*அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
கடலூர் : ”நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி\” திட்டத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை கடலூர் முதுநகர், சங்கரன் தெரு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சான்றோர்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாணவர்களின் தேவைக்கேற்ப பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தேவையான பாடபுத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டிகள் உள்ளிட்ட அடிப்படை நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
2024-2025ம் கல்வி ஆண்டில் 6,7,8ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் 275 நடுநிலை பள்ளிகளில் பயிலும் 14,829 மாணவர்களுக்கு அடிப்படை திறனறி தேர்வு நடத்தி, சிறப்பு கவனம் தேவைப்படும் 3,536 மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.
இதனால் அந்த மாணவர்கள் கற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில், இக்கல்வி ஆண்டில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி என்னும் சிறப்பு திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர், மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சி கற்று கொடுப்பதாகும்.
மாணவர்களை தேர்வு செய்வதற்காக அடிப்படை திறனறி தேர்வு 41,723 மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அதில் குறைந்த மதிப்பெண் பெற்ற 9,197 மாணவர்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது என கண்டறியப்பட்டது. அவ்வாறு கண்டறியப்பட்ட மாணவர்களின் கற்றல் திறனை முன்னேற்றுவதற்கு பொறுப்பாசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் 3 மாத காலம் நடைபெறுகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக நடைபெறும் பயிற்சி வகுப்புகளை துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடந்த சிறப்பு பயிற்சி வகுப்பினால் மாணவர்கள், பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இதுபோன்ற கற்றல் திறனுடன் விளையாட்டு உள்ளிட்ட பிற திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் வகையில் கோடை விடுமுறை நாட்கள் மட்டுமன்றி தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது, என்றார்.
ஆய்வின் போது, வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன், தலைமையாசிரியர்கள் கிரிஜா, ரெஜினா, ஜெயமோகனா, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.