மும்பை:மும்பையில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் இலட்சினை வெளியிடப்படும் என்று தெரிகிறது. 26 எதிர்க்கட்சிகள் இணைந்து துவங்கியுள்ள இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், அடுத்த கூட்டம் பெங்களூருவிலும் நடந்தது. இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் 3வது கூட்டம் மும்பையில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில், 26 கட்சிகளை சேர்ந்த சுமார் 80 தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சில கட்சிகளின் தலைவர்களும் இந்த கூட்டத்துக்கு வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மும்பை வரும் தலைவர்களுக்கு சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே 31ம் தேதி இரவு கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் விருந்து அளிக்கிறார். மறுநாள், அந்த ஓட்டலிலேயே தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள். காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மும்பை பிரிவுகளால் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்படும். இந்த கூட்டத்தின் முடிவில் இந்தியக் கூட்டணியின் இலட்சினை(லோகோ) செப். 1ம் தேதி வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து மும்பையில் நேற்று ஆலோசனை நடந்தது. இதில், சிவசேனா (உத்தவ்) தலைவர்கள் ஆதித்யா தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத், காங்கிரஸ் தலைவர்கள் வர்ஷா கெய்க்வாட், மிலிந்த் தியோரா , தேசியவாத காங்கிரஸ் நிர்வாகி நரேந்திர வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.