‘‘இலை கட்சியை கைப்பற்ற முடியாததால் தேனிக்காரரின் ஆதரவாளர்கள் சேலத்துக்காரர் அணிக்கே மீண்டும் தஞ்சம் அடைய முடிவு பண்ணிட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் நகராட்சி தலைவர் இருக்கிறாரு.. தெற்கு மாவட்டத்தில் முன்னாள் குக்கர் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவும் இருக்காங்க… சேலத்துக்காரர் அணியில் இருந்து தேனிக்காரர் அணிக்கு சென்றவர்களுக்கு ஒன்றிய செயலாளர், வட்ட செயலாளர், நகர செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாம்.. தேனிக்காரர், தாமரை ஆதரவுடன் இலை கட்சியை மீட்டு, அதற்கு தலைமை ஏற்பார் என்று நிர்வாகிகள், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டாங்களாம்.. இதில் ஒரு சில நிர்வாகிகள் சொந்த பணத்தை செலவு செய்தார்களாம்…. ஆனால் இதுவரை தேனிக்காரர், இலை கட்சியை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.. தேனிக்காரர் பேச்சை கேட்டு தற்போது நட்டாத்தில் உள்ளோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதனால் நிர்வாகிகள், இரண்டு மாவட்ட செயலாளர்களை அணுகி உங்கள் பேச்சை நம்பி வந்தோம்… ஆனால் இதுவரையிலும் ஒண்ணும் நடக்கல…. இனியும் எதுவும் நடக்க போறதில்ல… நீங்களும் எதுவும் செய்வதில்லை.. இலை கட்சியில் உறுப்பினர் அட்டையெல்லாம் கொடுக்குறாங்க.. இனிமேல் எங்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்றால் சேலத்துக்காரர் அணிக்கு மீண்டும் சென்று விடுவோம்னு ஆதங்கத்தோடு பேசி சென்றாங்களாம்.. இந்த டாப்பிக் தான் மன்னர் மாவட்டத்தில் அரசல் புரசலாக ஓடிக்கிட்டு இருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போலி பில் குற்றச்சாட்டுகளால் தனி அதிகாரி நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் ஆளுங்கட்சி எம்எல்ஏவான 6 முகம் கொண்ட நபர், சமீபத்தில் முதன்மை அமைச்சரான புல்லட்சாமிக்கு நெருக்கமான தனி அதிகாரியிடம், நிவாரண காசோலை விவகாரம் தொடர்பாக நேரடியாக அவரது அலுவலகத்திற்கு சென்று மோதலில் ஈடுபட்டாராம்.. இது புல்லட்சாமிக்கு கொடுத்த மறைமுக வார்னிங்காக அரசியல் வட்டாரத்தில் தகவல் அரசல் புரசலாக உலாவுகிறது.. ஏற்கனவே பல கோடி மதிப்பிலான சொகுசு கார் விவகாரம் மேற்கண்ட தனி அதிகாரி மீது விழுந்திருந்த நிலையில் சில போலி பில் மோசடி குற்றச்சாட்டுகளும் தற்போது இவர் மீது புதிதாக எழுந்துள்ளதாம்.. இதை அரசியல் புள்ளிகள் சிலர் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதோடு, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் தேவையென கோஷத்தையும் முன்னெடுத்துள்ளதாம்.. மக்களின் வரிப்பணத்தில் ஒருபைசா கூட வீணாக்கக் கூடாது என்ற கருத்தில் ஆழம் கொண்ட, அரசின் உயர் பொறுப்பை கவனித்த அனுபவத்தை கடந்து, புதிய நிர்வாகியாக அமர்ந்துள்ளவரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.. இதனால் அடுத்த நெருக்கடி வருமா?… என்ற அச்சத்தில் உள்ளாராம் தனி அதிகாரி.. இதுதான் தற்போதைய புதுச்சேரி ஹைலெட்..’’ என்றார் விக்கியானந்தா…
