பெங்களூரு: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும், பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். இரண்டு முறை ஐ.சி.சி. தலைவராக இருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லேவின் பதவி காலம் முடிவடையவுள்ள நிலையில், ஜெய் ஷா போட்டியின்றி புதிய தலைவராக தேர்வாகி உள்ளார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய் ஷா மிகக் குறைந்த வயதிலேயே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்படி ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா வருகிற 1ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதையொட்டி பல கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட எக்ஸ் பதிவை பகிர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். பேட்ஸ்மேன், பவுலர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அற்புதமான ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரராக இந்தியா உருவாக்கிய மிகப்பெரிய லெஜெண்ட் ஜெய்ஷா, ஐசிசியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நாம் அனைவரும் எழுந்து நின்று கைதட்டுவோம் என பதிவிட்டுள்ளார்.