புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாகவும், அரியானாவில் அக்டோபர் 1ம் தேதியும் ஒரே கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இங்கு அக்டோபர் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வந்தது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26ம் தேதியும், அரியானா சட்டப்பேரவை பதவிக்காலம் நவம்பர் 3ம் தேதியும், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வரையும் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடைசியாக 2014ல் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 2018ம் ஆண்டு ஆட்சி கவிழ்ந்த பிறகு சட்டப்பேரவை முடக்கப்பட்டது. பின்னர் 2019ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன்பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. நேற்று பிற்பகலில் தேர்தல் தேதி அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இது குறித்து பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது: 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் என்பது உலக அளவில் நடந்த மிகப் பெரிய தேர்தல் நடைமுறை செயல்பாடாகும். அது அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடந்து முடிந்தது. உலகின் அனைத்து ஜனநாயகத்துக்குமான மிகவும் வலிமையான ஜனநாயகப் பரப்பை அந்தத் தேர்தல் உருவாக்கியுள்ளது. எந்த விதமான வன்முறையுமின்றி அமைதியாக தேர்தல் நடந்தது. ஒட்டுமொத்த தேசமும் தேர்தல் திருவிழாவைக் கொண்டாடியது. நாம் சில சாதனைகளையும் படைத்துள்ளோம். முதல் முறையாக உலக அளவில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சமீபத்தில் நாங்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானாவுக்கு சென்றிருந்தோம். அங்கு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்க விரும்பினர். அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மக்களவைத் தேர்தலின் போது, ஜம்மு காஷ்மீரில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை அறிவிப்பத்தோடு மட்டுமின்றி, மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறி தங்களின் குரலினை உயர்த்த விரும்புகின்றனர் என்பதற்கு சான்றாக இருந்தது. ஜனநாயகத்தின் இந்தப் பார்வை என்பது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதையேக் காட்டுகிறது.
யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் 90 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 74 பொதுத் தொகுதிகள், பட்டியலில் பிரிவினருக்கான தனித்தொகுதி 7, பட்டியல் – பழங்குடிகளுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 44.46 லட்சம் ஆண்கள், 42.62 லட்சம் பெண்கள். 3.71 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். 20.7 லட்சம் இளம் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 19ம் தேதி நிறைவடைய இருக்கிறது. ஆகஸ்ட் 20ம் தேதி வாக்களர் பட்டியல் வெளியிடப்படும்.
அரியானாவில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 73 பொதுத் தொகுதிகள், தனித்தொகுதி 17. மாநிலத்தில் மொத்தம் 2.01 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1.06 கோடி, பெண்கள் 0.95 கோடி. 40.95 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியிடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 24 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவுகான மனு தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 27. தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஆகஸ்ட் 28-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன.
மனுக்களைத் திரும்பப் பெற ஆகஸ்ட் 30-ம் தேதி கடைசி நாள். வாக்குப்பதிவு செப்டம்பர் 18ம் தேதி நடைபெறும். இரண்டாம் கட்டத்தில் 26 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதற்கான மனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்.5. மனுக்கள் செப்.6ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை செப்.9ம் தேதிக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். வாக்குப்பதிவு நாள் செப்டம்பர் 25. மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளுக்கு நடக்க இருக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்.12. மனுக்கள் செப்.13ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன.
மனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் செப்.17. வாக்குப்பதிவு அக்டோபர் 1ம் தேதி நடைபெற உள்ளது. மூன்று கட்டங்களுக்குமான வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. அரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்.12. மனுக்கள் செப்.13ம் தேதி மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை செப்.16ம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வாக்குப் பதிவு அக்டோபர் 1-ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. இவ்வாறு தெரிவித்தனர். அப்போது தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் உடன் இருந்தனர்.
* மகாராஷ்டிராவில் தாமதம் ஏன்?
2019ம் ஆண்டு அரியானா சட்டப்பேரவை தேர்தலுடன் மகாராஷ்டிரா தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்த முறை மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறுகையில், ’ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடத்த வேண்டியது இருப்பதால் பாதுகாப்பு படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. எனவே ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிந்ததும், உரிய நேரத்தில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும்’ என்றார்.
