Wednesday, June 18, 2025
Home மருத்துவம்மகப்பேறு மருத்துவம் குழந்தையின்மை பிரச்னையில்லாத உலகத்தை உருவாக்குவோம்!

குழந்தையின்மை பிரச்னையில்லாத உலகத்தை உருவாக்குவோம்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு தம்பதியரின் கனவுப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது குழந்தைப்பேறு. ஆனால் வாழ்க்கைமுறை, உணவுமுறை மாற்றங்களால் பலருக்கும் அது கனவாகவே மாறி விடுகிறது. இன்றைய அறிவியல் உலகம் தந்திருக்கும் யுகப்புரட்சி அனைத்தையும் சாத்தியப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. சரியான சிகிச்சை முறை மற்றும் மகப்பேறு நிபுணரின் ஆலோசனையும் இருந்தால் குழந்தைப்பேறு எளிதே. இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் சென்னையின் பிரபல கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கம்.

குழந்தையின்மை பிரச்னைக்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

35 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் ஒரு வருடம் தொடர்ச்சியாக கருத்தரிக்க முயற்சித்தும் வெற்றி பெறவில்லை என்றால் மருத்துவரை சந்திக்கலாம். 35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் 6 மாதங்கள் முயற்சித்தும் கருத்தரிக்காத நிலையில் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். அதுவே பெண்களின் வயது 40 வயதுக்கு மேல் என்றால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் சற்றுக் குறைவு என்பதால், 3 மாதங்களுக்கு பிறகு மருத்துவரை அணுகலாம்.

PCOS, எண்டோமெட்ரியோசிஸ், தைராய்டு, ஒழுங்கற்ற மாதவிடாய், கருப்பை குழாய் அடைப்பு, கருச்சிதைவுகள் அல்லது கர்ப்பப்பை மற்றும் வயிறு சார்ந்த அறுவை சிகிச்சைகள் பெண்கள் செய்திருந்தால், ஆணுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவு, விந்தணு இயக்கத்தில் பாதிப்பு அல்லது விந்துப்பை அறுவை சிகிச்சை செய்திருந்தால் காத்திருப்பு இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

குழந்தையின்மைக்கான காரணிகள்?

பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, கருக்குழாய் அடைப்பு, எண்டோமெட்ரியாசிஸ் சாக்லெட் சிஸ்ட், கருமுட்டையின் பாதிப்பு, கர்ப்பப்பைக்கட்டி போன்றவை குழந்தையின்மைக்கான காரணங்களாக உள்ளன. ஆண்களுக்கு விந்தணு தரம், எண்ணிக்கை குறைவு, விந்தணு இயக்கம், ஹார்மோன் பிரச்னைகள் காரணங்களாக கூறப்படுகிறது. ஆனால் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் அதாவது, புகை, மது, உடல்பருமன், மரபணுக் கோளாறுகளும் குழந்தையின்மைக்கான காரணிகளாக கூறப்படுகிறது.

தீர்வுகளும் சிகிச்சைகளும்…

குறைபாடுகளைப் பொறுத்துதான் சிகிச்சை அளிக்க முடியும். கருமுட்டை சரியாக உருவாகாதவர்களுக்கு ஓவுலேஷன் இன்டெக்ஷன் சிகிச்சை அளிக்கப்படும். இது ஒரு எளிய சிகிச்சை. மாதவிடாய் ஆன இரண்டாம் நாளிலிருந்து ஆறாம் நாள் வரை மருந்துகள் மூலம் முட்டையின் வளர்ச்சியை கண்காணித்து, இயற்கையான முறையில் கருத்தரிக்க வைக்கலாம். கருக்குழாயில் அடைப்பு இருந்தால் லேப்ரோஸ்கோபி சிகிச்சை தீர்வாகும்.

அதிலும் பிரச்னை நீடித்தால், IVF சிகிச்சை மேற்கொள்ளலாம். சாக்லெட் சிஸ்ட் இருப்பவர்களுக்கு லேப்ரோஸ்கோபியால் எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னையை சரிசெய்து இயற்கையாக கருத்தரிக்க வைக்கலாம். அது தவறினால் IUI, IVF சிகிச்சை முறைகள் உள்ளன. கர்ப்பப்பை கட்டிக்கு ஹிஸ்ட்ரோஸ்கோபி, லேப்ரோஸ்கோபி மூலம் கட்டியை நீக்கி இயற்கை முறையில் கருத்தரிக்க செய்யலாம்.

விந்தணுக்கள் குறைபாடுகள் இருந்தால் அதற்கான காரணங்களை கண்டறிந்து ஆன்டி ஆக்சிடன்ட் மருந்துகள் கொடுத்து விந்தணுக்களின் வளர்ச்சியை சீர் செய்யலாம். சிகிச்சை ஒரு பக்கம் என்றால், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும். துரித உணவுகள் தவிர்த்து, மன உளைச்சலை நீக்கி, இரவு நல்ல தூக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் இயற்கையான கருத்தரிப்புக்கு கைகொடுக்கும்.

சிலருக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. விவரிக்கப்படாத மலட்டுத்தன்மை (Unexplained infertility) என்று அழைக்கப்படும் இந்தப் பிரச்னைக்கு ஓவுலேசன் இன்டெக்ஷன் சிகிச்சை முறை கையாளலாம். முடியாத பட்சத்தில் IUI சிகிச்சை மேற்கொள்ளலாம். இது தோல்வியுற்றால், IVF, ICSI சிகிச்சை வழங்கப்படும். சிகிச்சை பல உள்ளன. ஆனால் அதை சரியான வயதில் நேரத்தில் செய்வது அவசியம்.

PCOS பிரச்னை?

