லீட்ஸ்: லீட்ஸில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் முதலில் பேட் செய்த இந்திய அணி 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஜெய்ஸ்வால் 101, கில் 147, ரிஷப் பன்ட் 134 அடித்து அணி நல்ல ஸ்கோரை எட்டுவதில் முக்கிய பங்காற்றினர். இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 465 ரன்கள் குவித்தது. போப் 106, ப்ரூக் 99 ரன்கள் எடுத்தனர். அதன் பின்னர் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 364 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 137, ரிஷப் பன்ட் 118 ரன்கள் குவித்தனர்.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கடைசி இன்னிங்ஸில் 371 ரன்கள் எடுக்கவேண்டும். இதில் 21 ரன்கள் 6 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஏற்கனவே 4வது நாள் ஆட்ட நேரம் முடிவில் எடுத்துவிட்டது. இந்த சூழ்நிலையில் 5வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. து டி20 காலம் என்பதால் எந்த இலக்கை நிர்ணயித்தாலும் பேட்ஸ்மேன்கள் எட்டி விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக இங்கிலாந்து அணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டையே டி20 போல் தான் விளையாடுகிறார்கள். மேலும் மைதானமும் பெரிய அளவு தோய்வு அடையவில்லை. அதே சமயம் முற்றிலும் வேகப்பந்துவீச்சுக்கும் கை கொடுக்கவில்லை.
இதே மைதானத்தில் 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 359 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு இங்கிலாந்து விளையாடியது. அப்போது ஸ்டோக்ஸ் அபாரமாக நின்று ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற வைத்தார். இதே ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணி 404 ரன்கள் என்ற இலக்கை வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டிருக்கிறது. ஆனால் அது 1948 ஆம் ஆண்டு நடந்ததாகும். 2017 ஆம் ஆண்டு இதே ஆடுகளத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது ஆடுகளனும் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. இதனால் 90 ஓவரில் 350 ரன்கள் என்பது நிச்சயம் இங்கிலாந்தால் எடுக்க முடியும்.
ஆனால் இந்திய அணியில் பும்ரா என்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் இருக்கிறார். அவர் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொள்வது என்பது கண்ணிவெடியை வேண்டுமென்று மிதிப்பதற்கு சமம் ஆகும். இதனால் இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடுகிறேன் என முடிவு எடுத்தால் நிச்சயம் அதற்கு பும்ரா வேட்டு வைப்பார். இதன் மூலம் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் ரசித் கிருஷ்ணா, முஹம்மது சிராஜ், சர்துல் தாக்கூர் ஆகியோர் பெரிய அளவில் பந்துவீச்சில் சாதிக்கவில்லை. ஜடேஜாவும் இந்த போட்டியில் பெரிய தாக்கத்தை பந்துவீச்சில் ஏற்படுத்தவில்லை. இதனால் 5வது நாள் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
இதற்கிடையில் 2வது இன்னிங்சில் அபாரமாக ஆடி சதம் விளாசிய (137 ரன்) இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல் கூறியதாவது:- ளை (இன்று) ஒரு சிறந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த டெஸ்ட் ஆரம்பிக்கும் போது மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இதனால் டிராவை நோக்கி செல்லும் என எதிர்பார்த்தேன். ஆனால் மைதானம் பல ஆச்சரியத்தை அளித்தது. மைதானம் சில சமயம் சிதலமடைந்தது. மைதானத்தில் நாளை (இன்று) விரிசல் அதிகரிக்கலாம்.
இதனை ஜடேஜா சிறப்பாக பயன்படுத்துவார் என்று நம்புகிறேன். ஆடுகளத்தில் பந்தில் பவுன்சும் ஒரே மாதிரி இல்லை. சில பந்துகள் நன்றாக எகிறியது. நானும் பன்டும் விளையாடிக் கொண்டிருந்தபோது பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. அவர் எந்த மனநிலையில் பேட்டிங்கில் இருக்கின்றார் என்று நம்மால் கணிக்கவே முடியாது. எனவே அவரை அவராக விட்டு விட வேண்டும். அதுவே நல்லது. சில சமயம் அவரிடம் பேசி அவரை நிதானப்படுத்த வேண்டும். என் பேட்டிங்கை பொருத்தவரை நான் பெரிதாக எதையும் மாற்றவில்லை.
சமீபகாலமாக ரன்கள் வருகின்றது. கடந்த காலங்களில் நான் பெறும் தொடக்கத்தை பெரிய ஸ்கோர்களாக மாற்ற தவறிவிட்டேன். ஆனால் தற்போது என் வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறி வருகின்றது. நான் தற்போது மிகவும் சாந்தமாக மாறிவிட்டேன். எந்த நம்பர்கள் பின்னாடியும் நான் ஓடுவதில்லை. முன்பெல்லாம் அதிகம் ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் இருந்தேன். ஆனால் தற்போது நான் எண்ணிக்கைகளை பார்ப்பது கிடையாது. நாட்டுக்காக விளையாட போகின்றோம்.
நாட்டுக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது மட்டும்தான் மனதில் இருக்கின்றது. இது எனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாக கருதுகின்றேன். நாளைய (இன்று) போட்டி நிச்சயமாக டிராவாக இருக்காது. ஏதேனும் ஒரு அணி வெற்றி பெறும். நிச்சயமாக விறுவிறுப்பான நாளாக தான் இருக்கும். முதல் இன்னிங்ஸ் இருப்பது போல் ஆடுகளம் பேட்டிங்கிற்கு எளிதாக இருக்காது. எனவே வாய்ப்பை பயன்படுத்துவது எங்களை போட்டிக்குள் வைத்திருக்கும். இங்கிலாந்து அணிக்கு எங்களால் முடிந்த அளவுக்கு நெருக்கடியை நாங்கள் ஏற்படுத்துவோம்’’ என்றார்.
பன்ட்… சாதனை மேல் சாதனை;
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் ரிஷப் பன்ட் சதம் விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் படைத்தார். அது மட்டும் இல்லாமல் உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே இத்தகைய சாதனையை ஆண்டி பிளவருக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து பன்ட் ஒரு டெஸ்டின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் வெளிநாட்டு மண்ணில் ஒரே டெஸ்டில் 2 சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை ரிஷப் பன்ட் படைத்திருக்கிறார். விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், விராட் கோஹ்லிக்கு பிறகு பன்ட் இந்த சாதனையை படைத்துள்ளார்.