ஜம்மு காஷ்மீர்
மொத்த தொகுதிகள் 90
முதல் கட்டம் – 24 ெதாகுதிகள்
மனு தாக்கல் ஆகஸ்ட் 20
கடைசி நாள் ஆகஸ்ட் 27
மனு பரிசீலனை ஆகஸ்ட் 28
மனு வாபஸ் ஆகஸ்ட் 30
வாக்குப்பதிவு செப்டம்பர் 18
இரண்டாம் கட்டம்-26 தொகுதிகள்
மனு தாக்கல் ஆகஸ்ட் 29
கடைசி நாள் செப்.5.
மனு பரிசீலனை செப்.6
மனு வாபஸ் செப்.9
வாக்குப்பதிவு செப்டம்பர் 25.
மூன்றாவது கட்டம்- 40 தொகுதிகள்
மனு தாக்கல் செப்.5
கடைசி நாள் செப்.12.
மனு பரிசீலனை செப்.13
மனு வாபஸ் செப்.17
வாக்குப்பதிவு அக்டோபர் 1
3 கட்டங்களுக்கும் வாக்கு
எண்ணிக்கை – அக்டோபர் 4
அரியானா சட்டப்பேரவை தேர்தல்
மொத்த தொகுதிகள் 90
மனு தாக்கல் செப்.5
கடைசி நாள் செப்.12.
மனு பரிசீலனை செப்.13
மனு வாபஸ் செப்.16
வாக்குப் பதிவு அக்டோபர் 1
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4
* வயநாடு உள்பட 47 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல்?
வயநாடு மக்களவை தொகுதி மற்றும் 46 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை ஒரே நேரத்தில் தேர்தல் ஆணையம் நடத்தும் என்று தலைமை தேர்தல் ராஜீவ் குமார் தெரிவித்தார். கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு காரணமாக அங்கு உடனடியாக இடைத்தேர்தலை நடத்த முடியாது. அதே போல் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 46 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இப்போது இடைத்தேர்தலை நடத்த முடியாது. பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் வெள்ளபாதிப்பு உள்ளது. உபியில் 10 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும்’ என்றார்.
* உத்தவ், சரத்பவார் கட்சிகள் எதிர்ப்பு
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில்,’ மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்து பல பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. எனவே தான் மகாராஷ்டிரா தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களைக் கையாளலாம் என்று நினைத்தோம். இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர், அரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைக்கும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லிக்கும் தேர்தல் நடத்த வேண்டும். அதே சமயம் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தப்படும்’ என்று தெரிவித்தார். இதற்கு மகாராஷ்டிரா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
சிவசேனா உத்தவ் பிரிவின் ஆதித்யா தாக்கரே தனது டிவிட்டர் பதிவில், ‘ஒரு தேசம், ஒரே தேர்தல் என்று கூறும் தேர்தல் ஆணையம் மகாராஷ்டிராவில் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு பாதுகாப்புப் படைகளை ஒரு காரணம் என்று கூறுகிறது’ என்றார். தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சி செய்தி தொடர்பாளர் கிளைட் க்ராஸ்டோ கூறுகையில்,’ மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மக்கள் படுதோல்வியை கொடுத்துள்ளதால், பாஜ தலைமையிலான கூட்டணி தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் தேர்தல் தேதியை தள்ளிவைத்துள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த தந்திரங்கள் எதுவும் அவர்களுக்கு வேலை செய்யப்போவதில்லை, ஏனென்றால் மகாராஷ்டிரா மக்கள் புத்திசாலிகள். அவர்கள் வரவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ கூட்டணியை நிராகரிப்பார்கள்’ என்று கூறினார்.
* 3 மாநிலங்களுக்கு அடுத்து தேர்தல்?
ஜம்மு காஷ்மீர், அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதியை தொடர்ந்து அடுத்து மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், டெல்லி சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.