இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதற்கான மூல விதை சென்னை மாகாணத்தில் 1930களில் போடப்பட்டது. இப்போது இந்தி பேசும் மக்கள் பரவலாக வாழும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட இந்தி எதிர்ப்புக்கான குரல்கள் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளன. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிப்பது இன்று, நேற்றல்ல, காலம் காலமாக நடந்தேறி வருகிறது. 1937 தொடங்கி 1940ம் ஆண்டு வரை தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டங்கள் நடத்திய வரலாறு உண்டு. திராவிடர் கழகமும், திமுகவும் இந்தி எதிர்ப்பில் தீவிரமாக பங்காற்றின.
கடந்த 11 ஆண்டு காலமாக இந்தியாவில் பாஜவின் ஆட்சிக்காலத்தில் இந்தியை எப்படியாவது தேசிய மொழியாக மாற்றிவிடுவது என்ற வைராக்கியத்தோடு, ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. மும்மொழி கொள்கை, பாடங்களில் இந்தியை மறைமுகமாக புகுத்துவது, ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி இடம் பெறுவது என ஒன்றிய அரசின் பல திட்டங்கள் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் திணிப்பதாகவே உள்ளது. தமிழ்நாட்டு பள்ளிகளிலும் இந்தியை கற்பித்தால் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்வோம் என ஒன்றிய அரசு கூறி வருகிறது. இதை எதிர்த்து தொடர்ந்து தமிழக அரசு குரல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் போராட்டங்களை இப்போது மகாராஷ்டிர மாநிலமும் கையில் எடுக்க தொடங்கியுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் மாரட்டிய மக்களின் எழுச்சி நேரடியாகவே தெரிந்தது. மராட்டிய மக்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கண்டு இப்போது பாஜ அரசே பம்முகிறது.
உத்தரபிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் பொதுமக்கள் இந்தி படித்தும் மக்கள் முன்னேற்றம் கண்டுவிட்டார்களா என்றால் இல்லை. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் எப்படியாவது இந்தியா முழுவதும் கொண்டு சென்றுவிட வேண்டும் என்கிற ஒன்றிய அரசின் ஒரே குறிக்கோள் நிச்சயமாக பலிக்க போவதில்லை. இந்தியை காட்டிலும் தமிழ் தொன்மையான இலக்கிய மொழியாகும். மற்ற இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையாக இருந்தும், தமிழ் மொழி மட்டும் சமஸ்கிருதத்தின் துணையில்லாமல் தனித்து இயங்க கூடியதாக உள்ளது.
தமிழகத்திலும் சமஸ்கிருத பேச்சு வழக்குகளும், சமஸ்கிருத மந்திரங்கள் நிலை கொண்டபோதும், அதற்கான எதிர்ப்புகளும் அதிகம் எழுந்தன. இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பி ஏற்கும் வரை ஆங்கிலமே தொடரலாம் என முன்னாள் பிரதமர் நேரு, இந்தியை யார் மீதும் திணிக்காமல் நாட்டின் பன்முக தன்மையை காத்தார். ஆனால் கடந்த 11 ஆண்டுகாலமாக பிரதமர் மோடி இந்தியை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் திணிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார்.உலக தொடர்பு மொழியான ஆங்கிலமே தமிழர்களுக்கு இன்றளவும் உலகளவில் வேலைவாய்ப்புகளை அள்ளி தரும் நிலையில், இந்தியை திணிப்பது எவ்விதத்திலும் ஏற்று கொள்ள முடியாததாகும்.
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீட்டில் ஓர வஞ்சனை, மும்மொழி கொள்கை, கீழடி உள்ளிட்ட தமிழ் மக்களின் பழமை நாகரீகத்தை ஏற்றுக் கொள்ளாமல் இழுத்தடிப்பது என பாஜ அரசின் துரோக செயல்களுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டிக் ெகாண்டே இருக்கின்றனர். ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்தால், வருங்காலத்திலும் பாஜவிற்கு தமிழகம் மறக்க முடியாத பாடங்களை புகட்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.