நாகை: சட்டரீதியாக அனுமதி கிடைத்ததால் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 15ம் தேதி முதல் மீண்டும் துவங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து நாகைக்கு இன்றிரவு சிவகங்கை கப்பல் வருகிறது. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முக்கிய துறைமுக நகரமாக நாகை விளங்கியது. காலப்போக்கில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எனவே நாகையில் இருந்து மீண்டும் கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் எதிரொலியாக கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ”செரியாபாணி” என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் வரவழைக்கப்பட்டது. இந்த பயணிகள் கப்பலுக்கு இரு நாட்டு பயணிகளிடையே அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி அக்டோபர் 23ம் தேதியுடன் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இதனால் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதன் பயனாக நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இலங்கை அரசு, பயணிகள் கப்பல் சேவை இனி தொடராது என்று அறிவித்ததால் குழப்பம் நிலவியது.
இந்நிலையில் கடந்த மே 13ம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதையடுத்து சிவகங்கை என்ற பெயரில் புதிய கப்பல் இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்துக்கு ஒப்பந்தம் எடுத்த தனியார் நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதி கிடைக்காததால், கப்பல் இயக்கம் மே 19ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 19ம் தேதியும் கப்பல் சேவை துவங்கப்படவில்லை.
சட்டரீதியான அனுமதி இன்னும் கிடைக்காததால் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. உரிய அனுமதி கிடைத்தவுடன் போக்குவரத்து துவங்கப்படும். அதனால் முன்பதிவு செய்தவர்கள் தங்களது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று தனியார் நிறுவனம் அறிவித்தது. இதற்கிடையில் சட்ட ரீதியாக இருந்த சிக்கல்கள் தீர்த்து கப்பல் இயக்குவதற்கான அனுமதி இப்போது கிடைத்துள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை என்ற கப்பல் இயக்கப்பட உள்ளது. இந்த கப்பல் சென்னையில் இருந்து இன்றிரவு நாகை துறைமுகம் வருகிறது. இதைதொடர்ந்து நாகையில் இருந்து சோதனை ஓட்டம் உட்பட பல்வேறு பரிசோதனை செய்யப்படுகிறது. வரும் 15ம் தேதி முதல் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கப்படும் என்று தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.