சென்னை : லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில்,செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் லியோ படத்தை திரையிட காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி இந்த வழக்கு மீது நீதிபதி அனிதா சுமத் நேற்று விசாரணை நடத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட அவர், லியோ திரைப்படத்தை அதிகாலை 4 மணிக்கு ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்று ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், “கடந்த முறை ஒரு படத்திற்கு 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் உயிரிழந்தார். சட்டம் – ஒழுங்கு பிரச்சனை உள்ளது.அனைத்து படங்களுக்கும் 5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் இன்று நீதிபதி அனிதா சுமத் வெளியிட்ட உத்தரவில், “லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது.காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி படத் தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்க வேண்டும்.காலை 7 மணி முதல் லியோ திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யும்,” என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து காட்சிகளும் ரசிகர்களுக்குத்தானே திரையிடப்படுகின்றன என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, சிறப்பு காட்சி விவகாரத்தில் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனிடையே காலை 9 மணிக்கு தொடங்கினால் 5 காட்சிகளை திரையிட இயலாத நிலை இருப்பதை அரசுக்கு எடுத்துரைத்துள்ளதாக கூறிய படக்குழு, உயர்நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரிடம் மனு அளிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த மனுவை பரிசீலித்து மாலை 4 மணிக்கு முடிவை அறிவிப்பதாக தமிழ்நாடு அரசும் உறுதி அளித்துள்ளது.