மாம்பழத்திற்கு பெயர் பெற்ற சேலத்தில் வாழை, மா, பாக்கு, குச்சிக்கிழங்கு (மரவள்ளி), தக்காளி உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பயிர்களுக்கு இடையே வேறுசில பயிர்களை ஊடுபயிராகவும் சாகுபடி செய்கிறார்கள். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை அடுத்துள்ள மல்லூரில் ஜெயக்குமார் என்ற விவசாயி கற்பூரவள்ளி வாழையையும், அதற்கு இடையில் பாக்கினையும் சாகுபடி செய்திருக்கிறார். வாழையில் தார் மட்டுமின்றி இலை மூலமும் மாதம்தோறும் ஒரு கணிசமான லாபத்தைப் பார்த்து வரும் ெஜயக்குமாரைச் சந்தித்தோம். “ஆட்டோமொபைல் கடையும், துணிக்கடையும் நடத்தி வருகிறேன். என்னதான் இதில் நல்ல வருமானம் கிடைத்தாலும் எனக்கு விவசாயம் செய்வதில்தான் அதிக நாட்டம். எனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு ஆந்திரா பொன்னியை சாகுபடி செய்தேன். தற்போது கற்பூரவள்ளி வாழையை சாகுபடி செய்திருக்கிறேன். அதில் ஊடுபயிராக பாக்கினை நடவு செய்திருக்கிறேன்.
பாக்கு மற்றும் வாழையை ஒரே சீனில்தான் வளர்க்கத் தொடங்கினேன். வாழையில் நல்ல மகசூல் கிடைக்கிறது. வாழைக்கன்றுகளை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து வாங்கி வந்து நடவு செய்தேன். ஒரு கன்று ரூ.25 என்ற கணக்கில் வாங்கி வந்தேன். எனக்கு 2 ஏக்கருக்கும் சேர்த்து மொத்தம் 1700 கற்பூரவள்ளி வாழைக்கன்றுகள் தேவைப்பட்டது. வாழைக்கன்றுகளை 7 அடி இடைவெளிக்கு ஒன்றரை அடிக்கு குழி தோண்டி நடவு செய்திருக்கிறேன். நடவு செய்த 10 லிருந்து 15வது நாளில் வாழைக்கன்றுகள் வேர்விடத் தொடங்கிவிடும். 20 நாட்களில் இலைகள் வரத்தொடங்கிவிடும். இந்தப் பகுதி எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். அதனால் கற்பூரவள்ளி வாழைக்கு நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. அதனுடன் மழை பெய்தால், அதற்கு கிடைக்க வேண்டிய நைட்ரஜன் சத்து நேரடியாக கிடைக்கும். இதனால் வாழை நல்ல திடகாத்திரமாக வளருவதுடன், வாழைக்குலையும் பெரியதாக இருக்கும்.
நடவு செய்த ஒன்றரை மாதத்தில் ஒரு வாழைக்கு ஒரு பெட்டி சாண உரம் போடவேண்டும். 3வது மாதம் ஒரு வாழைக்கு ஒரு பெட்டி சாண உரம் இடுவோம். இந்த தருணத்தில் வாழை மரத்தில் காற்றினால் சேதமடைந்த இலைகளை அகற்றி மரங்களுக்கு உரமாக இடுவோம். 5வது மாதம் ஒரு வாழைக்கு அரைப்பெட்டி சாணம் வீதம் உரம் வைக்கவேண்டும். குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் அதிகப்பட்சம் ஐந்து நாட்களுக்கு ஒரு முறையும் வாழை மரங்களுக்கு தண்ணீர் விடுவோம். மழைக்காலங்களில் நிலத்தின் ஈரப்பதத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் விடுவோம்.பனமரத்துப்பட்டி தோட்டக்கலை துறை அதிகாரி குமரவேல் அவர்களின் அறிவுரையின்படி வாழையில் ஊடுபயிராக பாக்கினை நடவு செய்திருக்கிறேன். இந்தப் பாக்கு கன்றுகளை கருமந்துறையில் ஒரு கன்று ரூ.20 என்ற கணக்கில் வாங்கினேன். வாழையைப் போலவே பாக்கினையும் ஏழு அடிக்கு ஒரு கன்று என நடவு செய்தேன். வாழையை நடவு செய்யும்போதே பாக்கினையும் நடவு செய்ததால் எனக்கு கூடுதலாக உரச்செலவு எதுவும் ஆகவில்லை. இலையை மட்டும் வெளியில் விட்டு பாக்கு மரங்களை நடவு செய்தேன்.
பாக்கு மரத்தை வாழைக்கன்றுகளை ஒட்டி நடவு செய்யாமல் 3 அடி இடைவெளி விட்டுதான் நடவு செய்திருக்கிறேன். அப்போதுதான் அறுவடை செய்யும்போது வாழைத்தார்கள் பாக்கு மரத்தை பாதிக்காது. இப்போது நான் வைத்திருப்பது நாட்டு ரக பாக்கு மரம். இந்தப் பகுதியில் இதை கொட்டப்பாக்கு என சொல்வார்கள். பாக்கில் இருந்து 6 வது வருடத்தில்தான் மகசூல் கிடைக்கும். அதுவரைக்கும் என்னோட நிலத்தில் பாக்கு ஊடுபயிராக மட்டும்தான் இருக்கும். தற்போது சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாக்குத் தோப்புகள் வெகுவாக குறைந்துவிட்டன. அதனால் எனக்கு மகசூல் கிடைக்கும்போது பாக்கு நல்ல விலைக்கே போகும் என்ற நம்பிக்கையில் நடவு செய்திருக்கிறேன். வாழையில் இருந்து ஒரு அறுவடைக்கு 1550 தார்கள் கிடைக்கும். இதில் 900 தார்கள் 30 கிலோவிற்கு மேல் இருக்கும்.
700 தார்கள் 20 லிருந்து 25 கிலோ வரையில் மட்டுமே இருக்கும். கிட்டத்தட்ட 100 மரங்களில் இருந்து தார்கள் கிடைக்காமல் கூட போகலாம். இதில் ஒவ்வொரு தாரையும் கிலோ ரூ.20 என விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ஒரு போகத்திற்கு வாழைத்தாரில் இருந்து மட்டும் எனக்கு ரூ.7.5 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் அனைத்து பணிகளுக்கும் ரூ.3 லட்சம் வரை செலவு ஆகும். இந்த செலவுகள் போக ரூ.4.5 லட்சம் லாபமாக கிடைக்கிறது. தார்கள் மட்டுமின்றி வாழை இலைகளையும் விற்பனை செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு ரூ.1000க்கு வாழை இலைகளை விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.30 ஆயிரம் கிடைக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
ஜெயகுமார்: 99422 22029.