மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ‘பொய் உண்மையை விட வேகமாக பயணிக்கும். ஆனால், உண்மைதான் ஜெயிக்கும். இந்த பாலியல் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 2017ல் மலையாள நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கில், நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியை கேரள அரசு அமைத்தது. இந்நிலையில், இந்த கமிட்டியின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. இந்த அறிக்கையின் மூலமாக, கேரள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சிக்கியுள்ளனர். பாலியல் சர்ச்சையால் மலையாள திரையுலகம் பலத்த ஆட்டம் கண்டுள்ளது. நாள்தோறும் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சீண்டல்கள் அளித்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் ஜெயசூர்யா மீதும் பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தது. ஜெயசூர்யா தனது பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு முதல்முறையாக மறுப்பு தெரிவித்துள்ளார். இனி தனது நிலைப்பாடு குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் அவர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தற்போது என்மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை நான் சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். எனது வழக்கறிஞர்கள் குழுவினர், இந்த வழக்கு தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருக்கின்றனர். மனசாட்சி இல்லாதவர்களுக்கு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது என்பது மிகவும் எளிமையான விஷயம். ஆனால், தவறான பொய் குற்றச்சாட்டுகளை கூறுவது மிகவும் வலிதரக்கூடிய விஷயமாகும்.
உண்மையை விட பொய் வேகமாக பயணிக்கும். ஆனால், இறுதியில் உண்மைதான் எப்போதுமே ஜெயிக்கும். என்மீது எந்த குற்றமும் இல்லை. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். அதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். நம்முடைய நீதித்துறையின் மீது எனக்கு பரிபூரண நம்பிக்கை இருக்கிறது. எனது இந்த பிறந்தநாளை வேதனை மிகுந்த பிறந்தநாளாக மாற்ற உதவிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. எனது தனிப்பட்ட வேலையின் காரணமாக நானும், எனது குடும்பத்தினரும் கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவில் இருக்கிறோம். இந்த நேரத்தில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக என்மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. விரைவில் அமெரிக்காவில் எனது வேலைகளை முடித்துவிட்டு இந்தியா திரும்புவேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.