நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. இதில் பிப்ரவரி 1ம் தேதி பாஜ அரசின் சார்பில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமான வார்த்தை ஜாலங்களோடு, மாயாஜல அறிக்கையாக கருதப்படும் இந்த பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடந்தன. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாத இந்த ஒன்றிய பட்ஜெட்டை தமிழகத்தில் ஆளும் கட்சி மட்டுமின்றி, எதிர்கட்சிகளும் விளாசி தள்ளி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்ட தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்க உள்ளது.
மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் இக்கூட்ட தொடரில் எழுப்பப்பட உள்ளதால், கூட்டங்களில் விவாதம் அனல் பறக்கும் எனலாம். தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வு என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் வலிந்து திணிக்க முடிவெடுத்துவிட்ட ஒன்றிய அரசு, அதற்காக கல்வி நிதியை நிறுத்தி வஞ்சித்து வருகிறது. இந்தியை திணிக்க என்ன என்ன முயற்சிகள் எல்லாம் மேற்கொள்ள முடியுமோ, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இந்தியை எப்படியாவது தேசிய மொழியாக மாற்றிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது.
இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகத்தில் தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டங்களும், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வரும் எழுச்சியும் பாஜவை சற்றே சிந்திக்க வைக்கின்றன. இதன் காரணமாக மும்மொழி கொள்கையை முன்னிறுத்துவதில் சற்று தயக்கமும் காட்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, ஒன்றிய அளவில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தையும் குறைத்திட, தொகுதி மறுசீரமைப்பை பாஜ கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இப்போது 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இவற்றை வெட்டி ஒட்டும்போது, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடுகிறது. தமிழகம் மட்டுமின்றி, பாஜவிற்கு அடிக்கடி கசப்பு மருந்தை தரும் கேரளா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் இத்தகைய சித்து விளையாட்டுக்களை அரங்கேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதையெல்லாம் தடுத்து மாநிலங்களின் உரிமைகளை காத்திட தமிழக எம்.பிக்கள் கைகோர்த்து நிற்கின்றனர்.
இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த தமிழக எம்.பிக்கள் கூட்டத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படும் அவல நிலை குறித்து நடப்பு நாடாளுமன்ற கூட்ட தொடரில் திமுக எம்.பி.க்கள் தங்கள் கருத்தை வலுவாக முன்வைக்க உள்ளனர். தொகுதி மறுசீரமைப்பில் பாரபட்சத்தை எதிர்கொள்ள தமிழகம் மட்டுமின்றி, மேற்கு வங்கம், பஞ்சாப் என 7 மாநிலங்களை சார்ந்த கட்சிகளை ஒருங்கிணைத்து போராட்ட களத்திற்கு செல்லவும் திமுக தயாராக உள்ளது.
இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்களும் ஜனநாயகம் காக்க குரல் கொடுக்க உள்ளதால், இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்தில் அனல் பறக்கும். மாநிலங்களுக்கான உரிமைகளை பாதுகாப்பதோடு, மக்கள் தொகையை காரணம் காட்டி தொகுதி விகிதாசாரத்தை குறைக்க கூடாது என்பதில் தமிழக எம்.பி.க்கள் உறுதியாக உள்ளனர். மும்மொழி பிரச்னையில் தமிழகம் இந்தி திணிப்பை எதிர்க்கிறதே தவிர, இந்தி மொழியையோ அல்லது அம்மொழி பேசும் மக்களையோ அல்ல என்கிற வாதத்தையும் தெளிவாக முன் வைக்க தமிழக எம்.பி.க்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்தி மொழி குறித்த வீண் விமர்சனங்கள் இன்றி, நம் தாய்மொழியை காக்க அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.