தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. மற்ற கோடை விடுமுறைகளை ஒப்பிடுகையில், இவ்வாண்டு கோடைக்காலமானது மாணவ, மாணவிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது எனலாம். எப்போதுமே மே மாத பிற்பகுதியில் மாணவர்களும், பெற்றோரும் கோடை வெயிலின் கொடுமை தாங்காமல், மலைப் பிரதேசங்களையும், சுற்றுலாத் தலங்களையும் நாடிச் செல்வது வழக்கம். ஆனால் இவ்வாண்டு அக்னி நட்சத்திர காலம் முடியும் முன்னரே, தென்மேற்கு பருவமழையும், இதமான காற்றும் மாணவ, மாணவிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
பள்ளிகள் இன்று திறக்கும் நிலையில், கடந்த ஒரு வார காலமாக வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, பள்ளி சுவர்களை அழகுப்படுத்தும் பணிகள் நடந்தேறின. இன்று மாணவ, மாணவிகள் குதூகலத்தோடு பள்ளிக்குச் சென்று, தங்கள் நட்பு வட்டாரத்தை மகிழ்ச்சியோடு சந்திக்க உள்ளனர். தமிழ்நாடு அரசும் மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலே சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை பெற்றோருக்கு தெரிவிக்கும் வகையில் முதல் நாளிலே இருந்தே வாட்ஸ் அப் குழுக்களை தொடங்கி செயல்படுத்தவும் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. இந்தியாவில் கல்வி அடிப்படையில் தலைசிறந்து விளங்கும் தமிழ்நாடு மாநிலமானது, இவ்வாண்டு பள்ளிகளில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த உள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டு முதல் கட்டாயம் வாரத்திற்கு 2 பாடவேளைகள் உடற்கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
சில மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில் காலை முதல் மாலை வரை படிப்பு, படிப்பு என மாணவ, மாணவிகளை புத்தகங்களிலே மூழ்கடிப்பதால், அரசு உடற்பயிற்சி வகுப்புகளும் அவசியம் என வலியுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்களின் மனநல மேம்பாட்டை மெருகேற்றும் வகையில், வாரத்தில் ஒரு பாடவேளை நன்னெறி வகுப்புக்கு ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாடவேளையில் வகுப்பு ஆசிரியர்களே மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் மற்றும் சமூகப் பாடங்களை எடுத்திட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய மாணவ சமூகம் செல்போனில் அதிக நேரம் மூழ்கிக் கிடப்பதை தடை செய்யும் வகையில், வாரம் ஒரு வகுப்பு நூலக வகுப்பாக மாற்றிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வேளையில் பள்ளி ஆசிரியர்கள் நல்ல நூல்களை மாணவர்களை படிக்கச் செய்து, அவர்கள் குறிப்பெடுத்துக் கொள்ள ஆவன செய்ய வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிகளை பொறுத்தவரை பள்ளி மேலாண்மைக் குழுவும், பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களும் முறைப்படி ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ளன. இவற்றை செம்மையாக செயல்படுத்தி பள்ளிகளின் கட்டமைப்பு சிக்கல்கள் மற்றும் மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கும் இன்றைய நாளில் இருந்தே மாணவ, மாணவிகள் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தங்கள் அடையாள அட்டை அல்லது பள்ளிகளில் ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட பயண அட்டை ஆகியவற்றை காட்டி பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளலாம். அரசும், பெற்றோருக்கு துணை நிற்கும் நிலையில், மாணவ, மாணவிகள் புதியதொரு கல்வியாண்டை இன்று முதல் எதிர்கொள்கின்றனர். மாணவ, மாணவிகள் வாழ்வில் புதியன பூக்கட்டும் என வாழ்த்துவோம்.