‘‘ஜி-பேவில் பணம் வாங்குறாங்க.. அமலாக்கத்துறையை அனுப்பி வீட்டில் சோதனை செய்ய சொல்லுங்க என குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் ரொம்பவே கொந்தளிச்சிட்டாங்களாமே தெரியுமா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் குறைதீர் கூட்டம் நடந்திருக்கு.. இதுல கலந்துகொண்ட மீனவர்கள் ரொம்பவே கொந்தளிச்சு போயிட்டாங்களாம்.. ‘ஜி-பேவில் பணம் வாங்குறாங்க.. அமலாக்கத்துறையை அனுப்பி வீட்டில் சோதனை செய்யச் சொல்லுங்க..’ என மீன்வளத்துறை அதிகாரிங்க சிலர் மேல அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைச்சு பரபரப்பை ஏற்படுத்தி இருக்காங்க.. இந்த மாவட்டத்துல உள்ள கடற்கரை கிராமத்துல அரசு சார்பில் நடக்கும் மீன்பிடி துறைமுக பணி இன்னும் முழுமை பெறாம இருக்கு.. இருந்தாலும் இதை மையமாக வைச்சு விசைப்படகுகள் இயங்குது..
இந்த துறைமுகத்தில் மீன் டிபார்ட்மென்ட் அலுவலர்கள் சிலர் கோல்மால் செய்றாங்க என்று ஏற்கனவே புகார் மேல புகார் வருதாம்.. இந்நிலையில், தான் ஜி-பே பணப் பட்டுவாடா புகாரு அதிகாரிகளை கதிகலங்க வைச்சு இருக்காம்.. இந்த புகாருக்கு கூட்டத்துல மாவட்ட கலெக்டர் பெரிய ரியாக்ஷன் காட்ட வில்லை என்றாலும் கூட, தற்போது இதுதொடர்பாக விசாரிங்கன்னு சொல்லி உயர் அதிகாரி கிட்ட சொல்லி இருக்காராம்.. இதனால அந்த துறை டிபார்ட்மென்ட் அதிகாரிங்க என்ன நடக்குமோன்னு அச்சத்தில இருக்கிறார்களாம்.. கேரளாவில் இருந்து படகுகள் அனுமதி இல்லாமல் வந்துட்டு போகுது.. இதற்காக அதிகாரிங்க சிலருக்கு, செமத்தியாக கவனிப்பு நடக்குது என்பதும் குற்றச்சாட்டு பட்டியலில் இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்சியும் வேணாம்.. ஒரு கொடியும் வேணாம்.. என பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கண்ணீர்விட்டாராமே முரசு ஒலிக்கும் கட்சியின் மாஜி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் கோயம்பேடு கட்சியின் மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்ததாம்.. இதில் பங்கேற்று மைக் பிடித்த ஏழுமலையான் பெயரை கொண்ட மாஜியானவர் 22 வருசமா கட்சிக்கு உழைச்சிட்டேன். அன்று மொய் வைக்க 200 ரூபாய் போதும்… இன்று 10 ஆயிரம் வரை ஆகிறது… என்று புலம்பினாராம்.. மோடி எதிர்ப்பு அலை வீசிய 2019, 2021 தேர்தல்களில் சரியான கூட்டணி முடிவை எடுக்கல.. சாதாரண தொண்டனுக்கு தெரிந்ததுகூட தலைமைக்கு தெரியல.. டிடிவிக்கு கொடி பிடிக்க சொன்னார்கள். மாவட்ட செயலாளர் பதவியை 3 ெதாகுதிகளாக பிரிங்கள் என்று கூறிவிட்டேன்.. இனி கட்சியும் வேணாம்.., ஒரு கொடியும் வேணாம்… என மேடையிலேயே கண்ணீர்விட்டு கதறினாராம்.. தொண்டர்கள் அதிருப்தியடையவே விஜயகாந்தை நினைச்சுட்டேன்… என மழுப்பினாராம்..
