லீட்ஸ்: இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 டெஸ்ட்கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் முதல் டெஸ்ட் லீட்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471, இங்கிலாந்து 465ரன்கள் எடுத்தன. பின்னர் 6ரன் முன்னிலையுடன் 2வதுஇன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில். கே.எல்.ராகுல் 137, ரிஷப்பன்ட் 118ரன் எடுக்க 96 ஓவரில் 364 ரன்னுக்கு இந்தியா ஆல்அவுட் ஆனது. இதையடுத்து 371ரன் இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் கடைசி நாளான நேற்று முதல் விக்கெட்டிற்கு ஜாக் கிராலி-பென் டக்கெட் 188ரன் குவித்தனர். கிராலி 65 ரன்னில் வெளியேற அடுத்து வந்த ஒல்லி போப் 8, ஹாரி புரூக் டக்அவுட் ஆகினார். மற்றொருபுறம் பென்டக்கெட் 149ரன் விளாசினார். பென் ஸ்டோக்ஸ் 33ரன்னில் கேட்ச் ஆக, நாட் அவுட்டாக ஜோரூட் 53, ஜேமி ஸ்மித் 44ரன் அடித்தனர். 82ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 373 ரன் எடுத்த இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பென் டக்கெட் ஆட்டநாயகன் விருது பெற்றார். கடைசி நாளில் பும்ராவின் பவுலிங் எடுபடவில்லை. அவர் 19 ஓவரில் 57ரன் கொடுத்து ஒருவிக்கெட் கூட எடுக்கவில்லை. பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் 2 விக்கெட் எடுத்தனர். புதுகேப்டன் கில் தலைமையிலான இந்திய அணி 2025-27ம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது. 2வது டெஸ்ட் வரும் 2ம் தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. தோல்வி பற்றி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது: இது ஒரு அற்புதமான டெஸ்ட். வெற்றி பெற எங்களுக்கும் வாய்ப்பிருந்தது. ஆனால், நாங்கள் கேட்ச்களைத் தவறவிட்டோம். லோயர் ஆர்டர் பேட்டர்கள் சரியாக ஆடவில்லை. அதேநேரத்தில் ஒட்டுமொத்தமாக எங்களின் வீரர்கள் வெளிக்காட்டிய உத்வேகத்தையும் ஆடிய விதத்தையும் கண்டு பெருமைப்படுகிறேன். 430 ரன்களை எடுத்துவிட்டு டிக்ளேர் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால், நாங்கள் கடைசி 6 விக்கெட்டுகளை 20-25 ரன்களுக்குள் விட்டோம். அது நல்ல அணுகுமுறையே இல்லை. கடைசி நாளானஅவர்களின் ஓப்பனர்கள் சிறப்பாக ஆடிய போதுமே எங்களால் வெல்ல முடியும் என நினைத்தேன். ரிசல்ட் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.
வேகமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கிறோம். அதை சரி செய்வதற்கு என்ன வழி என்பதை யோசிக்க வேண்டும். அதேமாதிரி, இந்த பிட்ச்களில் கேட்ச் வாய்ப்பு கிடைப்பதும் ரொம்பவே அரிது. அதையும் நாங்கள் கோட்டைவிட்டோம். நாங்கள் ஓர் இளம் அணி. இன்னுமே கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். அடுத்த போட்டியில் இன்னும் மேம்படுவோம் என நம்புகிறேன்.’ என்றார். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், எங்களுக்கு இங்கு சில நல்ல நினைவுகள் உள்ளன. அதில் இன்றைய நாளையும் சேர்க்க வேண்டும். கடைசி நாளில் ஒரு பெரிய ஸ்கோரைத் துரத்தும் அற்புதமான டெஸ்ட் போட்டி. டக்கெட் சிறப்பாக பேட் செய்தார். ஜாக் அமைதியாக இருந்து 60 ரன்கள் எடுத்த விதமும் முக்கியமானது. தொடருக்கு இது ஒரு சிறந்த தொடக்கமாகும். அடுத்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம், என்றார்.
‘வாரி’ வள்ளல் பிரசித்….
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 20 ஓவரில் 128ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ஓவருக்கு சராசரியாக 6.40ரன் விட்டுக்கொடுத்தார். 2வது இன்னிங்சில் 15 ஓவரில் 92ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். சராசரியாக 6.13ரன் கொடுத்தார். இவர் ஒருநாள் போட்டியை விட மோசமாக ரன் கொடுத்தது தான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம். மேலும் 2வது இன்னிங்சில் பேட்டிங்கின் போது மறுபுறம் ஜடேஜா அதிரடியாக ரன் சேர்த்துக்கொண்டிருக்க, உங்களால் சிக்சர் அடிக்க முடியுமா என இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் உசுப்பேற்றிவிட, பஷிர் பந்தில் சிக்சருக்கு அடிக்க ஆசைப்பட்ட பிரசித் கேட்ச் ஆனார். அந்த பந்தில் ‘மட்டை’ போட்டிருந்தால் இந்தியா இன்னும் கூடுதலாக ரன் எடுத்திருக்கும்.
இந்தியாவின் வேதனை…..
* இந்திய அணி கடைசியாக ஆடிய 8 டெஸ்ட்டில் ஒரு வெற்றி, ஒரு டிரா, 6ல் தோல்வி அடைந்துள்ளது.
* டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து வெற்றிகரமாக சேசிங்செய்த 2வது பெரிய ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2022ல் எட்ஜ்பாஸ்டனில் 378 ரன்னை சேஸ் செய்துள்ளது.
* டெஸ்ட்டில் ஒரே போட்டியில் 5 வீரர்கள் சதம் விளாசியும் தோல்வியை சந்தித்த அணி இந்தியா தான்.
* டெஸ்டில் இந்தியா 2 இன்னிங்சிலும் சேர்ந்து 835 ரன் அடித்தும் தோல்வியடைந்துள்ளது. இது அதிக ரன் எடுத்தும் தோல்வியடைந்த போட்டியாக அமைந்தது. இதற்குமுன் 2014ல் அடிலெய்ட்டில் 759 ரன் எடுத்து தோல்வி அடைந்தது தான் மோசமாக இருந்தது.
* டெஸ்ட்டில் 4 இன்னிங்சிலும் 350 பிளஸ் ரன் அடிக்கப்பட்ட 3வது போட்டி இது. இதற்கு முன் 1921,1948ல்ஆஷஸ் தொடரில் இதுபோல் அடிக்கப்பட்டுள்ளது.
* தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸி. என சேனா நாடுகளில் ரிஷப்பன்ட் சதம் விளாசிய 5போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
பும்ராவின் திட்டத்தில் மாற்றமில்லை;
இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, பணிபளு காரணமாக 3 டெஸ்ட்டில் மட்டுமே ஆடுவார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்ததால் அதில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு பயிற்சியாளர் கம்பீர் கூறியதாவது: இல்லை, நாங்கள் திட்டங்களை மாற்ற மாட்டோம். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அடுத்தடுத்து முக்கிய தொடர் உள்ளது. எனவே அவர் 3 டெஸ்டில் மட்டும் ஆடுவார் என்பதில் மாற்றமில்லை, என்றார்.