வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். சிறுவயது முதலே பார்வைத்திறன் இழந்த மாற்றுத்திறனாளியான ஜெயக்குமார் பிரெய்லி முறையில் கல்வி கற்று தற்போது அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் மொழிப்பற்று, இலக்கியத்தின் மீதான ஆர்வம் காரணமாகத் தனது பெயரை வெற்றிக்குமார் என்று மாற்றிக்கொண்டார். பார்வைத்திறன் இழந்த நிலையிலும் தான் விரும்பி ஏற்ற ஆசிரியர் பணியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். சான்றோர்கள், தேசத் தலைவர்கள் போன்று வேடமணிந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தி புதிய நடைமுறையைச் செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் மாணவர்களும் ஆர்வத்துடன் தமிழ் மொழிப் பாடத்தை கற்கின்றனர். தனது கல்வி கற்பிக்கும் புதிய நடைமுறை குறித்து தமிழ் ஆசிரியர் வெற்றிக்குமார் தினகரன் கல்வி மலருக்காக நம்மிடம் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘‘பள்ளியில் படிக்கும் காலம் முதலே எனக்குத் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று ஏற்பட்டது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் பட்டிமன்றங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றை ரசித்துக் கேட்பேன். அந்த ஆர்வம்தான் பள்ளிகள் மற்றும் தமிழ் இலக்கிய அமைப்புகள் சார்பில் நடைபெறும் பட்டிமன்றம், கவியரங்கம், சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களைப் பெறவைத்தது. தமிழ் மொழியால் எனக்குக் கிடைத்த பரிசுகளும், பாராட்டுகளும் கல்வியின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தமிழ்மொழிக்குச் சேவையாற்ற வேண்டும். மாணவர்களுக்கு நல்ல முறையில் கல்வி கற்பிக்க வேண்டும், என்று முடிவு செய்து ஆசிரியர் பணியில் சேர என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். அதற்கேற்ப, சேர்க்காடு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்தேன். 1200க்கு 952 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி அடைந்தேன். சென்னை லயோலா கல்லூரியில் 2004ம் ஆண்டு பி.ஏ. தமிழில் தங்கப்பதக்கத்துடன் இளங்கலைப் பட்டம் பெற்றேன். 2005ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் பி.எட் முடித்தேன். தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொண்டு கடந்த 2006ம் ஆண்டு தேர்ச்சி பெற்று தற்போதைய ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவிற்கு உட்பட்ட வளர்புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். கல்வி பயிற்றுவிக்கும் உன்னதமான பணியில் தீவிரமாக ஈடுபட்டேன்.’’ என்று தளராத முயற்சியுடன் ஆசிரியர்பணியில் சேர்ந்ததை வெற்றிக்குமார் பெருமிதத்தோடு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,‘‘மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிப்பதோடு அன்றாடம் நடைபெறும் உலக நிகழ்வுகள் குறித்த புதுப்புது தகவல்களையும் தெரிவித்தேன். இந்த நடைமுறை மாணவர்களிடையே கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிப்பதை உணர்ந்தேன். இதனிடையே, 2009ம் ஆண்டு வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழ் ஆசிரியராக பணியிட மாற்றத்தில் சென்றேன்.’’ என்று கூறும் வெற்றிக்குமார் அங்கு 8, 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்து, அங்குள்ள மாணவர்களுக்குப் புதிய முறையில் கல்வி கற்பிக்கத் தொடங்கியுள்ளார்.
‘‘தமிழ்ப் பாடங்களில் வ.உ.சிதம்பரனார், மகாத்மா காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தேசத் தலைவர்கள், திருவள்ளுவர், பாரதியார், சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் போன்று வேடங்கள் அணிந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துவேன். திருவள்ளுவரைப் போல வேடம் அணிந்து வகுப்பறைக்குச் சென்று ஓலைச்சுவடியில் எழுதுவதைப் போல் ஒவ்வொரு திருக்குறளையும் எடுத்துக்கூறி பொருளை விளக்கிக் கூறுவேன். அதனைக் கேட்கும் மாணவர்களும் திருக்குறளை எளிமையாக பொருளுணர்ந்து கற்றுக்கொள்கின்றனர். மறுநாள் வகுப்பறைக்கு வந்ததும் முன்தினம் நடத்தியப் பாடம் குறித்துக் கேள்விகள் கேட்பேன். அப்போது, மாணவர்கள் ஆர்வத்துடன் கேள்விக்கான பதில்களைக் கூறுவார்கள். இதன்மூலமாக மாணவர்கள் எளிதாகப் பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்’’ என்று கூறும் வெற்றிக்குமாரின் பையில் சாக்லேட்கள், பரிசுப்பொருட்கள் எப்போதும் வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
‘‘கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை உருவாக்க வேண்டுமென்றால் முதலில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஊக்கம் தான் வெற்றிக்கான முதல் படிக்கட்டு. மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டால் அவர்கள் தானாகவே ஆர்வத்துடன் கல்வி கற்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த வகையில், பாடம் நடத்திய மறுநாள் வகுப்பறைக்குச் சென்று முன்தினம் நடத்திய பாடம் தொடர்பாகக் கேள்வி கேட்பேன். உடனுக்குடன் சரியான பதில் தெரிவிக்கும் மாணவர்களை அழைத்து பாராட்டி சாக்லேட் பரிசளிப்பேன். அதேபோல், வகுப்புத் தேர்வு வைத்து அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பேனா, நோட்டுகள், கலர் ஸ்கெட்ச், பெயிண்டிங் பாக்ஸ், ஜாமெண்ட்ரி பாக்ஸ் ஆகியவற்றை பரிசளிப்பேன். அதே நேரத்தில், மதிப்பெண் குறைந்த மாணவர்களையும் அழைத்து பரிசளித்து, அடுத்த தேர்வில் நல்ல முறையில் மதிப்பெண் பெற வேண்டும் என ஊக்கப்படுத்துவேன்’’ என்கிறார் வெற்றிக்குமார். இவர் ஒவ்வொரு ஆண்டும் நேரு பிறந்தநாளில் அவரைப்போன்று வேடம் அணிந்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்வித்து வருவதாகவும், ஆண்டுதோறும் இவர் பாடம் எடுக்கும் வகுப்பு மாணவர்கள் தமிழ்பாடத் தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சி பெறுவதாகவும் தெரிவித்தார்.
ஆசிரியராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு வரும் இவர், அன்புநதி(2004), விடியல் வெளிச்சம்(2018), குரங்கும் குருவியும்(2019), வசந்தம் வரும் வாடாதே(2022), பாடி விளையாடு பாப்பா(2023) உட்பட 6 நூல்களை எழுதியுள்ளார். இதில், 2018ம் ஆண்டு எழுதிய விடியல் வெளிச்சம் எனும் நூலிற்கு தமிழ்நாடு அரசின் நூலக ஆணை பெறப்பட்டுள்ளது. அதேபோல், இலக்கியச் சோலை, இலக்கியம் பேசுகிறது, நிலா, ஏழைதாசன், புகழ்ச்செல்வி போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட விருதுகள், 15க்கும் மேற்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்று வெற்றிக்குமார் அசத்திவருகிறார்.மாணவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உழைக்கும் தனது ஆர்வத்துக்கு உறுதுணையாக இருப்பவர்கள் குறித்து வெற்றிக்குமார் கூறுகையில்,‘‘ சிறுவயதில் தந்தை பாலசுப்பிரமணி, தாய் கௌரி, அக்கா அமுதா ஆகியோர் நான் கல்வி கற்கப் பெரிதும் உதவியாக இருந்தனர். தற்போது, எனது மனைவி நாகேஸ்வரி எனக்கு உறுதுணையாக உள்ளார். தமிழ் இலக்கிய அமைப்புகள் சார்பில் நடைபெறும் பட்டிமன்றம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று வருகிறார்’’ என்றார்.
சிலம்பம், யோகா போன்ற கலைகளில் சிறந்து விளங்கும் பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களைத் தனது திருவள்ளுவர் இல்லத்திற்கு வரவழைத்து அவர்களுக்குப் பரிசுகள் வழங்கி கவுரவித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்் வெற்றிக்குமார். மேலும், அன்புநதி என்கிற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலமாகவும் கல்வி கற்பதன் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, தேசத் தலைவர்கள், சான்றோர்கள் போன்ற வேடங்கள் அணிந்தும் மாணவர்களுக்கு தமிழ்ப் பாடங்கள் நடத்திவருகிறார்.கல்விப் பணியில் சிறந்த சேவையாற்றி வரும் தமிழ் ஆசிரியர் வெற்றிக்குமாரை ஊக்கப்படுத்தும் விதமாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் 2024ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பாராட்டியதை தனது உழைப்பிற்குக் கிடைத்த ஆங்கீகாரம் என்கிறார் ஆசிரியர் வெற்றிக்குமார். கல்வியால் மட்டுமே சிறந்த மனித சமுதாயத்தை உருவாக்க முடியும். அழியாத செல்வம் கல்வி மட்டும்தான். எனவே, மாற்றுத்திறனாளியான தமிழ் ஆசிரியர் வெற்றிக்குமாரை முன்னுதாரணமாகக் கொண்டு ஒவ்வொரு மாணவரும் தடைகளைத் தகர்த்தெறிந்து சிறந்த முறையில் கல்வி கற்று தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும், என்றவர் மரம் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் பள்ளி விடுமுறை நாட்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். ஆசிரியர் பணியோடு நின்றுவிடாமல், சமுதாய நலன் சார்ந்த சிந்தனைகளிலும் தீவிரமாக இயங்கத் துடிக்கும் மாற்றுத்திறனாளி தமிழ் ஆசிரியர் வெற்றிக்குமாரின் முயற்சிகளுக்கு நாமும் வாழ்த்துகள் கூறி வரவேற்போம்.
இர.மு.அருண்பிரசாத்