‘‘ரெண்டாவது கட்ட பிரவேசத்திலும் பெரும் வரவேற்பு இல்லாததால் மூடு அவுட் ஆகி நிகழ்ச்சிகளை தவிர்த்துவிட்டாராமே சின்னமம்மி…’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘அரசியல் பிரவேசம் எடுத்துள்ள சின்ன மம்மி தென் மாவட்டங்களில் தனக்கு அமோக ஆதரவு இருக்கும்னு நினைத்தாராம்.. முதற்கட்டமாக அருவிகள் நிறைந்த மாவட்டத்தில் மக்களை சந்தித்தவர், தற்போது 2வது கட்டமாக அல்வா மாவட்டத்தில் சட்டசபை தொகுதி வாரியாக மக்கள் சந்திப்பை நடத்தி வருகிறார். ஆனால் வழக்கம்போல் வரவேற்பின்றி ஏமாற்றமே கிடைத்ததால் அப்செட்டில் இருக்கிறாராம்.. முதல் நாளன்று புறப்பட்டபோதே கனமழை கொட்டியதால், அல்வா சிட்டிக்குள் சின்ன மம்மியை பார்க்க அழைத்து வந்தவர்களும் ஜூட் விட்டுள்ளனர். இதன் காரணமாக ஆதரவாளர்களும், ஓரிருவரை கெஞ்சிக்கூத்தாடி நிற்கச் சொல்லி திக்குமுக்காடி போயிட்டனராம். மருந்துக்கு கூட கூட்டமில்லாததால் மூடு அவுட் ஆன சின்னமம்மி, பில்டப் செய்யப்பட்ட தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியையும் தவிர்த்து விட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மா.செ.க்கள் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதிரடி தீர்மானத்தோடு செயற்குழுவை கூட்டுகிறாராமே இலைக்கட்சி தலைவர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் தொடர் தோல்விக்கு பிறகு மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த இலைக்கட்சி தலைவர் திட்டமிட்டிருந்தார். பல்வேறு நெருக்கடிக்கு பிறகு திடீரென அந்த திட்டத்தை நிறுத்திட்டு, செயற்குழு கூட்டத்தை கூட்டியிருக்காரு… இன்று நடக்கும் கூட்டத்துல, நெத்தியடி தீர்மானத்தை கொண்டு வரப்போறாங்களாம்.. குறிப்பா சின்னமம்மி, தேனிக்காரர், குக்கர்காரர் ஆகியோரால் கட்சிக்கு பாதகம்தான் அதிகமாயிருக்கு… எந்தவித நன்மையுமே அவங்களால கட்சிக்கு இல்லை. எனவே, மூன்று பேரையும் ஒருபோதும் கட்சியில் சேர்க்கவே கூடாது என்பதுதான் முக்கிய தீர்மானமாக இருக்குமாம்… அவங்கள பற்றி யாரும் பேசவே கூடாது என்பதோடு மட்டுமல்லாமல், நிரந்தரமா முற்றுப்புள்ளி வைக்கப்படுமாம்.. பாஜவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணியே கிடையாதுங்கிறது அடுத்த தீர்மானமாக இருக்குமாம்.. அந்த மலராத கட்சியோட மாநில தலைவராக இருக்கும் மாஜி போலீஸ்காரர், தொடர்ந்து இலைக்கட்சியை சீண்டிக்கிட்டே இருக்கறதாலயும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்படுகிறதாம்.. ஆனா, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 3 பேரையும் சேர்க்கணும், மலராத கட்சியோட கூட்டணி வைக்கணுமுன்னு மாஜிக்கள் அணி ஒன்று திரண்டிருக்கு.. அவர்களின் அதிகார பல்லை புடுங்கவும், செயற்குழுவுல இலைக்கட்சி தலைவர் கொறடு ஒண்ணு வச்சிருக்காராம்.. ரெண்டு தொகுதிக்கு ஒரு மா.செயலாளர் பதவி வழங்கும் வகையில், அந்த அதிகாரம் பொதுச்செயலாளருக்கு வழங்கப்படும் என்ற தீர்மானமும் இருக்குமாம்.. இதனால் தனது பலத்தை அதிகரிக்கும் திட்டத்தையும் வச்சியிருக்காராம்.. தலைக்கு மேல் ஒளிவட்டமா இருக்குன்னு? இலைக்கட்சி தலைவரை பார்த்து கேட்கும் மாஜிக்களுக்கு, இது வயித்துல புளியை கரைச்சிருக்காம்.. இருந்தாலும் அடுத்த மூவுக்கு அவங்களும் தயாராகிக்கிட்டிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரியில் ரேஷன் கார்டு மோசடி புகாரால் அதிகாரிங்க தரப்பு கலக்கத்தில் இருக்காங்களாமே..