கோத்தகிரி: கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையின் வீடியோ காட்சிகள் வெளியாகி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. கோத்தகிரி அதன் அருகில் உள்ள கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் இரவு நேரங்களில் யானை, சிறுத்தை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் வனப்பகுதியைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது.
இரவு நேரங்களில் சிறுத்தை வனப்பகுதியைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றை வேட்டையாடி செல்கிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.இந்த நிலையில், அரவேணு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு காவலர் குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை இரையைத்தேடி பல பகுதிகளில் சுற்றித்திரிந்த வீடியோ வெளியானது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.