Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

எல்இடி பல்புகள் கண்டுபிடிப்பு எதிரொலி; மின் ஆற்றல் சேமிப்பு

*அறிவியல் கருத்தரங்கில் தகவல்

ஊட்டி : எல்இடி பல்புகளை கண்டுபிடித்ததன் மூலம் பழைய குண்டு பல்புகள் முற்றிலுமாக விலக்கப்பட்டு ஏராளமான மின் ஆற்றல் சேமிக்கப்பட்டது என அறிவியல் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

ஊட்டி புனித தெரசா பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் கிங்ஸ்டன் ஸ்டான்லி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய பசுமை படை திட்டத்தின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், ‘‘நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் இயற்கையின் சீற்றத்தில் இருந்து விடுபடலாம்.

காலநிலை மாற்றம் என்பதும் நாம் இயற்கையோடு போரிட்டதால் ஏற்பட்ட விளைவு ஆகும். எளிமையான வாழ்க்கை முறை தான் இயற்கை வழியாகும்’’ என கூறினார். சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.ஜே.ராஜு பேசுகையில், ‘‘காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் அறிவியலின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. எல்இடி., பல்புகளை கண்டுபிடித்ததன் மூலம் பழைய குண்டு பல்புகள் முற்றிலுமாக விலக்கப்பட்டு ஏராளமான மின் ஆற்றல்கள் சேமிக்கப்பட்டது.

1980-களில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து உள்ளது என உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டது. ஓசோன் படலத்தின் ஓட்டை காரணமாக புற ஊதாக்கதிர்கள் பூமியில் நுழைந்து மக்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என உலகெங்கிலும் பீதி ஏற்பட்டது. அறிவியல் ஓசோன் படத்தின் ஓட்டைக்கு காரணம் நமது குளிர்சாதன பெட்டிகளில் இருந்து வெளிப்பட்ட குளோரோ புளோரோ கார்பன் என்ற வேதிப்பொருள்தான் காரணம் என கண்டறிந்து அதற்கு மாற்று தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதன் காரணமாக இன்று ஓசோன் ஓட்டை முழுவதுமாக அடைக்கப்பட்டு விட்டது.

அதுபோல அன்றைய காலகட்டத்தில் பரவலாக இருந்த அமில மழை தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் நைட்ரஸ் ஆக்சைடு என்ற வேதிப்பொருள் தான் காரணம் என கண்டறிந்து அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்தியதன் விளைவாக இன்றைய காலகட்டத்தில் அமில மழை பெய்வதில்லை. தற்போது உள்ள புவி வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் காற்று மண்டலத்தின் ஸ்ட்ரேடோஸ்பியர் பகுதியில் ஏரோசோல் என்ற வேதிப்பொருள்களை தெளிப்பதின் வாயிலாக பூமியில் நுழையும் சூரிய ஒளியை கட்டுப்படுத்தலாம். அதன் மூலம் புவி வெப்பத்தை குறைக்கலாம் என கண்டறிந்து செயல்படுத்தப்படவுள்ளது.

உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலமாக தாவரங்களின் இலை பரப்பை அதிகரித்து அவற்றின் கார்பன் உட்கொள்ளும் திறனை அதிகரிக்கலாம் எனவும் அறிவியல் கண்டறிந்து உள்ளது.

இன்னும் சில காலத்திற்குள் காலநிலை மாற்றத்தை முழுவதுமாக கட்டுப்படுத்தும் அறிவியல் கண்டறியப்படலாம். தேவைகள் தான் அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாய்.

அறிவியல் பல சாதனைகள் புரிந்தாலும் மரங்கள் நட்டு பூமியின் பசுமை பரப்பை அதிகரிப்பது ஒன்றுதான் பூமியை காக்கும் வழி’’ என தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.