லீட்ஸ்: இங்கிலாந்து-இந்தியா இடையே 5 டெஸ்ட் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் முதல் டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில் 147, ரிஷப் பன்ட் 134, ஜெய்ஸ்வால் 101 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன் எடுத்திருந்தது. 3வது நாளான நேற்று ஒல்லி போப் 106, பென் ஸ்டோக்ஸ் 20, ஹாரி புரூக் 99, ஜேமி ஸ்மித் 40, கிறிஸ் வோக்ஸ் 38 ரன்னில் அவுட் ஆகினர்.
100.4 ஓவரில் 465 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. இந்திய பவுலிங்கில் பும்ரா 5, பிரசித் கிருஷ்ணா 3, முகமது சிராஜ் 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் 6 ரன் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் வெளியேற பின்னர் வந்த சாய் சுதர்சன் 30 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆனார். நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் எடுத்திருந்தது. 96 ரன் முன்னிலையுடன் 4வது நாளான இன்று கே.எல்.ராகுல் 47, கேப்டன் கில் 6 ரன்னுடன் ஆட்டத்தை தொடங்கினர். இன்னும் 8 விக்கெட் கைவசம் இருக்க இன்று முழுநாளும் இந்தியா தாக்குப்பிடித்து ஆடி 400 ரன்னுக்கு மேல் எடுத்தால் மட்டுமே தோல்வியில் இருந்து தப்பமுடியும். ஏனெனில் கடைசி நாளில் இங்கிலாந்து அதிரடியாக ஆடி 400 ரன்வரை சேசிங் செய்ய முடியும். இதனால் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.
நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் பும்ரா கூறியதாவது: எனது காயம் பற்றிய எந்த விமர்சனத்தையும் பற்றி யோசிக்கமாட்டேன். நான் என் வேலையைச் செய்துகிட்டே இருப்பேன். நான் என்னால முடிஞ்சதையெல்லாம் தயார் பண்ணிக்கிறேன். மீதியை கடவுளிடம் விட்டுடறேன். கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிற பெரிய அதிர்ஷ்டம் எதுவா இருந்தாலும், அதை நான் முன்னெடுத்துச் செல்ல முயற்சி பண்ணுவேன். இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல முயற்சி செய்வேன். எதிர்காலம் குறித்து யோசிக்க மாட்டேன். களத்தில் இருக்கும் நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியே யோசிப்பேன். பிட்ச் எப்படி உள்ளது. பேட்டர் என்ன நினைக்கிறார். அவரின் விக்கெட்டை எப்படி எடுப்பது பற்றிதான் யோசிப்பேன். அடுத்து என்ன நடக்கும் அல்லது எத்தனை ஆட்டங்களில் விளையாடுவேன் என்பது பற்றி நான் யோசிப்பதில்லை. என் மீதான எதிர்பார்ப்புகளை நினைத்து கூடுதல் சுமையாக்கிக்கொள்ள விரும்பமாட்டேன். எனது முழுமையான சிறந்ததை கொடுத்தேனா என இன்றைய நாள் இரவில் என்னை நானே கேட்டுக்கொண்டு ஆம் என்றால் அமைதியாக துங்கப்போவேன், என்றார்.
பூம்…பூம்… பும்ராவின் சாதனை…
* பும்ரா டெஸ்ட்டில் 14வது முறையாக ஒரு இன்னிங்கில் 5 பிளஸ் விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதில் 12 முறை வெளிநாட்டு மண்ணில் எடுத்துள்ளார். இதன் மூலம் வெளிநாட்டில் அதிக முறை 5 பிளஸ் விக்கெட் எடுத்த கபில்தேவின் சாதனையை (12 முறை) சமன் செய்துள்ளார். கபில்தேவ் 66 டெஸ்ட்டில் இந்த இலக்கை எட்டிய நிலையில், பும்ரா 34 டெஸ்ட்டிலேயே அதனை சமன் செய்திருக்கிறார்.
* இங்கிலாந்தில் பும்ரா 3வது முறையாக 5 விக்கெட் எடுத்திருக்கிறார். மேலும் இங்கிலாந்தில் அவர் இதுவரை 42 விக்கெட் எடுத்துள்ளார். இஷாந்த் சர்மா 51, கபில்தேவ் 43 விக்கெட் எடுத்துள்ளனர்.
* 2024-25ம் ஆண்டு சீசனில் வெளிநாடுகளில் அவர் 4 முறை 5 விக்கெட் எடுத்துள்ளார்.
* தெ.ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் (சேனா நாடுகள்) அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய ஆசிய பவுலர்களில் முரளிதரனின் சாதனையை (10) முறை பும்ரா சமன் செய்துள்ளார். வாசிம்அக்ரம் 11 முறை 5 விக்கெட் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
கேட்ச்சை நழுவவிட்டால் உட்கார்ந்து அழமுடியாது;
இந்திய வீரர்கள் 6 கேட்ச்களை கோட்டை விட்டனர். இதில் ஜெய்ஸ்வால் மட்டும் 3 கேட்ச்களை நழுவவிட்டார். இதுபற்றி பும்ரா கூறுகையில், “யாரும் வேண்டுமென்றே கேட்சை தவறவிடுவதில்லை. எல்லோரும் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறார்கள். அப்போது கோபம் வந்தாலும் அடுத்த நிமிடத்தில் அதை மறந்துவிடுவேன். அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தி பீல்டருக்கு அதிக அழுத்தம் கொடுக்க விரும்பமாட்டேன். கேட்ச்சை நழுவவிடுவது சிலநேரம் விளையாட்டின் ஒரு பகுதி. அதற்காக உட்கார்ந்து அழ முடியாது’’ என்றார்.