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் ‘ப விட்டமின்’ பெற்றுக் கொண்டு முறைகேடாக ஆயிரக்கணக்கான ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தால் ஆளுங்கட்சியிலேயே அதிருப்தி கோஷ்டி உருவாகி துறை அமைச்சரை மாற்றியே தீரவேண்டுமென எதிர்கோஷங்கள் வலுக்கவே நெருக்கடிக்குள்ளானது முதல்வர் தரப்பு.. தொடர்ச்சியான குடைச்சல் காரணமா டென்ஷன் ஆன புல்லட்சாமி, ஒருவழியாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இருந்த துறையை அதிரடியாக பறித்து நடவடிக்கை எடுத்தார். அதோடு பிரச்னை முடிந்துவிடும்னு புல்லட்சாமி கணக்கு போட்டிருந்த நிலையில், நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துவிட்டது. சட்டசபையில் ரேஷன் கார்டு முறைகேடு பிரச்னையை அவையில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அவ்வப்போது எழுப்பினாங்க… பதவி பறிப்பு அமைச்சருடன் நடந்த காரசார விவாதத்தால் சபையில் அமளியும், கூச்சல் குழப்பம் நிலவியது.. அப்போது இவ்விவகாரத்தில் முழு உண்மை வெளிச்சத்திற்கு வரவேண்டுமெனில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென சுயேச்சைகளும் வலியுறுத்தினாங்க.. ஏற்கனவே மாஜி கவர்னரிடம் இதுபற்றி முறையிட்டிருந்த ஆளுங்கட்சி அதிருப்தி தரப்பு, ஒன்றிய அரசின் பவர்புல் ஆசியுடன் அமர்ந்துள்ள புதிய கவர்னரின் காதுக்கும் விஷயத்தை கொண்டு சென்றுள்ளதாம்.. இதனால் எந்த நேரத்திலும் சிபிஐ விசாரணையில் இறங்கலாம் என்பதால் ஆடிப்போய் இருக்கிறதாம் இத்துறையின் அதிகாரிகள் வட்டாரம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நியாயமாக கேட்டு கிடைக்க வேண்டிய டிரான்ஸ்பர் கிடைக்கலைன்னு புகார் குரல் ஒலிக்குதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல கலெக்டர் ஆபிஸ்ல 2 எழுத்து பெயர் கொண்ட ஒரு அதிகாரி பணிபுரிஞ்சுட்டு வர்றாராம்.. இவரு, வருவாய் கோட்டத்துல பணிபுரியுற வட்ட ஆட்சியரு, துணை வட்ட ஆட்சியர்களுக்கு டிரான்ஸ்பர் போடுறதுல தெரிஞ்சவங்களுக்கு தேவையான இடமாக பார்த்து பட்டியலை தயார் செஞ்சி கொடுத்து, அவங்ககிட்ட வேண்டியதையும் வாங்கிக்கிட்டு டிரான்ஸ்பரும் வாங்கிக்கொடுக்குறாராம்.. இப்படி மாவட்டம் தொடங்குனதுல இருந்து அந்த போஸ்டிங்லயே கெட்டியா பிடிச்சிக்கிட்டு இருக்குறாராம்.. இதனால, எந்த சிபாரிசும் இல்லாம நியமாக கேட்டு கிடைக்க வேண்டிய டிரான்ஸ்பர் எங்களுக்கு கிடைக்கலையேன்னு, அந்த மாவட்டத்துல இருந்து பாதிக்கப்பட்டவங்களோட குரல் புகாராக ஒலிக்குதாம்.. வருவாய், காக்கிகள் துறைன்னு எல்லாத்துலயும் அதிகாரிங்க மாறிட்டாங்க.. ஆனா, இவரு மட்டும் 3 வருஷத்தை கடந்து அங்கேயே இருக்குறாராம்.. அதனாலத்தான் இதுபோல தப்பு நடக்குதுன்னு விஷயம் தெரிஞ்சவங்க சொல்றாங்க.. இதனால, சம்பந்தப்பட்ட அதிகாரிங்க, விசாரிச்சு தப்பு நடந்துச்சான்னு பார்த்து நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரலாகவும் ஒலிக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.