, இரண்டு முழந்தாள் இவை ஐந்தும் தரையில் பட நமஸ்கரிப்பது.
?அது என்ன, பெரிய கம்பசூத்திரமா?’ என்று சொல்கிறார்களே, கம்பசூத்திரம் என்றால் என்ன?
– ஸி. கேசவமூர்த்தி, ஈரோடு.
அது கம்பசூத்திரம் அல்ல; ‘கம்ப சித்திரம்’. கம்பனுடைய ராமாயணத்தைப் படிப்பவர்கள், அந்த சொல் அலங்காரத்தில் மயங்குவதோடு, அவர் வர்ணிக்கும் காட்சிகளை, சம்பவங்களை எல்லாம் அப்படியே தத்ரூபமாக, மனக்கண்முன் கொண்டுவர முடியும். அத்தகைய விஷுவல் எஃபெக்ட் உள்ள பாடல்கள் அவை. அப்படி ஒரு திறமையினை, சிறப்பினை யாரும் எளிதில் அடைந்துவிட முடியாது என்பது உண்மை. அதனால்தான், ஒருவர் தன்னால் முடியக்கூடிய எந்த வேலையையும் ‘இது ஒன்றும் கம்பச் சித்திரம்போலக் கடினமான வேலையல்ல’ என்று சவால் விடுக்கும் தோரணையில் அப்படிச் சொல்கிறார்.