ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் சாலையில் நடமாடிய சிறுத்தை வாகனத்தை கண்டதும் 6 அடி உயர நுழைவுவாயில் கேட்டை தாவிக் குதித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைகள் ஊருக்குள் நுழைந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி கொல்வது தொடர்கதையாக உள்ளது.
இதற்கிடையே இன்று இரவு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சாம்ராஜ் நகர் செல்லும் சாலையில் ராமாபுரம் அருகே சாலையில் சிறுத்தை நடமாடியதைக்கண்டு அவ்வழியே ஜீப்பில் சென்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே சிறுத்தை நடமாட்டத்தை வீடியோ எடுத்தனர். வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்ட சிறுத்தை அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தின் முன்புறம் உள்ள 6 அடி உயர நுழைவு வாயில் கேட்டை ஒரே தாவில் தாவிக் குதித்து ஓடி மறைந்தது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.