Wednesday, March 26, 2025
Home » தோள்பட்டை வலியிலிருந்து தப்பிப்போம்!

தோள்பட்டை வலியிலிருந்து தப்பிப்போம்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி

தோள்பட்டை வலி, நெஞ்சு வலி இதை இரண்டையும் எப்போதும் பெரும்பாலானோர் குழப்பிக் கொள்வது உண்டு. இரண்டுக்குமான வித்தியாசம் உண்டு என்பதைப் பற்றி மருத்துவர்கள் நிறைய கூறி இருப்பதை படித்தும், தொலைக்காட்சி, ஊடகங்களிலும் பார்த்து அறிந்திருப்போம் இருந்தாலும் இது சார்ந்த பயமும் குழப்பமு இருந்து கொண்டேதான் இருக்கிறது.

தோள்பட்டை வலியானது தோள் மூட்டு மற்றும் அதை சுற்றி உள்ள தசைகள், தசை நார்களில் வலியை ஏற்படுத்தும் தோள் மூட்டை அசைக்கும் போது வலி அதிகரிக்கும். ஆனால் நெஞ்சு வலியானது நெஞ்சில் இருந்து துவங்கி கை, தோள்பட்டை, கழுத்து, தாடை, முதுகில் பரவும் ஒரு வித அசௌகரியம், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு அழுத்தம் போன்ற அறிகுறிகளுடன் காணப்படும்.

ஒரு வேளை தோள்பட்டை வலியா இல்லையா என உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் குடும்ப நல மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்வது சிறந்தது சமீபத்தில் இறந்த சீரியல் நடிகர் ஒருவரைப் பற்றிய பேட்டியில், அவரது மனைவி தனது கணவருக்கு மாற்று மருத்துவத்தில் அதிக நம்பிக்கை உண்டு என்றும் அதனால் அவர் ஸ்கேன் , எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்ய முனையவில்லை கடைசியில் கட்டாயப்படுத்தி அவரை பரிசோதனை செய்ய வைத்தோம் அப்போது அவரது நோய் முற்றி கடைசிக் கட்டத்தை நெருங்கி இருந்தது முதலிலேயே கண்டுபிடித்து இருந்தால் அவரைக் குணப்படுத்தி இருக்கலாம் என்று கூறி வருந்தினார்.

எந்த மருத்துவம் பார்க்கலாமா இல்லை வேண்டாமா என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம், ஆனால் சில பரிசோதனைகளை மருத்துவர் பரிந்துரைத்தால் அதை செய்வதே சிறந்தது அப்போது தான் நீங்கள் எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர்களால் சரியான முறையில் சிகிச்சை அளிக்கமுடியும்.

தோள்பட்டை அமைப்பு :

*தோள்பட்டையானது பந்துக்கிண்ண மூட்டு வகையைச் சேர்ந்தது அதாவது எல்லா திசைகளிலும் , அச்சுகளிலும் இயங்கும் அல்லது எளிதாக சுழலும் வகையில் அமைந்துள்ளது.

*கை, தோள்பட்டை, கழுத்துப் பட்டை ஆகிய முக்கிய மூன்று எலும்புகளும் அதன் இணை எலும்புகள், தசை , மூட்டிணைப்பு தசை நார்கள் மற்றும் தசைநாண்களால் உருவானதே தோள்பட்டை மூட்டு.

*இதில் நான்கு சிறுசிறு மூட்டுகள் உண்டு.

*நான்கு சிறு மூட்டுகளில் கை எலும்பானது தோள்பட்டை எலும்போடு சேரும் பகுதிதான் பந்து கிண்ண மூட்டு வகையைச் சார்ந்தது மற்ற மூன்று மூட்டுக்களை விடவும் இது சற்று பெரியது.

*இதைச் சுற்றி வலிமையான சவ்வு உள்ளது அதை கேப்சூல்(capsule)என்று அழைப்போம்.