‘‘லீடர் திரும்பும் முன்னாடி இலைக்கட்சி தலைவரை தங்களது அரவணைப்பில் கொண்டு வந்துவிடணும்னு தாமரை நிர்வாகிங்க சிலர் கங்கணம் கட்டி வேலை செய்யுறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சியின் மவுண்டன் லீடரு வெளிநாட்டுக்கு படிக்க போயிருக்காரு.. அதனால் கட்சியின் மூத்த லீடரு தலைமையில் ஆர்கனைசிங் டீம் போட்டிருக்காங்க என்பது ஊரறிஞ்ச சேதி. இது மவுண்டன் லீடர் மேல் அதிருப்தியில் இருந்தவர்களுக்கு புதிய தெம்பை கொடுத்திருக்காம்.. குறிப்பாக மவுண்டன் லீடரு திரும்பி வருவதற்குள் இலைகட்சி தலைவரை எப்படியாவது தங்களது அரவணைப்பில் கொண்டு வந்துவிட வேண்டும்னு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்யுறாங்களாம்.. இதற்கு அச்சாரம் போடும் வேலைகளை சேலத்துக்காரரின் சொந்த ஊரில் ஆரம்பிச்சிருக்காங்களாம்.. ஆர்கனைசிங் லீடரு அடிக்கடி அந்தப் பக்கம் வந்து போறாராம்.. இப்படி வருபவர் மீடியாக்களை சந்திப்பார் என்று பார்ட்டி நிர்வாகிகள் மெசேஜ் போடுறாங்களாம்.. ஆனால் அதற்கடுத்த சில நிமிடங்களில் மீடியா சந்திப்பு கேன்சல்னு மெசேஜ் வருதாம்.. மீடியா மீட் என்றாலே இலையின் கூட்டணியை பற்றிதான் முதலில் கேள்வி கேட்பாங்க.. அதில் ஏதாவது ஏடாகூடமாக பதில் சொன்னால் கொஞ்சநஞ்சம் இருக்கிற நட்பும் புட்டுக்கும்.. இதன் காரணமாகவே ஆர்கனைசிங் லீடரு, மீடியா மீட்டை தவிர்க்கிறாரு என்கின்றனர் விவரம் அறிந்த தாமரை பார்ட்டிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டெண்டர் முறைகேடு விவகாரத்தில் தங்களை காப்பாற்றக்கோரி தூதுக்கு மேல் தூது பறந்து கொண்டிருக்கிறதா சொல்றாங்களே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு பேர் போன மாவட்டத்தில் மாஜி அமைச்சரின் பெயர் அடங்கிய ஒன்றியத்தில் நடந்த டெண்டர் முறைகேடு விவகாரம் தான் தற்போது மாவட்டம் முழுக்க ஒரே பேச்சாய் உள்ளதாம்.. இப்படிப்பட்ட நிலையில் கோட்டை என முடியும் ஒன்றியத்தில் இலைக்கட்சியின் ஒன்றிய செயலாளர் துணை தலைவராகவும், இவரது அண்ணன் மனைவி தலைவராகவும் உள்ளனராம்.. இங்கும் மாஜி அமைச்சரோட பெயர் அடங்கிய நகரத்தை விடவும் அதிகளவில் முறைகேடு நடந்துள்ளதுனு அவர்கள் தரப்பு கவுன்சிலர்களே பேசத் துவங்கி விட்டார்களாம்.. கடந்த வாரம் நடந்த ஒன்றிய கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஏற்காமல், கடந்த 4 ஆண்டுகால வரவு-செலவு கணக்கை பார்க்க சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென கூறினார்களாம்.. இதன்படி சிறப்பு கூட்டமும் நடக்கவுள்ளதாம்.. இந்த சிறப்பு கூட்டம் நடந்தால் மாஜி அமைச்சரோட பெயர் அடங்கிய நகரத்தில் நடந்த சிக்கல் இங்கும் ஏற்படும் என்பதால், எப்படியாவது தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் உயரதிகாரிகளுக்கு தூது விட்டுக் கொண்டிருக்கிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.