‘‘சண்டைய நிறுத்துங்கன்னு தந்தை, மகனுக்கு தகவல் பறந்திருக்காமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மாம்பழ கட்சியில் டாடிக்கும், சன்னுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் போக்கால், எந்த பக்கம் போகிறது என வட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் குழம்பி போயிருக்காங்களாம். அதிலும், 2 எம்எல்ஏக்களோட அதிக செல்வாக்கு கொண்டிருக்கும் மாங்கனி மாவட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளில் சரி பாதியாக இருவரின் பக்கமும் நிற்கிறார்களாம். ஆரம்ப காலத்திலிருந்து டாடியோடு அரசியல் செய்தவர்கள், அங்கேயே நின்று சமரசமாக போங்கனு சொல்லிகிட்டு இருக்காங்களாம்.
சமீபத்தில் மா.செ., பொறுப்புக்கு வந்த புதிய ரத்தங்கள் எல்லாம் சன் பக்கமாக நின்றுகொண்டு, எல்லாம் நாம தான்னு பேசிக்கிறாங்களாம். சட்டமன்ற தேர்தல் கூட்டணி சூடுபிடிப்பதற்கு முன்பே இந்த பிரச்னையை தீர்த்திட வேண்டுமுனு மூத்த நிர்வாகிகள் பலரும் தவியாய் தவிக்கிறார்களாம். அதேநேரத்தில் இப்படியே போனா, நம்ம கட்சியை மக்கள் தூக்கி எறிந்திடுவாங்கனும் மேலிடத்திற்கு தகவலை தட்டி விட்டுருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நிகழ்ச்சி தொடர்ந்து குறிப்பிட்ட சிலரையே அழைப்பதாக புகார் வருதாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடைக்கோடி மாவட்டத்தில் அரசு துறை சார்பில் நடத்தப்படுகின்ற போட்டிகள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடுவர்களாவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் தொடர்ச்சியாக குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்களாம். புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது இல்லையாம். அதிலும் பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசையும், அதன் செயல்பாட்டையும் கடுமையாக விமர்ச்சித்து பதிவிட்டு வருகிறார்களாம். அவர்களையே சிறப்பு விருந்தினர்களாக அழைத்து மாவட்டத்தில் நிகழ்ச்சி நடத்துவது ஏன் என்று பிற தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடைக்கோடி மாவட்டத்தில் இலை கட்சியில் 3 மாஜிக்கள் சந்தித்து, தோட்டத்துல பேசிய விஷயம் என்னவாக இருக்கும்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சமீபத்தில் அந்த மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர், மாஜி எம்.எல்.ஏ., மாஜி மாவட்ட செயலாளர் ஆகிய 3 பேர் சேர்ந்து, தோட்டத்தில் சந்தித்து பேசினாங்களாம். இவுங்க சந்தித்து பேசிய போட்டோவை சமூக வலை தளத்திலும் வைரலாக்கி இருக்காங்க. மூன்று பேருமே இப்போது கட்சியில முக்கிய பொறுப்புக்கு எதிர்பார்த்து காத்து இருக்காங்களாம். இவர்களில் ஒருவர் சட்டமன்ற தேர்தல்ல தனக்கு சீட் எதிர்பார்க்காரு. மற்றொருவர் தனது மகளுக்கு எம்.எல்.ஏ. சீட் எதிர்பார்க்காரு. இன்னொருத்தர் மீண்டும் மாவட்ட பொறுப்புக்கு காய் நகர்த்தலாமா என யோசிச்சிட்டிருக்கார். இவ்வாறு எதிர்பார்ப்புகளில் உள்ளவர்கள் சந்தித்து பேசிய விவகாரம் கட்சி தலைமைக்கும் போய் இருக்காம். மூவரும் கூட்டணி போட்டு இருப்பது, காய் நகர்த்துவது எதற்காக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்கள் மத்தியில் உள்ளதாம். இவுங்க போட்ட போட்டோவுக்கு தொண்டர்கள் கொடுத்த கமெண்ட் பல கவனிக்க கூடியதாகவும் இருந்ததாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிரிவல மாவட்டத்து இலை கட்சி மாவட்ட பதவிக்கு மாஜி மீசைக்கார மந்திரி வந்ததுல இருந்தே, உட்கட்சி பூசல் தல விரிச்சி ஆடுதுன்னு கட்சிக்காரங்க புலம்பல் உச்சத்துல இருக்குதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..நிர்வாகிகளை மதிப்பதில்லையாம், நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடுறதில்லையாம். கட்சி பாசத்தை விட ஜாதி பாசம்தான் அவருக்கு அதிகமாம். அதனால அவரது கட்சி ஆபீஸ் எப்பவும் ஆளில்லாம காத்தடிக்குதாம். லெட்டர் பேடு கட்சியெல்லாம் தேர்தல் வேளையில் இறங்கிட்டாங்க. ஆனா இவர் மட்டும், எப்பவும் சைலன்ட் மோடுலயே இருக்குறாருனு அதிருப்தி ஒன்றிய செயலாளர்கள் எல்லாம் ஒன்று கூடி, சேலத்துக்காரர நேரில் பார்த்து புலம்பி தீர்த்து இருக்காங்க. சீக்கிரத்துல மாவட்டத்தை மாற்றவில்லைனா, கிரிவலம் மாவட்டத்தில இலை காணாமல் போய்விடும்னு புகார் கொடுத்துட்டு வந்திருக்காங்களாம். இதையெல்லாம் பின்னாடி இருந்து இயக்குறது விவசாய பேர் கொண்ட மாஜி மந்திரி தான்னு செம கடுப்புல இருக்கிறாராம் மீசைக்கார மந்திரி..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக் கட்சியில் தொகுதியை பிடிக்கும் போட்டி பெரும் போட்டியாக இருக்கும் போலிருக்கிறதே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியும், தாமரை கட்சியும் எப்போதெல்லாம் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறதோ, அப்ேபாதெல்லாம் லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் குடி என முடியும் தொகுதி மலராத கட்சிக்கு ஒதுக்கப்படும். இம்முறை இதில் கொஞ்சம் இழுபறி இருக்கும் என்கிறார்கள் மாவட்டத்தில் உள்ள இலை, தாமரை ஆதரவாளர்கள். மாவட்ட தலைநகர தொகுதியில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவும், மாவட்ட நிர்வாகியுமானவருக்கு அந்த தொகுதி அவ்வளவாக சாதகமாக இல்லை என தகவல் கசிந்துள்ளது. தொகுதி முழுக்க ஒரே அதிருப்தி அலை பாய்கிறதாம். இதனால், இந்த முறை நைசாக சேலத்துக்காரர் துணையுடன் குடி என முடியும் தொகுதிக்கு மாறிவிடலாம் என்ற கனவில் இருந்த அவருக்கு, தாமரை கட்சியுடனான கூட்டணி பெரும் பின்னடைவைத் தந்துள்ளது. தற்போது அடிக்கடி இந்த தொகுதி பக்கமாய் வந்து செல்லும் அவர், கள நிலவரத்தை தனது ஆதரவாளர்கள் மூலம் அவ்வப்போது சர்வே செய்து மனக்கணக்கு போட்டவருக்கு தாமரையுடன் கூட்டணி அறிவிப்பு மண்டை காய விட்டுள்ளது. இலைக்கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டதால், தாமரை கட்சியின் மாஜி தேசிய ெசயலாளரோ 2026 தேர்தலில் மீண்டும் சீட் வாங்கி குடி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்துகிறார். இதனால் இலைக்கட்சி சிட்டிங் ரொம்பவே அப்செட் மூடுக்கு சென்று விட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா.