சென்னை: தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை தலைமை தேர்தல் அதிகாரி நியமித்துள்ளார். தமிழகத்தில், அடுத்தாண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வது, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைளையும் எடுத்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பிலும் டெல்லியில் கடந்த சில மாதங்களாக ஆலோசனை நடந்து வருகிறது. இதில் தமிழகத்தில் இருந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிகளும் கலந்து கொண்டு, தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அதிகாரிகளின் விவரங்களை அரசிதழில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் ஆட்சியர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர் நிலையில் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.