திருமலை: திருப்பதியில் ஆந்திர மாநில வனத்துறை முதன்மை வன பாதுகாவலர் நாகேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடைபாதையில் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். தற்போது சிறுத்தை மற்றும் கரடி நடைபாதையில் சுற்றி வருகிறது. ஆகையால், இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் எச்சரிக்கையுடன் கூட்டமாக செல்ல வேண்டும். 100 பேர் கொண்ட பக்தர்கள் குழுக்களாக செல்வது மிகவும் நல்லது. திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வனத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
வாரிமெட்டு பகுதியில் 80 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அலிபிரி மலை பாதையிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நடைபாதையில் தடுப்புச்சுவர் அமைப்பது சாத்தியம் இல்லை. தடுப்பு வேலி அமைக்கலாமா? என்பது பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.