திண்டிவனம்: பாமகவில் தந்தை, மகன் உச்சகட்ட மோதலை அடுத்து கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு ராமதாஸ் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். கட்சியின் பொருளாளர் திலகபாமா, வக்கீல் பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நீக்கி ராமதாஸ் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். பதிலுக்கு அன்புமணியும் சென்னையில் தனியாக கூட்டங்கள் நடத்தி வருகிறார். மாவட்டங்கள் தோறும் பொதுக்குழு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இன்று தைலாபுரத்தில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு கலைக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கான பொறுப்புகளை பாமக நிறுவனர் ராமதாஸ் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தில் 4 மாவட்ட செயலாளர்கள். 4 மாவட்ட தலைவர்கள், ஒரு வன்னியர் சங்க மாநில செயலாளர் பதவிகளுக்கான நியமன கடிதங்களை ராமதாஸ் இன்று வழங்கினார். இதனை தொடர்ந்து நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த பாமக புதிய பொருளாளர் சையத் மன்சூர் உசேன் கூறியதாவது: பாமகவில் நிறுவனர் ராமதாசின் நியமனம் மட்டுமே செல்லும். அவருக்கு மட்டுமே முழு அதிகாரம். உள்ளது. திலகபாமாக பொருளாளர் என குறிப்பிடமுடியாது. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கையை ராமதாஸ் எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.