‘‘இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அவ்வப்போது ரகசியமாக சந்தித்து வரும் மாஜி அமைச்சர் வைத்தியானவர் மகனின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறதாமே சேலத்துக்காரர் டீம்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரர் அணியை சேர்ந்த நெற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சரான வைத்தியானவர் சொந்த ஊரிலேயே கடந்த சில தினங்களாக முகாமிட்டு உள்ளாராம்.. இந்த தகவல் தெரிய வந்த சேலத்துக்காரர் டீம், வைத்தியானவர் எங்கு செல்கிறார், யாரையெல்லாம் சந்திக்கிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரிப்பதற்கான திரைமறைவான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளதாம்… இதற்கிடையில் வைத்தியானவரின் மூத்த மகனான பிரபல நடிகரின் பெயரை கொண்டவர், இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அவ்வப்போது ரகசியமாக சந்தித்து வருகிறாராம்…
நிர்வாகிகளும் அவருடன் தொடர்பில் இருந்து வருகின்றனராம்.. இந்த தகவல் தலைமைக்கு சென்று விடக்கூடாது என்பதில் அந்த முக்கிய நிர்வாகிகள் மிகுந்த கவனத்தில் இருந்து வருகின்றனராம்.. ஆனால் எப்படியோ இந்த தகவல் வெளியில் கசிந்ததால் சேலத்துக்காரரின் டீம் வைத்தியானவரின் மகனின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சட்டமன்ற தேர்தலில் மூவாயிரத்து ஐநூற்று பத்து கோடி செலவு செய்ய பிளான் வச்சிக்கிட்டு கூட்டணிபற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறது யாரு..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ரெண்டாயிரத்து இருபத்தாறாவது ஆண்டில் ஆட்சியை பிடிப்பதுதான் தனது வாழ்நாள் லட்சியம் என இலைக்கட்சி தலைவர் உறுதி பூண்டிருக்காராம்.. இதற்கான வேலையை ரகசியமாக தொங்கிவிட்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க..
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படி கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்காம, துட்டு வைத்திருந்தவர்களுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் கொடுத்தாரோ அதேபோல சட்டமன்ற தேர்தலிலும் இதே பாணியை கையிலெடுத்துள்ளாராம்.. தொகுதிக்கு குறைந்தது 15 சி செலவு செய்யும் வகையிலான நபர்களை தேடி கண்டுபிடித்து வருகிறாராம்.. ஓட்டுக்கு ஒரு அரை கே நோட்டாவது கொடுக்க வேண்டும் என்பதுதான் திட்டமாம்.. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிக்கும் வேட்பாளர்களை நிறுத்தும் முடிவுக்கு வந்திருக்காராம்.. இதன்படி குறைந்தது மூவாயிரத்து ஐநூற்று பத்து கோடி செலவு செய்ய பிளான் வச்சிருக்காராம்.. ஒரு வேட்பாளர் 15 சி செலவு செய்யணும், அதற்கு மேலான செலவை இலைக்கட்சி தலைவர் பார்த்துக்கொள்வாராம்.. இதன்படி அவரது மாங்கனி ஊரில் சவுத் தொகுதிக்கும் ஒரு வேட்பாளரை ரெடி பண்ணியிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க..