தோள்பட்டை வலி :

தோள்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள மூட்டுகளில் தசை , தசை நாண்கள், மூட்டிணைப்பு தசை நார்களில் உண்டாகும் வலியைத்தான் தோள்பட்டை வலி (Shoulder pain) என்று கூறுகிறோம்.அனைத்து வயதினருக்கும் தோள்பட்டை வலி ஏற்படும். பகுதியினர் வாழ்வில் ஒரு முறையாவதும் தோள்வலியை அனுபவித்து இருப்பர். இது அவர்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறையையும் பாதிக்கும்.

காரணங்கள்:

1.எலும்பு முறிவு
2.எலும்பு மூட்டு விலகுதல்
3.ஆர்த்ரைட்டிஸ்
4.தோள்பட்டை இறுக்கம்
5.தசை நார் அழற்சி/ ஜவ்வு அழுத்தம் (impingement)
6.தோள்பட்டை உறுதியற்ற தன்மை (instability)
7.ஜவ்வு அல்லது தசை நார் கிழிதல்
8.அதிகப்படியான தோள் மூட்டு பயன்பாடு
9.ஜவ்வு வீக்கம்
10.இதயம், நுரையீரல் போன்ற உதரவிதானத்திற்கும்(diaphragm) மேலேயுள்ள உடல் உள்ளுறுப்புகளில் வலி ஏற்பட்டால் அது தோள்பட்டையிலும் பிரதிபலிக்கும் அல்லது பரவலாம்.

“கையை மேல தூக்க முடியல , தலை முடியை சீவ முடியல, உடை மாற்ற சிரமம் தோள்ல வலி நைட்டு சரியா தூங்க முடியல”ன்னு நம் வீட்டில் உள்ள ஒருவருக்கோ இல்லை அங்கம்பக்கத்தினரோ கூறுவதை கேட்டிருப்போம்.எனக்கு ஃப்ரோசன் சோல்டர், பெரிய ஆர்த்ரைட்டிஸ் என்று கூறுவதையும் கேட்டிருப்போம்..
இந்த வாரம் அதைப்பற்றி ஓரளவு விரிவாக தெரிந்து கொள்வோம்.

பெரி ஆர்த்ரைட்டிஸ் மற்றும் ஃப்ரோசன் ஷோல்டர்:

*ஃப்ரோசன் ஷோல்டர் 40-60 வயதிற்கு உட்பட்டவர்களையே அதிகம் பாதிக்கிறது

*ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.

*பெரி ஆர்த்ரைட்டிஸ் ஷோல்டர் அல்லது தோள்பட்டை வலி என்பது பொதுவான தோள்வலி மற்றும் கையை பக்கவாட்டில் உயர்த்த முடியாமையாகும்.

*ஆனால் ஃப்ரோசன் ஷோல்டரானது வலியை உண்டாக்குவது மட்டுமல்லாமல் நாளடைவில் தசைகள் மற்றும் ஜவ்வு இறுக்கமடைந்து கையை மேலே உயர்த்துவதில் சிரமத்தை உண்டாக்கும்.
தானாக அல்லது உதவியுடனோ கூட கையை அசைப்பதில் உயர்த்துவதில் சிரமம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மூட்டு இயக்கத்தின் வரம்பையும் குறைக்கும்.

விளைவுகள் உண்டாக்கும் காரணிகள்/ இடர் காரணிகள் (Risk factors):

*எலும்பு முறிவு மற்றும் எலும்பு மூட்டு விலகல் ஆகிய காரணிகளால் மூட்டு இயக்கம் தடைப்படுதல்.

*தசைநார்கள் வீக்கம்

*தசை நார் அழற்சி

*பக்கவாதம்

*கீல்வாதம்

*நுரையீரல் நோய்

*RSD

*ஹைப்பர் தைராய்டிசம்

*இதயநோய்கள்

*நீரிழிவு நோய்

*விறைப்பு வலிப்பு (Tonic seizures)

*தசை திரிபு (Strain) மற்றும் அறுவை சிகிச்சை.