அதாவது பொதுக்குழுவில் மாநில பொறுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாஜி இருந்தாராம்.. ஆனால் ரசிகர் மன்றத்தில் இருந்தவருக்கெல்லாம் பதவி வழங்கப்பட்டு விட்டதாம்.. இந்த ஆதங்கம்தான் மாஜியின் பாசக் கண்ணீர் என்ற பேச்சு கோயம்பேடு வட்டாரத்தில் உலாவுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்டு டார்ச்சர் கொடுத்த செல்லமான தந்தைக்கும், வாரிசுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உடனே அதிர்ச்சியை கொடுத்துவிட்டாராமே சேலத்துக்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் காலியாக இருந்த இரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் ஒன்றை எப்படியாவது தனது வாரிசுக்கு பெற்று விட வேண்டுமென்பதில் தூங்கா நகரத்தை சேர்ந்த செல்லமானவர் ரொம்பவே மெனக்ெகட்டு களமிறங்கி தீவிரமாக வேலை பார்த்தாராம்…
அவரது வாரிசோ இன்னும் ஒருபடி மேலே போய், ஐடி விங் பொறுப்பில் இருக்கும் தான், கட்சியின் வளர்ச்சியை சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டு வருவதாகவும், கட்சியில் ஐடி விங்கிற்கு முக்கியத்துவம் ெகாடுக்கும் வகையில் தனக்கு ஒரு சீட்டை கண்டிப்பாக ஒதுக்க வேண்டுமெனவும் சேலத்துக்காரரிடம் நேரடியாகவே கேட்டு இருக்கிறார்.. தந்தை, மகனின் டார்ச்சர்களால் கடுப்பான சேலத்துக்காரர் உடனடியாக காலியான அந்த 2 இடங்களுக்கும் வேட்பாளரை அறிவித்து செல்லமானவருக்கும், அவரது வாரிசுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்து விட்டாராம்.. சேலத்துக்காரரின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத இருவரும் தலைமையின் முடிவால் ரொம்பவே அப்செட்டாகி, சைலண்ட் மோடிற்கு சென்று விட்டார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தனிக்காட்டு ராஜாவாக வலம் வர்றதா காக்கி மேல உயர் அதிகாரிகளுக்கு புகார் போனாலும்கூட எந்த பிரயோஜனமும் இல்லையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம், காட்டுபாடி தாலுகாவுல பொன்னான ஆறு கொண்ட காக்கிகள் நிலையத்துல பெயர்லைய செல்வ செழிப்பாக இருக்குற ஒரு காக்கி பணிபுரிஞ்சு வர்றாரு.. இவரு அந்த சர்க்கிள் காக்கிகள் நிலையத்துல கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேலாக பணிபுரிஞ்சுட்டு வர்றாராம்.. இதனால அங்க இவர் தனிக்காட்டு ராஜாவாக இருக்குறாராம்.. இவர் வெச்சது தான் சட்டமாம்.. புகார் கொடுக்க வர்ற லேடிஸ் இவர் மேல உயர் காக்கிகளுக்கு புகாரே கொடுத்திருக்காங்க.. ஒரு கிராமத்தை சேர்ந்த பெண், தன்னோட கணவர் மேல புகார் கொடுக்க போயிருக்காங்க, அப்போ, பணியில இருந்த தனிக்காட்டு ராஜா அந்த லேடிஸ் அணிந்திருந்த ஆடை குறித்து பேசியிருக்குறதாக சொல்றாங்க.. இதனால் அந்த லேடி புகாரே கொடுக்காம கண்ணீரோட போயி விபரீத முடிவு எடுக்க துணிச்சிட்டாங்களாம்.. அப்புறம் அங்க இருக்குற காக்கிகள் சமாதானம் செஞ்சிருக்காங்க..
இவரு இப்படியெல்லாம் நடந்துக்குறதுக்கு காரணம் 20 வருஷமாக ஒரே இடத்துல பழம் திண்ணு கொட்ட போட்டதுதான் காரணம்னு சொல்றாங்க.. பக்கத்து ஸ்டேட் கல்குவாரி, பட்டறைன்னு தனி வசூல் நடத்துறாராம்.. அதுமட்டுமில்லாம, ஒரு பெண் தனக்கு எதிரான வன்கொடுமை குறித்து புகார் கொடுத்தா நடவடிக்கை எடுக்காம செஞ்சிட்டாராம்.. அந்த பெண் சென்னை உயர் காக்கிக்கு புகார் சொல்லியிருக்காங்க.. ஆனாலும் எந்த நடவடிக்கையும் இதுவரைக்கும் இல்லையாம்.. இனி நடவடிக்கை எதுவும் இருக்குதான்னு பொருத்திருந்துதான் பார்க்கணும்னு காக்கிகளே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில்கூட இலைக்கட்சி மாஜிக்கள் கெத்து காட்ட ஆதரவாளர்களுடன் போனாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்ட இலைக்கட்சி நிர்வாகியின் மகன் ஒருத்தர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தாராம்.. இந்த தகவல் அறிந்ததும் கோஷ்டி மோதலில் தவிக்கும் இலைக்கட்சி மாஜி அமைச்சர்கள் ஆறுதல் சொல்ல அவரது இல்லத்திற்கு சென்றாங்களாம்.. மாஜி அமைச்சர் மணியானவர் ஆதரவாளர்கள் தனியாகவும், பாதி பெயரில் மில்க்கை வைத்திருக்கும் மற்றொரு மாஜியானவரின் ஆதரவாளர்கள் தனியாகவும் சென்று தங்களது கெத்தை காட்டியிருக்காங்க… இதை அங்கிருந்தவங்க பார்த்து கட்சி நிகழ்ச்சியில் தான் கோஷ்டி பூசல் என பார்த்தா, துக்க வீட்டில்கூட அணி பாகுபாடு காட்டி கெத்து காட்டணுமான்னு ரொம்பவே வேதனைப்பட்டாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.