தகவல் பிரிவை சேர்ந்த அந்த வேட்பாளருக்கு அசையும், அசையா சொத்துகளை கணக்கிட்டால் எப்படியும் ஒரு இருநூறு சி தேறுமாம்.. வட்டிக்கு பணம் கொடுப்பதுதான் அவரோட முக்கிய தொழிலாம்.. அவரும் வேட்பாளராக களம் காண தயார் என மார்தட்டி சொல்லிட்டாராம்.. துட்டு இருக்கிறது என்ற காரணத்தினால்தான் இலைக்கட்சி தலைவர் கூட்டணி பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருப்பதாக கட்சிக்காரங்களே சொல்றாங்க.. அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவரை பற்றி இன்னொரு தகவலையும் கட்சிக்காரங்க சொல்றாங்க.. அது என்னன்னா… நாட்டை ஆளும் தலைவரு டெல்லிக்கு வரவழைச்சி தனது பக்கத்தில் நிறுத்தியிருந்தாரு.. சரியான நேரத்தில் அவருக்கு டாட்டா காட்டும் தைரியம் கொண்டவரு எங்க தலைவரு.. இப்பவும் தேர்தலுக்கு 5 மாதம் இருக்கும் நிலையில் அவரது அவதாரத்தை காட்டுவாரு என்பது உறுதின்னு அடிச்சி சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை பார்ட்டி நிர்வாக பிரிப்பை நடத்த விடமாட்டோம்னு சொல்லி லகரங்களை கறக்குறாங்களாமே சீனியர்கள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்குள்ளவே கட்சியை முழுசுமாக தன்னோட கட்டுப்பாட்டுல கொண்டு வருவதற்கு தலைமை முடிவு எடுத்திருக்குதாம்.. அனைத்து மாவட்டங்கள்லயும் 2 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்று இலை பார்ட்டி நிர்வாகத்தை கட்டமைக்க முடிவு செஞ்சிருக்காராம்.. அதற்காக சில மாவட்டங்கள்ல நிர்வாக பிரிப்பையும் நடத்தி முடிச்சிட்டாங்களாம்.. ஆனால், வெயிலூர், நியூகோட்டை, மாஜி மந்திரியாகவும், இப்போது எம்பியாகவும் உள்ள ஏழுமுகமானவரின் புரத்தில் முடியும் மாவட்டம், அதையொட்டிய கடலோடு சேர்ந்த ஊர் மாவட்டம், கிருஷ்ண பகவானின் பெயரை கொண்ட மாவட்டம் என்று பல மாவட்ட மூத்த தலைகள் நிர்வாக பிரிப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்களாம்..
இதனால் இலைக்கட்சி தலைமை செய்வது அறியாது திகைத்து வருகிறதாம்.. அதேநேரத்தில் மூத்த நிர்வாகிகள் சிலர் ஒரு சில மாவட்ட செயலாளர்களிடம் உங்கள் மாவட்டத்தை பிரிக்க விடமாட்டோம் என்று சொல்லியே லகரங்களை கறந்து விடுகிறார்கள்னு இலை பார்ட்டிக்குள்ள இருந்து சத்தம் கேட்க ஆரம்பிச்சிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சென்னையை மறந்து சொந்த மாவட்டமே கதியின்னு மாறிவிட்ட பலாப்பழக்காரர் பூசாரி தற்கொலை வழக்கால் தனது ஆதரவாளர்களிடம் அடிக்கடி ஆலோசனையில் ஈடுபடுவதிலேயே நேரத்தை கழிக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியை மீட்கப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய பலாப்பழக்காரர், தனது சொந்த ஹனிபீ மாவட்டத்திலேயே பெரும்பான்மையான நாட்களை கழிக்கிறாராம்.. முன்பெல்லாம் சென்னையிலேயே அதிக நாட்கள் தங்கி விடுவார்.
பண்டிகை, விசேஷங்கள் உள்ளிட்ட நிகழ்வுக்கு மட்டுமே அபூர்வமாக சொந்த மாவட்டத்துக்கு வந்து செல்வார். இதனாலேயே இலைக்கட்சிக்கு பலமாக திகழ்ந்த ஹனிபீ மாவட்டம், அங்கு பின்னடைவை சந்தித்தது. தற்போது இங்கு சேலத்துக்காரர், பலாப்பழக்காரர், குக்கர்காரர் என 3, 4 பிரிவுகள் இருக்கின்றன. இந்த சூழலில் பிக்பாண்ட் பகுதி பூசாரி தற்கொலை வழக்கில் வரும் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இவ்வழக்கில் பலாப்பழக்காரரின் தம்பியான மன்னரானவர் உள்பட 6 பேர், அன்று ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாவட்டத்தில் தனது செல்வாக்கு சரிந்து வரும் நிலையில், தீர்ப்பு தம்பிக்கு எதிராக வந்தால் என்ன செய்வது என பலாப்பழக்காரர் குழம்பிப் போய் உள்ளாராம்.. இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் அடிக்கடி ஆலோசனை நடத்திக்கிட்டு இருக்கிறாராம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.