Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காசாவில் 50 குழந்தைகள் உட்பட 84 பாலஸ்தீன மக்கள் பலி; இஸ்ரேலை திருப்பி தாக்கிய லெபனான்: பதற்றம் அதிகரிப்பால் விண்ணை முட்டும் சைரன் சத்தம்

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது லெபனான் ராக்கெட் குண்டுவீசியதால் தீரா நகரில் வீடு சேதமடைந்தது. 7 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலில் பதற்றம் அதிகரிப்பால் விண்ணை முட்டும் சைரன் சத்தம் கேட்கிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக காசாவின் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் நேற்று வரை 43,259 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்; 1,01,827 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 2,897 பேர் கொல்லப்பட்டனர். 13,150 பேர் காயமடைந்துள்ளனர்; லெபனானில் 30 பேர் பலியானதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் வடக்கு காசாவின் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 84 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதாக காசா அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய இஸ்ரேலுக்கு உட்பட்ட தலைநகர் டெல் அவிவின் வடக்குப் பகுதிகயை நோக்கி லெபனானில் இருந்து மூன்று வான்வழி ஏவுகணை ராக்கெட்டுகள் வீசப்பட்டன. அவற்றை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து தாக்கியது. இருந்தும் சில ராக்கெட்டுகள் மத்திய இஸ்ரேல் நகரத்தை தாக்கியது. குறிப்பாக டெல் அவிவ் நகரின் வடகிழக்கில் உள்ள தீரா மற்றும் ஹஷரோன் நகரங்களின் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டதால் கட்டிடங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்தியின்படி, தீராவில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரபு இஸ்ரேலின் தீரா நகரின் மீது லெபனானில் இருந்து வீசப்பட்ட ராக்கெட்டுகள் தாக்கியதில் 7 பேர் காயமடைந்தனர் என்றும், அவர்களுக்கு தீராவில் இருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லெபனானில் இருந்து மத்திய இஸ்ரேல் மீது ராக்கெட்கள் வீசப்படுவதால், டெல் அவிவ் புறநகர் பகுதியான ஹெர்ஸ்லியா மற்றும் மத்திய இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படுகின்றன. ராணுவம் மக்கள் வசிக்கும் பகுதியில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்க தேர்தலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்?

கடந்த அக். 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை புறக்கணிப்பது இஸ்ரேலுக்கு எதிரான தோல்வியை ஒப்புக்கொள்வதற்குச் சமம் என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக் கூடும் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் நெருங்கிய உதவியாளரான முகமது கோல்பைகெனி அளித்த பேட்டியில், ‘ஈரானின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இஸ்ரேலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும்’ என்றார். இதுகுறித்து மூன்று ஈரான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழும் செய்தி வெளியிட்டுள்ளது.