சுயபரிசோதனை:

தோள்பட்டையை அனைத்துத் திசையிலும் இயக்கும்போது வலியில்லாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்..

*தோள்பட்டை இறுக்கம்

*தோள்பட்டையை‌ மேலே உயர்த்த இயலாமை.

*இயக்க வரைமுறை குறைதல் ( limited mobility)

*வலி கீழ்நோக்கி கைகளுக்கு பரவுதல்.

*மந்தமான வலி தோன்றுதல்

*தலை சீவுதல் மற்றும் உடை அணிந்து கொள்ள இயலாமை

*கைகளை பின்னே கொண்டு செல்ல இயலாமை

*வலி உண்டாக்கும் தோள்பட்டை பக்கம் ஒருக்களித்து படுத்து உறங்க இயலாமை.

இந்த அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்து கொண்டால் தோள்பட்டை வலியை வரும் முன் காக்கலாம்.

ஃப்ரோசன் ஷோல்டர் மூன்று நிலைகள்

1. முதல் நிலை :

முதல் 3-6 மாதங்களில் தசை மெதுவாக இறுக்கமான நிலையை அடையத் துவங்கும்.

*தோள்பட்டையில் வலி

*இரவிலும் வேலை செய்யும் போதும் வலி அதிகரிக்கும்.

*வலி கீழ்நோக்கி கைகளுக்கு பரவலாம்

*அசௌகரியம் உண்டாக்கும்.

2.இரண்டாம் நிலை :

3-18 மாதங்களில் ,

*வலி சற்று குறைந்திருக்கும்

*அன்றாட செயல்பாடுகள்(Activity of daily Living ) கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும்.

*தோள்பட்டையை அனைத்துத் திசையிலும் இயக்க இயலாது.

3.மூன்றாம் நிலை:

இது நோய் மீட்டெடுக்கும் நிலை (Recovery phase) எனலாம் . 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையான கால அளவாகும்.

*வலி குறைந்து , ஓரளவிற்கு மூட்டு இயக்கம் செயல்படும்.

பரிசோதனை முறைகள்:

*எக்ஸ் – ரே
*எம்ஆர்ஐ
*ஆர்த்தோஸ்கோபி
*வீக்கம் உள்ளதா என்பதைக் கண்டறியும் சில அடிப்படை இரத்த பரிசோதனைகள் .
*மருத்துவர்கள், எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளால் செய்யப்படும் சில சிறப்பு எலும்பு தசை மூட்டுக்களுக்கான இயக்க பரிசோதனைகள் .

சிகிச்சை முறைகள் :

முதல் நிலை:

*பொது மருத்துவர்கள் மற்றும் எலும்பு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் வலிநிவாரணி மாத்திரைகள், ஊசி.

*பிசியோதெரபி

*மெழுகு ஒத்தடம், அல்ட்ரா சவுண்ட் தெரபி, மாய்ஸ்ட் ஹீட், ஐஸ் ஒத்தடம்.

*மூட்டு இயக்கத்திற்கான உடற்பயிற்சிகள் தினமும் மூன்றிலிருந்து ஐந்து முறையாவதும் செய்ய வேண்டும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை:

*பிசியோதெரபி மற்றும் மூட்டு இயக்கம் மற்றும் வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகளை முதல் 8 வாரங்களுக்காவதும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

*பிசியோதெரபிஸ்டுகளால் செய்யப்படும் சில வகை மூட்டு இயக்க சிறப்பு சிகிச்சை முறைகள்.

*இவை எதுவும் பலனளிக்கவில்லை என்றால் எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை பரிந்துரைப்பர்.பெரும்பாலும் இரண்டு வருடங்களுக்குள்ளாக குணமாகிவிடும் எனினும் தொடர்ந்தே வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

*பெண்கள் வலிநிவாரண சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால் மகப்பேறு மருத்துவரை அணுகி மார்பு பரிசோதனை செய்து வேறு ஏதாவது காரணிகள் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்வது சிறந்தது.

You may also like

Leave a Comment

six − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi