‘‘இலைக்கட்சியின் திடீர் கூட்டணி அறிவிப்புக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு எப்படின்னு நிர்வாகிகள், தொண்டர்களிடம் முன்னாள் மாஜி ரகசியமாக கருத்து கேட்டு வருகிறாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியில் உள்ள ‘முக்கிய நபர்’ தனது ஆதரவாளர்களுக்கு ரகசியமாக ஒரு அசைமென்ட் கொடுத்துள்ளாராம்.. அதாவது, மாவட்டத்தில் நகர நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறதாம்.. இதில், இலை கட்சி மலராத கட்சியுடன் அமைத்துள்ள கூட்டணி குறித்து நிர்வாகிகள், தொண்டர்களிடம் ரகசியமாக கருத்து கேட்டு வருகிறார்களாம்..
இதில், அதிருப்தி இருந்தால், அதை எப்படி சரி கட்டுவது உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து வருகிறார்களாம்.. கட்சியில் தனக்கு இருக்க கூடிய செல்வாக்கு கூட்டணி மூலம் குறைந்து விடக்கூடாது என்பதில், அந்த முக்கிய நபர் குறிக்கோளாக இருக்கிறாராம்.. அதிருப்தியில் உள்ளவர்களை சரி கட்டுவதற்கான வேலையிலும், அந்த முக்கிய நபர் இறங்கியுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மலராத கட்சியின் மாவட்ட தலைவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது குறித்து டெல்லி வரை புகார் போயிருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்தில் மலராத கட்சியின் தெற்கு மாவட்ட தலைவருக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறாங்களாம்.. இதன் தற்போதைய நிலைபற்றி இங்குள்ள பழைய ஆட்கள் மலராத கட்சியின் தாய் அமைப்பின் சோர்சில் டெல்லியில் உள்ள தலைவர்கள் வரை எடுத்து சென்றதால் மாநில தலைமை என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருவதாக மாவட்ட நிர்வாகிகள் பேசிக்கிறாங்க.. புகார் தெரிவித்தவர்களிடம் பொறுமையாக இருங்கள் என்று சொல்லி வருகின்றனராம்.. ஆனால் புகாருக்கு எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் இல்லாததால் மன்னர் மாவட்ட தலைவர் மலராத கட்சியின் தாய் அமைப்பின் மூலம் டெல்லி வரை எடுத்து சென்றுள்ளாராம்..
அவர்களும் இதுகுறித்து விசாரிக்க தொடங்கியுள்ளதாக தலைவர் தரப்பு சொல்கிறது. எதிர்தரப்போ டெல்லியில் உள்ளவர்களுக்கு வேற வேலை இல்லை பாரு.. இவர் புகாரை பாக்கிறது, தான் வேலையா என்று கமெண்ட் அடிக்கிறாங்களாம்.. இதனால் இந்த விவகாரத்தில் என்ன நடக்கும்னு எதிர்பார்த்து இருக்கின்றனராம் மலராத கட்சியின் தொண்டர்கள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மகனின் கட்சி தலைவர் பதவியை பறித்த நிறுவனர் சித்திரை முழு நிலவு மீது தனது கவனத்தை திசை திருப்பி உள்ளாராமே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஒன்றிய உள்துறை கூட்டணிக்காக தமிழகம் வந்த முந்தைய நாளில் அன்புமணியிடம் இருந்து தலைவர் பதவியை அன்பாக பறித்து அதிரடித்தார் மாம்பழ நிறுவனர். தந்தை- மகன் மோதல் மீண்டும் வெளிச்சமாகவே தைலாபுரத்துக்கு சமாதான புறாக்கள் படையெடுத்ததாம்.. ஆனால் இவ்விவகாரத்தில் தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாமென உத்தரவு போட்டாராம் நிறுவனர். இதனால் சித்திரை முழு நிலவு மாநாடு வளருமா, தேயுமா என்ற அச்சம் மாம்பழ வட்டாரத்தில் நிலவியதாம்..
