‘‘புதுச்சேரி ‘கிருஷ்ணன்’ மறுபடி யும் கட்சி தாவ தயாராகிட்டு இருக்காராமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியின் முன்னாள் எம்பியான கிருஷ்ணணின் மறுபெயர் கொண்டவர் சமீபத்தில், மணிப்பூர் கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்து, தாமரை அரசை கடுமையாக விமர்சித்தார். அதோடு தாமரையில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாகவும் அறிவித்தாராம். நீண்ட காலத்துக்கு அமைதியாக இருப்பதும், தேர்தல் வரும் போதெல்லாம் ஸ்டண்ட் அடிப்பதையும் வாடிக்கையாக கொண்டவர்தான் இந்த அரசியல் கிருஷ்ணன். 40 ஆண்டுகால தனது அரசியல் வாழ்வில் கதர், கதரின் குழந்தையான வாசனை மிக்க தலைவரின் பெயர் கொண்ட கட்சி, இலை என்று ஒரு சுற்று முடித்துவிட்டார். இப்போது கமுக்கமாக தாமரையில் இருந்து வந்தார். அதோடு அரசியல் கட்சிகள் மட்டுமல்ல எனக்கு பின்னால் என் சொந்த பலமும் எனக்கிருக்கு என்று புது கட்சிகளை ஆரம்பித்து, அதற்கு மூடுவிழாவும் நடத்திவிட்டார்.
ஒரு கட்டத்தில் தேர்தல் பாதை அவரை கலகலக்க வைத்தது. கடந்த காலங்களில் இளமை துள்ளலோடு தன் வசீகரிக்கும் பேச்சாலும், எங்கு போனாலும் தனக்கென ஆதரவாளர்கள் கூட்டத்தை எப்போதும் வைத்திருந்தவர். இன்று ஒரு மணி நேரம் நின்று பேச முடியலையாம். மனிதனாக இருந்தால் ஆசைகளை ஒரு சிலரால் அடக்க முடியாது கிருஷ்ணன் என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்திருப்பவரும் அதே நிலையில் உள்ளாராம். இதற்காக தற்போது மெல்ல கதர் பக்கம் தாவ முக்கிய நபரிடம் கண் அசைத்துள்ளாராம்.
இதற்கு முன்னோட்டமாக கதர் கட்சியின் மாஜி தேசிய தலைவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்புக்கு வரவேற்று அறிக்கை கொடுத்து அதிரடித்தாராம். வயதை காரணம் காட்டி அவரை தாமரையில் இருந்து போகட்டும் என்ற அக்கட்சியினர் கண்டுகொள்ளாமல் இருக்காங்க. ஆனால் கதர் கட்சிக்குள் இருக்கும் பழம் பெரும் நிர்வாகிகள், கடந்த கால ‘கிருஷ்ணனை’ நினைத்து ‘கேட்’ போட நினைக்கிறாங்க. தன் ஆளுமைக்காக அவர் அடிக்கடி போடும் அவதாரம்னு குற்றம்சாட்டுகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘படி காசுக்காக கையெழுத்து போட்டுவிட்டு, பிரச்னையை கிளப்பிய கட்சி எது…’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா.
