சென்னை: சட்டசபை தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி என்பதை என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக தெரிவித்து விட்டார் என்று எல்.முருகன் கூறியுள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: அதிமுக தலைமையில் கூட்டணியா அல்லது பாஜக தலைமையில் கூட்டணியா என்பது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக தெரிவித்துவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வர இருக்கிறது.
திமுக ஒருமுறை கடவுள் இல்லை என்பார்கள். மறுமுறை கடவுள் இருக்கிறார் என்பார்கள். அவர்களுக்கு தேவை என்றால் கோவில் சென்று ஆன்மீகம் உள்ளது என தெரிவிப்பார்கள். மத்திய உள்துறை அமைச்சர் குறித்து ஆ.ராசா அவதூறாக பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது. பாமக விவகாரம் தொடர்பாக நான் கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்காது. தந்தை மகனுக்கு இடையே உள்ள பிரச்சனை.
ஊடக சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றது போது பொய் செய்திகள் அதிகமாக பரவின. 8 ஆயிரம் எக்ஸ் வலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டன. நிறைய பேருக்கு வார்னிங் கொடுக்கப்பட்டது. அப்போது 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். தேசத்துக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.