ஒன்றிய பவுர்புல் டெல்லி பறந்த நிலையில் நெருங்கிய உறவுகளிடமும், மூத்த பிரபலங்களிடமும் ‘தந்தை சொல்லை மீறமாட்டேன்’ என உத்தரவாதம் அளித்து தூது அனுப்பினாராம் அன்பு மகனான மணியானவர். அனைவரின் அன்புக்கும் அடிமையாகி தற்போது இறங்கி வந்துள்ளாராம் மாம்பழ நிறுவனர். பொதுக்குழு, செயற்குழு கூட்ட இருந்ததை புறந்தள்ளி கவனத்தை சித்திரை முழு நிலவு மீது திருப்பி உள்ளாராம் நிறுவனர். இதனால்தான் வாழ்த்து செய்தியிலும் தலைவர் என்பதை குறிப்பிட வில்லையாம்.
இதனால் மாம்பழ வட்டாரம் சித்திரை குஷியில் இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி தலைவர் ஊரில் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச போடப்பட்ட பொறுப்பாளர்கள் மூத்த நிர்வாகிகளை கண்டுகொள்வதே இல்லையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் கட்சியை சீரமைக்கும் வகையில், மூன்று பொறுப்பாளர்கள் போடப்பட்டிருக்காங்களாம்.. அவர்கள் கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சிக்கிட்டு வருவதாக சொல்றாங்களாம்..
ஆனால் அவர்களால் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்திருக்காம்.. மாநகர் மாவட்ட பொறுப்பில் இருப்பவர்களுக்கு கூட, எந்த தகவலையும் தெரிவிப்பது இல்லையாம்.. இதனால ஒரு பொறுப்பாளர் மீது கட்சிக்குள்ளாற புகைச்சல் ஏற்பட்டிருக்காம்.. ஆனால், கட்சி ஆட்சியில் இருந்தபோது எப்படி தன்னந்தனியா வந்தாங்களோ, அதேபோலவே எந்த ஆர்ப்பாட்டம் நடந்தாலும், மூத்த நிர்வாகிகள் தன்னந்தனியாகத்தான் வர்றாங்களாம்..
அவர்களால் கட்சிக்கு எந்தவித நன்மையும் இல்லை என்ற கருத்தும் நிலவுதாம்.. இந்நிலையில் பகுதி மற்றும் வட்டச்செயலாளர்களுக்கான ரகசிய கூட்டம் ஒண்ணு நடந்துச்சாம்.. இதிலும் மூத்த நிர்வாகிகளுக்கு அழைப்பு இல்லையாம்.. சமீபத்துல இலைக்கட்சி தலைவர் வெயிலுக்கு தண்ணீர் பந்தலை திறந்து வச்சாராம்… இதில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் கூட்டமே இல்லையாம்.. இதனால இலைக்கட்சி தலைவர் ரொம்பவே வருத்தப்படாராம்.. அடுத்தடுத்து இலைக்கட்சி தலைவர் சொந்த ஊருக்கு வரும்போதெல்லம் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கணும் என்று முதல் பொறுப்பாளரான மொரப்பூரார் கடுமையான உத்தரவு போட்டிருக்காராம்..
மாநகரில 900 பூத்துக்கள் இருக்கு.. இதில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் வந்தாலே 4 ஆயிரம் பேர் இருப்பாங்க.. அவர்கள் அனைவரையும் அழைச்சிக்கிட்டு வரணுமுன்னு சொல்லியிருக்காராம்.. கூட்டணி அமைச்ச இலைக்கட்சி தலைவரின் ஊரில் அமோக ஆதரவு இருக்குன்னு உலகத்துக்கு சொல்லும் வகையில் கூட்டங்கள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு வருதாம்.. இதற்கிடையில் அவர்களுக்கு யார் காசு கொடுப்பார்கள் என்ற கேள்வியும் நிர்வாகிகளிடையே எழுந்திருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.