‘‘தென்கோடி மாவட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் கலெக்டர் ஆபீசில் நடந்தது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கதர் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி இருக்காங்க. இங்க மாவட்ட ஊராட்சி தலைவராக இருப்பவர் இலை கட்சியை சேர்ந்தவர். துணைத்தலைவராக இருப்பவர் தாமரை கட்சியை சேர்ந்தவர். திடீரென கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தினால் அதிர்ச்சி அடைந்த தலைவர், உங்கள் தீர்மானத்தினால் எங்கள் கூட்டணியில் பிரச்னை வந்துரும் என்று ஏதேேதா காரணத்தை கூறி தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்று மறுத்து விட்டாராம். இதை கண்டித்து கதர் கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தினாங்க. இதை கேலி பேசும் வகையில், வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு தான் அவுங்க வெளிநடப்பு செய்திருக்காங்க. அப்போது தான் கூட்டத்தில் பங்கேற்றதற்கான படி காசு கிடைக்கும் என்று இலை கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கிண்டலாக பேச, இந்த விவகாரம் கதர் கட்சி கவுன்சிலர்களுக்கு தெரியவந்திருக்கு. எங்களை எப்படி கிண்டலாக பேசலாம் என்று போர்க்கொடி தூக்கி இருக்காங்க. அடுத்த கூட்டத்தில் இலை கட்சி கவுன்சிலருக்கு நாங்க பதிலடி கொடுப்போம் என்று இப்போதே தயாராகி வருகிறார்களாம். அடுத்த கூட்டத்தில் மணிப்பூர் பிரச்னையை கண்டித்து, தீர்மானம் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்று இப்போதே கதர் கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்துட்டாங்களாம். இதனால் அடுத்த கூட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று பேசிக்கிறாங்க. மக்கள் பிரச்னையை கூட பேச மறுக்கும் இலை கட்சியினரை என்ன சொல்வது என்று தலையில் அடித்து கொண்டபடி கதர் கட்சியினர் சென்றுவிட்டாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சியின் ‘தலைவர் மவுன்டன்’, இலைக்கட்சி தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு பதிலடி கொடுக்க யார் காத்திருக்கா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ இலைகட்சியின் மம்மியை அவமானப்படுத்திவிட்டு நடைபயணத்தை தொடங்கியுள்ள ‘மவுன்டன்’ கூட்டணியே வேண்டாமுன்னு எழுபது சதவீத இலைக்கட்சி தொண்டர்கள் விரும்புறாங்களாம். ஆனால், இலையின் மாஜிக்கள் வழக்குகளிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள கூட்டணியில ஒட்டிக்கிட்டு இருக்காங்க. அதே நேரத்தில் இலைக்கட்சியின் சேலத்துக்காரரை தனது காலில் விழ வைக்க வேண்டும் என்பதில் ‘தலைவர் மவுன்டன்’ தீவிரமா இருக்காராம். இதற்காக அக்கட்சியின் தலைவர்களை சீண்டிப்பார்க்கிறாராம். இவ்வாறு தொடர்ந்து இழிவு படுத்திக்கிட்டே இருந்தால், ரோஷம் வந்து கூட்டணியில இருந்து வெளியே போவாங்க, நாம தனி ராஜ்யம் செய்யலாமுன்னு அவர் நினைக்கிறாராம்.
ஆனால் டெல்லி தலைமையோ இலைக்கட்சி கூட்டணியை விரும்புதாம். ஏற்கனவே ‘தலைவர் மவுன்டனை’ பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்ற கோரிக்கையில் சேலத்துக்காரர் தீவிரமா இருந்தாராம். அவரை சமாதானப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இனி கூட்டணி குறித்து பேசமாட்டார் என வாய்பூட்டு போட்டாங்க.
ஆனால், இப்போது தன்னை துதி பாடவேண்டும் என்பதற்காக சம்பளம் கொடுத்து ஆட்களை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறாராம். இதே நிலை நீடித்தால் கூட்டணியில் இருந்து வெளியே வருவதைத் தவிர வேறு வழியில்லை. இதுபோன்று ஆட்டம்போட்டவர்கள் இருந்த இடம் தெரியாமல் போன வரலாறு அவருக்கு தெரியாது. போக போகத்தான் எங்களது சேலம் தலைவர் யார் என்பது தெரியும் என சேலத்துக்காரரின் நெருங்கியவர்கள் பேசிக்கிறாங்க. அதாவது நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது மாநில இன்சார்ஜா வேறு மாநிலத்துக்கு நியமிக்கப்போறாங்க. அவருக்கு பதிலாக பிரச்னை இல்லாத சவுத் இந்தியாவில் உள்ள தாமரையின் பவுர்புல் தலைவர் ஒருவரை ேபாடுவாங்க என்று சேலம்காரரரின் அடிப்பொடிகள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.