Polycystic Ovary Syndrome, ஹார்மோன் சீர்குலைவால் ஏற்படும். பெண்களின் உடலில் ஆண் ஹார்மோன்கள் (ஆண்ட்ரோஜன்) அளவு அதிகரிக்கும் போது, முட்டை வெளியீடு (ஓவுலேஷன்) பாதிக்கப்படுகிறது. லியூடினைசிங் ஹார்மோன் (LH) அதிகரிப்பு மற்றும் ஃபோலிகில்-ஸ்டிமுலேடிங் ஹார்மோன் (FSH) குறைவு, முட்டைபை (Follicle) வளர்ச்சியைத் தடுக்கிறது.
80% PCOS பாதிப்புள்ள பெண்கள் உடல் பருமன் அல்லது இன்சுலின் எதிர்ப்பு கொண்டவர்கள்.

தாய், சகோதரிக்கு PCOS இருந்தால், அடுத்தவரையும் பாதிக்கும். உடற்பயிற்சி இன்மை, பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகள் ஹார்மோனை சீர்குலைக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, முகப்பரு, தலைமுடி உதிர்வு, உடல் பருமன், முகத்தில் முடி வளர்ச்சி, PCOSன் அறிகுறிகள்.

இந்தப் பிரச்னையை குணப்படுத்த முடியாது. ஆனால் முறையான மருத்துவ ஆலோசனை மூலம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். உடல் எடையை குறைத்து, உயர் புரத உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

உடல் பருமன் குழந்தையின்மை பிரச்னையை பாதிக்குமா?

ஆம்! உடல் பருமன் ஆண், பெண் இருவரையுமே பாதிக்கும். பெண்கள் உடல் பருமனாக இருந்தால், ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும். இதனால் முட்டை வெளியீடு நடைபெறாமல் குழந்தையின்மைக்கு வழிவகுக்கும். கரு உருவாகுவதற்குத் தேவையான சூழலும் பாதிப்படையும். உடல் பருமனால் கர்ப்ப காலத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும்.

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தினை குறைக்கும். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரித்து, விந்தணு உற்பத்தியை பாதிக்கும். மேலும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, விறைப்புத்தன்மை குறைபாடும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சரிவிகித உணவு முறை…

சரிவிகித உணவு முறை கருவுறுதல் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஹார்மோன் சமநிலையினை சீராக்கி, இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலத்தை பாதுகாக்கும். உணவில் புரதங்கள், நல்ல கொழுப்புகள், இனப்பெருக்க ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவுகிறது. உதாரணமாக, அதிக சர்க்கரை அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தி, PCOS நிலைகளை மோசமாக்கும். இது குழந்தையின்மைக்கு வழிவகுக்கும்.

ஃபோலிக் அமிலம், இரும்பு, மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கர்ப்பகால ஆரோக்கியத்திற்கு முக்கியம். ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு நிறைந்த கீரை, ப்ரோக்கோலி, நார்ச்சத்து மற்றும் B வைட்டமின்கள் உள்ள கினோவா, பழுப்பு அரிசி, ஒமேகா-3 நிறைந்த மீன்கள், சியா, ஆளி விதைகள், பாதாம், வால்நட், புரத உணவுகளில் முட்டை, பருப்பு வகைகள், ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த பெர்ரி பழங்கள், ஆரஞ்சு, வைட்டமின் D சத்துள்ள பால் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக சர்க்கரையுள்ள உணவுகள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கலாம். மிதமான காஃபின் பாதுகாப்பானது. மது மற்றும் புகைப்பழக்கம் விந்தணு மற்றும் முட்டையின் தரத்தை பாதிக்கும். PCOS உள்ளவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை சாப்பிடலாம். ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகள் விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கருத்தரித்தல் தொடர்பாக அறிவுரை?

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். சரிவிகித உணவு முறையை கடைபிடியுங்கள். உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிக்கவும். உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா, நீச்சல் மேற்கொள்ளலாம். கருத்தரித்தலுக்கு வயது மிக முக்கியம். காலம் கடத்தாமல், கருவுறுதல் நிபுணரின் ஆலோசனை பெற்று அதற்கான சிகிச்சையினை மேற்கொள்ளலாம்.

குழந்தைப்பேறுக்கான சிகிச்சை முறைகள்?

தம்பதியினரின் பிரச்னையை பொருத்து சிகிச்சைகள் மாறுபடும். IUI (Intrauterine Insemination), தரமான கருமுட்டை உருவாக்கப்பட்டு அதில் விந்தணுக்களை செலுத்தி ஆய்வகத்தில் தயார் செய்யப்பட்ட நிலையில் கருவினைகருப்பைக்கு செலுத்துவது. IVF (In Vitro Fertilization), நிறைய கருமுட்டைகளை உருவாக்கி, அதை வெளியே எடுத்து அதில் விந்தணுவை செலுத்தி ஆய்வகத்தில் வைத்து கருவாக உருவான பின்பு கருப்பைக்கு மாற்றப்படும்.

ICSI (Intracytoplasmic Sperm Injection), விந்தணுப் பிரச்னை இருந்தால், நல்லதொரு விந்தணுவை எடுத்து கருமுட்டைக்குள் நேரடியாக செலுத்தப்படும். பெண்களுக்கு கருப்பை குழாய் அடைப்பு, எண்டோமெட்ரியோசிஸ் அல்லது ஃபைப்ராய்டுகளுக்கு லேப்ரோஸ்கோபி மூலம் தீர்வு காணலாம். இன்றைய நவீன காலகட்டத்தில் பிரச்னையை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கக்கூடிய அதிசிறந்த மருத்துவமுறைகள் வந்துவிட்டன. நம்பிக்கையோடு அணுகினால், வாழ்க்கை பிரகாசமாகும்’’ என்றார் டாக்டர் ரம்யா ராமலிங்கம்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi