சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 2024 தேர்தலின் போது மாநிலங்களவை சீட் தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரு ராஜ்சபா சீட் வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில் தற்போது சீட் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களை சந்தித்து கூறியதாவது:
ராஜ்யசபா சீட் 2026ல் தேமுதிகவிற்கு வழங்கப்படும் என்று அதிமுக தரப்பில் அறிவிப்பு வந்துள்ளது. 2024ல் நாடாளுமன்ற தேர்தலின்போதே 5 எம்பிக்கள், ஒரு ராஜ்யசபா எம்பி வழங்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. வாய்வழியாக மட்டுமின்றி எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது உண்மை. இன்றைக்கு 2026ல் ராஜ்யசபா சீட் என அறிவித்துள்ளனர். இங்கு நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும், தேர்தலை ஒட்டிய அரசியல் நிகழ்வாக தான் பார்க்கப்படுகிறது.
எனவே, 2026ல் ஜனவரி 9ம் தேதி கடலூர் மாவட்டத்தில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு அறிவிக்கப்படும். இன்னும் சில நாட்களில் 234 தொகுதிக்கு பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படும். எங்கள் கட்சியின் வளர்ச்சியை நோக்கி இந்த 6 மாத காலங்களில் பயணிக்க உள்ளோம். தேர்தல் நோக்கிதான் எங்கள் பயணமும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
* திமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு நன்றி
திமுக பொதுக்குழுவில் கேப்டன் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகவிற்கு நன்றி. கேப்டன் இறப்பின் போது முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் எங்களுடன் இருந்து எங்கள் துயரத்தை பகிர்ந்து கொண்டனர் என்பதை என்றைக்கும் மறக்க மாட்டோம் என பிரேமலதா கூறினார்.